
தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள், கார்த்திகைப்பூ (Gloriosa superba) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் இலங்கை தமிழர்கள் கார்த்திகைப்பூ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
அந்தக் காலத்தில் தமிழ் மண்ணை சேர்ந்த மன்னர்கள் போருக்கு செல்லும் போது போரில் வெற்றி பெற இந்த பூவை சூடி சென்றுள்ளனர். சிலப்பதிகாரத்தில் இந்தப் பூவின் இதழ்களை பெண்களின் அழகிய விரல்களோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருப்பார்கள்.
இந்தப் பூவை உற்றுப்பார்த்தால் கண்வலி வரும் என்று சிலர் சொல்வதுண்டு. அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள். அதுமட்டுமின்றி இக்கிழங்கானது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இந்த செங்காந்தள் மலர் பல்வேறு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணமிக்க பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்த செடி மணல் கலந்த களிமண்ணில் நன்றாக வளரும்.
இந்த பூக்கள் வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச் மாதத்திலும் மலர்கின்றன.
அத்துடன் இந்த மலர் ஏழு நாட்கள் வரை வாடாமல் இருக்கும் தன்மை கொண்டது. மலர்களின் இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், இறுதியாக கருஞ்சிவப்பு நிறமாக மாறும்.
பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.
இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்து பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும்.
இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
தீக்கொழுந்து விட்டு எரிவது போல் காணப்படும் செங்காந்தள் பூவை, ‘அக்னிசலம்' என்றும், கிழங்கு கலப்பையை போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால் அதை ‘கலப்பை' என்றும், ‘இலாங் கிலி' என்றும், இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால் ‘தலைசுருளி' என்றும், பற்றி எரிவது போல் தோன்றுவதால் 'பற்றி' என்றும், வளைந்து பற்றுவதால் 'கோடை' என்றும், மாரிக் காலத்தில் முதலில் வனப்பை தோற்றுவிப்பதால் 'தோன்றி' என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் வேர்த்தண்டுக்கிழங்குகள் ஒரு டானிக்காகவும், பாம்பு கடி மற்றும் தேள் கொட்டுதல்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சரும நோய்கள், பெருங்குடல், நாள்பட்ட புண்கள், மூல நோய் மற்றும் கோனோரியாவுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இலைகளை பேஸ்ட் வடிவில் நெற்றி மற்றும் கழுத்தில் தடவும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இலைச் சாறு பேன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.