கடலில் வாழும் விநோத ஒட்டுடலி உயிரினம் கொட்டலசுக்கள் பற்றி தெரியுமா?

Barnacles
Barnacleshttps://www.soundingsonline.com

லகின் பல லட்சம் ஆண்டுகள் பழைமையான ஒரு கடல் உயிர் கொட்டலசு (Barnacles). கணுக்காலி வகையைச் சார்ந்த ஒட்டுடலிகளில் இதுவும் ஒன்றாகும். இவை கடல் அலைகள் மிகுந்த பாறை பகுதிகளிலும், படகுகளின் அடியிலும் காணப்படும். அலைகள் வந்து இவற்றை மூழ்கடிக்கும்போது இந்த கொட்டலசுவின் கூம்பு வடிவ உடலின் மேற்கதவு திறந்து அதன் உள்ளிருந்து இறகு போன்ற மென் மயிர்த்தூவல் போன்ற உறுப்பு வெளிவந்து கடல் நீரில் உள்ள உணவுத் துகள்களை எடுத்துச் செல்லும்.

இவற்றில் கிட்டத்தட்ட 1000 வகைகள் உள்ளன. கருவாலிக் கொட்டை போன்ற கொட்டலசுவே பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. நத்தை, சிப்பி போன்றவற்றின் இனம் என்று இவை கருதப்பட்டாலும் உண்மையில் நண்டு, இறால் போன்ற உயிர்களுடன் நெருங்கிய தொடர்புடையது. இவற்றின் லார்வா எனப்படும் நுண்புழு நண்டின் நுண்புழு போலவே காணப்படுகின்றன. கடல் நீரில் மிதந்தபடி திரியும் இந்த நுண்புழு அங்குமிங்கும் அலைந்து கடல் பாறைகள், படகுகள், மிதக்கும் கட்டைகளில் சென்று தலைகீழாக ஒட்டிக் கொள்கின்றன.

பிறகு சுண்ணாம்பு போன்ற ஒன்றை சுரக்கச் செய்து தன்னை சுற்றி தகடு போன்ற கனமான ஒரு கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் மீன் போன்ற மற்ற கடல்வாழ் உயிரினங்களிடமிருந்து தப்பித்துக் கொள்கின்றன. மேலும், கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டாலும் காப்பாற்றப்படுகின்றன.

இவை ஓரிடத்தில் ஒட்டிக்கொண்டால் பின்னர் அதன் வாழ்நாள் முழுவதும் அதே இடத்தில்தான் இருக்கும். இவை மிதக்கும் படகுகள், மரத்துண்டுகள், பாறையிடுக்குகள், கற்கள் மட்டுமல்லாமல் திமிங்கலம், நண்டு, ஆமை, கடல் பாம்புகள் மீது கூட ஒட்டிக்கொண்டு தொகுப்புகளாக உயிர் வாழும்.

இதையும் படியுங்கள்:
பாட்டிகளின் கஜானா சுருக்கு பை பற்றி தெரியுமா?
Barnacles

கொட்டலசு ஆறு மாதங்களில் முழு வளர்ச்சி அடைந்து பத்து ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டவை. கடல் அலைகள் வந்து செல்லும்போது அவை மேல்திறப்பை திறந்து தனமு கால்களால் துழாவி கடலில் உள்ள நுண் சத்துக்களை எடுத்து உணவாக்கிக் கொள்கின்றன. இவை தலைகீழாக நின்று தனது கால்களால் உணவை சேகரித்து உண்கின்றன. மனிதர்களால் உண்ணக்கூடிய ஒரே கொட்டலசு, ‘வாத்து கொட்டலசு’ என்பதுதான்.

தோணி அல்லது கப்பலடியில் படரும் கொட்டலசுகள் நாளடைவில் கப்பல் அல்லது தோணியின் பாரத்தை அதிகமாக்கி அவற்றின் வேகத்தை கணிசமாகக் குறைத்து விடும். அதனால் கப்பல்கள், தோணிகள் கரையேற்றப்பட்டவுடன் அவற்றில் படர்ந்திருக்கும் கொட்டலசுகள் அகற்றப்படுவது வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com