முதுமையை நெருங்க விடாத சீமேநே பழங்குடி மக்களைப் பற்றி தெரியுமா?

Tsimanes Peoples
Tsimanes Peopleshttps://www.bbc.com
Published on

மேசான் மழைக்காடுகளின் உள்பகுதிகளில் சீமேநே (Tsimanes) என்னும் நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 16,000 பேர் வாழ்கின்றார்கள். சீமேநே பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. எளிதில் மூப்படையாத இந்த பழங்குடி மக்கள் வேட்டையாடுதல், உணவு தேடுதல் மற்றும் விவசாயம் என ஒரு முழுமையான வாழ்க்கை முறையை வாழ்கின்றார்கள். இவர்களின் மூளை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் வாழ்பவர்களை விட மெதுவாக மூப்படைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சீமேநே பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை: இவர்கள் மானிக்கி நதிக்கரையில் வாழ்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் இவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. இவர்கள் உண்ணும் கலோரிகளில் 14 சதவிகிதம் மட்டுமே கொழுப்பிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பகல் நேரத்தில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான நேரத்தையே அதிக உடல் உழைப்பு தேவைப்படாத வேலைகளில் செலவிடுகிறார்கள். வேட்டையாடுதல், பயிர் செய்தல், கூரைகளை வேய்தல் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள் இந்த பழங்குடியின மக்கள். காடுகளின் உள்பகுதிகளில் வளரும் தாவரமான ஜடாட்டாவிலிருந்து மேற்கூரைகளை வேய்வதில் சீமேநே பெண்கள் புகழ் பெற்றவர்கள். இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்க 3 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று ஜடாட்டா கிளைகளை முதுகில் சுமந்து வருகின்றனர்.

இவர்கள் வேட்டையாடும் பறவைகள், குரங்குகள், மீன்கள் போன்ற விலங்குகளிலிருந்து இவர்களுக்குத் தேவையான புரதங்கள் கிடைக்கின்றன. பாரம்பரிய முறையில் சமையல் செய்யும் இவர்கள் உணவை பொரிப்பது கிடையாது. சீமேநே பழங்குடி முதியோர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயப் பிரச்னைகள் போன்ற முதுமையின் பொதுவான நோய்களின் அறிகுறிகள் தென்படவில்லை என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு தெரிவிக்கின்றது.

இந்தப் பழங்குடியினர் ஒரு நாளைக்கு சராசரியாக 18 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கிறார்கள். சீமேநே பழங்குடி மக்கள் யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூட் அவுட்டை துரத்துமா? எப்படி?
Tsimanes Peoples

மாறிவரும் வாழ்க்கை முறை: தற்போது இந்த சமூகத்தின் வாழ்க்கை முறையும் சிறிது சிறிதாக மாறி வருகிறது. 2023ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தொடர் காட்டுத்தீ காரணமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிந்தன. இதனால் இவர்களால் முன்பு போல் வேட்டையாட முடிவதில்லை. அதனால் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் துடுப்பு படகுகள் பயன்படுத்துவது குறைந்து மோட்டார் படகுகளின் பயன்பாடு பெருகி வருகிறது. இதன் மூலம் வணிகச் சந்தைகளை எளிதாக அடைய முடிவதுடன் சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை இவர்களால் எளிதில் அணுக முடிகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது. ஆனால், தற்போது இம்மக்களிடையே அவை மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்கியுள்ளன. அவர்களின் பழக்க வழக்கங்கள் சிறிது சிறிதாக மாறி வருவதால் இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com