செங்காந்தள் மலரின் சிறப்புமிகு பெருமைகள்!

செங்காந்தள் மலர்
செங்காந்தள் மலர்

கார்த்திகை மழை கண்டு கண் விழிக்கும் பெருமைமிக்கது செங்காந்தள் மலர். இது ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் உள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மழைக் காலத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கும் கார்த்திகை பூ செங்காந்தள். இம்மலர் குறித்து தமிழ் இலக்கியங்கள் சிறப்பாகப் பேசுகின்றன.

தமிழகத்தின் மாநில மலராகவும், தமிழ் கடவுள் முருகபெருமான் பிறந்த மாதத்தில் இந்த மலர் பூப்பதனால் முருகக் கடவுளுக்குப் பிடித்த மலர் என்ற சிறப்பினையும் இது பெறுகிறது. தமிழ் நிலத்தையும், தமிழர்தம் வீரத்தையும் குறியீடாகக் கொள்ளப்படுகின்ற கார்த்திகை பூக்களை போருக்குச் செல்லும்போது பண்டைய தமிழ் மன்னர்கள் மாலையாக அணிந்து கொண்டார்கள் என்கிறது சங்க நூல்கள். சிலப்பதிகாரத்தில் இந்தப் பூவின் இதழ்களை பெண்களின் அழகிய விரல்களோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருப்பார்கள்.

தீச்சுடர் போல் காட்சி அளிக்கும் செங்காந்தள் மலர் செடியின் வேர் பகுதியை கண் வலி கிழங்கு, கலப்பை, வெண்தோன்றி, கார்த்திகை கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர் செடியின் அனைத்து பாகங்களிலும் ‘கோல்ச்சிசின்' என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் வேர் நச்சுத்தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம் மேல் பட்டால் சருமத்தில் அரிப்பு உண்டாகும். இந்தக் கிழங்கில் உள்ள ‘கோல்ச்சிசினும்', 'சூப்பர்பைனும்' மருத்துவக் கூறுகளாகும்.

இந்தச் செடியின் கிழங்கில் இருந்து புதிய கொடிகள் கிளை விட்டுப் படரும். இலைகளின் நுனி நீண்டும், சுருட்டும் பற்று கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றை பற்றிப் பிடித்து வளரக்கூடியது. இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடனும், பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம் மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் வெண்காந்தள், செங்காந்தள் என்று இரு வேறு மலர்களாக வர்ணிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
Fridge Compressor வெடிப்பதற்கான காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்! 
செங்காந்தள் மலர்

தீக்கொழுந்து விட்டு எரிவது போல் காணப்படும் செங்காந்தள் பூவை, ‘அக்னிசலம்' என்றும், கிழங்கு கலப்பையை போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால் அதை ‘கலப்பை' என்றும், ‘இலாங் கிலி' என்றும், இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால் ‘தலைசுருளி' என்றும், பற்றி எரிவது போல் தோன்றுவதால் 'பற்றி' என்றும், வளைந்து பற்றுவதால் 'கோடை' என்றும், மாரிக் காலத்தில் முதலில் வனப்பை தோற்றுவிப்பதால் 'தோன்றி' என்றும் அழைக்கப்படுகிறது.

செங்காந்தள் மலரில் தேன் அதிகமாகக் காணப்படுவதால் எப்போதும் வண்டுகளும், தேனீக்களும் இதை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இந்த மலர் செடியில் இருந்து மொட்டு மலர்ந்து 7 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப் பார்த்தால் கண் வலி வரும். அதனால் இதை, ‘கண்வலி பூ' என்று அழைக்கிறார்கள். இது பாம்பு கடி, தேள் கடி, அரணை கடி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன், குப்பை மேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என்று சாப்பிட்டு வந்தால் விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமை கொண்ட செங்காந்தள் மலர் புற்று நோய்க்கு நல்லதொரு மருந்தாகும். புற்றுநோய் பரவாமல் தடுக்கும் கோல்ச்சிசின் செங்காந்தளின் விதை, கிழங்கில் அதிகமாக உள்ளது. கார்த்திகை மாதத்தில் செங்காந்தளை காண நேர்ந்தால், ‘இது எங்கள் மலரென’ அனைவரின் நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com