துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூட் அவுட்டை துரத்துமா? எப்படி?

வீட்டை துப்புரவு செய்தல்
வீட்டை துப்புரவு செய்தல்
Published on

பொதுவாக, நமக்கு மூட் அவுட்டானால் செய்யும் வேலையில் உற்சாகம் இல்லாமல் போய்விடும். மேற்கொண்டு எதுவும் செய்யத் தோன்றாது. ஆனால், முரண்பாடாக பாத்திரம் துலக்குவது, வீடு துடைப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மன அழுத்தத்தையும் மூட் அவுட்டையும் துரத்தும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சாதனை உணர்வு: அழுக்காக இருக்கும் துணிகளை துவைப்பது,  குப்பையும் தூசியுமாக இருக்கும் வீட்டைப் பெருக்கித்  துடைப்பது, எச்சில் பாத்திரங்களை கழுவுவது போன்ற துப்புரவு பணிகளை செய்து முடிக்கும்போது ஒரு சாதனை மற்றும் திருப்தி உணர்வை அனுபவிக்க முடியும். சுத்தமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தையும், பொருட்களையும் பார்ப்பது மனநிலையை மேம்படச் செய்யும்.

2. உடல் செயல்பாடு: சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது அது உடல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இது உடலின் இயற்கையான மனநிலையை மேம்படுத்தும் என்டார்ஃபின்களை வெளியிடும். இது மன அழுத்தத்தை தணிக்கவும் மனநிலை மேம்பாட்டிற்கும் உதவும். இதனால் மூட் அவுட் காணாமல் போய்விடும். இந்தப் பணிகளில் உடல் செயல்பாடு மிதமானதாக இருந்தாலும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவை குறைக்க உதவுகிறது.

3. தற்போதைய தருணத்தில் கவனம்: சுத்தம் செய்யும்போது கையில் இருக்கும் பணியில் மனம் கவனத்தை குவிக்கிறது. இது நினைவாற்றலின் ஒரு வடிவமாக செயல்படும். மன அழுத்த எண்ணங்களில் இருந்து விடுபட்டு கவனத்தை திசை திருப்ப உதவுகிறது. தற்போதைய தருணத்தில் ஒருவர் இயங்குவதற்கும், செயல்படவும் உதவுகிறது. இதனால் மனம் அமைதியான நிலையில் இருக்கும். மனம் தெளிவுபடவும் மனக்குழப்பத்தை குறைக்கவும் உதவுகிறது.

4. குறைக்கப்பட்ட கவலை: இரைச்சலான மற்றும் ஒழுங்கற்ற சூழல் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்திற்கு வித்திடும். இடத்தை சுத்தம் செய்வது, பொருட்களை ஒழுங்காக வைப்பது போன்றவை அமைதியான மற்றும் ஒழுங்கான சூழலை உருவாக்குகிறது. இது மன அமைதிக்கு வழிவகுக்கிறது. இதனால் விரக்தியும் சோர்வும் மூட் அவுட்டும் காணாமல் போகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரெகானோவிலிருக்கும் உன்னத நன்மைகள்!
வீட்டை துப்புரவு செய்தல்

5. திசை திருப்புதல்: மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் தேவையில்லாத கவனச் சிதறல்களில் இருந்தும் விடுபட்டு மனம் உற்சாகமடைகிறது. புதிய விஷயங்களை சிந்திக்கத் தூண்டுகிறது.

துப்புரவுப் பணிகளை எப்படித் தொடங்குவது?

துப்புரவுப் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பெரிய அளவில் செய்யாமல் முதலில் சிறியதாகத் தொடங்க வேண்டும்.  மூட் அவுட்டில் இருக்கும்போது அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும். அங்கேயே இருந்தால் இன்னும் மனச்சோர்வு அதிகமாகும். ஏதாவது ஒரு சிறிய பணியை எடுத்துச் செய்யலாம்.

சிங்கில் கிடக்கும் நான்கைந்து பாத்திரங்களை துலக்கலாம். இரண்டு மூன்று துணிகளை துவைத்து அலசலாம். ஒரு அறையை கூட்டிப் பெருக்கலாம். இந்தப் பணிகளை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அப்போது உணர்வுகள் மற்றும் இயக்கங்களில் கவனம் செலுத்தும்போது இடமும் சுத்தமாகும். மனமும் மூட் அவுட்டில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறும். பின்பு தேவைப்பட்டால் பெரிய அளவில் வேலைகளைத் தொடரலாம்.

பின்குறிப்பு: இந்தத் துப்புரவு சிகிச்சை ஆண், பெண் ஏன் சிறுவர், சிறுமிகளுக்கும் கூடப் பொருந்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com