
நாய், பூனை, பறவை போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்த காலம் மாறி தற்போது க்யூட்டான விலங்குகள் எதுவாக இருந்தாலும் மக்கள் அவற்றை உடனே செல்லப்பிராணிகளாக ஆக்கி விட ஆசைப்படுகிறார்கள். அந்த வரிசையில் சமீப காலமாக பிரபலமாக இருப்பது தான் ஆக்ஸிலாட்ல் என்னும் மீன் ஆகும்.
ஆக்ஸிலாட்ல் என்பது பார்ப்பதற்கு மீனை போன்ற தோற்றம் கொண்ட ஒரு நீர்வாழ் உயிரினமாகும். இதன் முகம் பார்ப்பதற்கு பல்லி போன்று இருக்கும். மெக்ஸிக்கோ நாட்டில் உள்ள ஏரிகளில் இது அதிகமாக இருக்கிறது. சின்ன மீன்கள், வண்டுகள், பூச்சிக்கள் போன்ற உயிரினங்களை சாப்பிட்டு இது வாழ்கிறது. இதன் ஆயுள் 10 முதல் 15 ஆண்டுகளாகும்.
இருப்பினும் இது தற்போது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸிலாட்லை சிலர் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள். இந்த உயிரினத்தை சரியான முறையில் பாதுகாப்பான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இறந்துவிடும்.
இது இருக்கும் தண்ணீரின் வெப்பநிலை 14 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்க வேண்டும். இது இருக்க குறைந்தபட்சம் 20 முதல் 40 லிட்டர் நீர் உடைய தொட்டி தேவை. வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
இந்த ஆக்ஸிலாட்ல் மீன் கை, கால்கள் வெட்டுப்பட்டு விட்டால், அது திரும்பவும் வளரக்கூடிய தன்மையைக் கொண்டது என்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்துகிறது. தலையில் காயம் ஏற்பட்டால் எந்த வடுவும் இல்லாமல் குணமடையும். மேலும் மூளை, நுரையீரல், இதயம், முதுகுத்தண்டு போன்ற பாகங்களைக்கூட மீண்டும் இதனால் உருவாக்க முடியும்.
இந்த ஆக்ஸிலாட்ல் மீன் இத்தகைய அதிசய தன்மையைக் கொண்டிருப்பதால், இது மனித உறுப்புகள் மீண்டும் வளர்வதற்கு உதவக்கூடுமா? என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்த மீனில் பல்வேறு வகைகள் இருந்தாலும் பிங்க் நிறத்தில் கருப்பு கண்களை கொண்ட மீன் மிகவும் பிரபலமாகும். இது பெரிய வாயை கொண்டு பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருப்பதால் இதை செல்லப்பிராணியாக வளர்க்க பலர் விரும்புகிறார்கள். இதற்கு இருக்கும் கால்களை வைத்து அழகாக தண்ணீருக்குள் நடக்கும். எனவே, இதை நடக்கும் மீன் என்றும் அழைப்பார்கள்.