அக்னி நட்சத்திரக் கோடையின் கடும் வெயிலில் பல இடங்களில் கானல் நீர் தோன்றுவதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட கானல் நீர் என்றால் என்னவென்று தெரியுமா?
கானல் நீர் என்பது வெப்பமான கால நிலைகளில் பாலைவனங்களிலும் நேரான தார்பாதைகள் போன்றவற்றில் நீர் தடாகம் போன்று தோற்றம ளிக்கும் தோற்றப்பாடாகும். இது வளியில் ஒளியின் ஒளி முறிவு (ஒளி விலகல்) மற்றும் முழு அகத்தெறிப்பு நிகழ்ந்து வானின் எதிரொளிப்பால் தோன்றும் ஒரு மாயத் தோற்றம் ஆகும். கோடைக் காலங்களில் மிகுந்த வெப்பம் காரணமாக தரையை ஒட்டிய வளிப்படை சூடு அடைகின்றது. இதனால் இப்பகுதியில் உள்ள வளிப்படை அடர்த்தி குறைந்து காணப்படும். இந்த நில மட்டத்திற்கு மேல் உள்ள வளிப்படையின் வெப்பநிலை குறைவடைந்து இருப்பதால் வெவ்வேறு விரிவு நிலையில் வளி காணப்படுகின்றது. இதன் காரணமாக வெவ்வேறு ஊடகம் போல் செயல்படுகின்றது. இதில் ஒளி ஊடுருவும்போது முழு அகத்தெறிப்பு நிகழ்வதால் ஒளி முறிவடைந்து போலி தோற்றப்பாடு நிகழ்கின்றது.
பொதுவாக, வெயில் காலங்களில் நம்மில் பலருக்கும் சாலையில் வாகனத்தில் செல்லும்போது கானல் நீர் தென்படும். அந்தக் கானல் நீர் என்பது நமது கண்கள் செய்யும் பிழையா, கற்பனை செய்யும் பிழையா என்றால் இரண்டுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இயற்கை நடத்தும் இயற்பியல் விளையாட்டுதான் இந்தக் கானல் நீர். இது எப்படித் தோன்றுகிறது என்றால், பொதுவாக பாலைவனங்களில் மட்டும்தான் இந்தக் கானல் நீர் தோன்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பொதுவாக, சூரியனின் வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் இந்தக் கானல் நீர் தோன்றும்.
உதாரணமாக, வெயில் காலங்களில் மதிய வேளையில் தார்ச்சாலையில் நடந்து செல்லும்போது, வாகனங்களில் செல்லும்போது கூட தண்ணீர் பரவி ஓடுவது போன்ற தோற்றத்தைக் காண முடியும். சரி, இயற்கை எப்படி நம்மை இப்படி ஏமாற்றுகிறது தெரியுமா?
தரையை ஒட்டி உள்ள பகுதியில் அழுத்தம் குறைவான காற்று அடுக்கும், இந்த அழுத்தம் குறைவான காற்று அடுக்கிற்கு மேற்பகுதியிலேயே அதிக அழுத்தம் உள்ள காற்று அடுக்கும் உருவாகும். அப்பொழுது மணல் தரையானது கண்ணாடி மாதிரியான தன்மையைப் பெற்று விடுகிறது. அதாவது, அழுத்தம் குறைவான காற்றடுக்கின் மீது அதிக அழுத்தம் உள்ள காற்று அடுக்கு உருவாகும்போதுதான் இந்தக் கானல் நீர் தெரிகிறது.
மேலும், நாம் தரையைப் பார்க்கின்ற கோணமும் கானல் நீர் தோற்றத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும், குறிப்பாக தார்ச்சாலைகளில் கானல் நீர் காணப்படுவதற்கு வெப்பமும் நாம் பார்க்கும் கோணமும்தான் காரணம். இப்படித்தான் கானல் நீர் உருவாகிறது. அடிக்கின்ற அக்னி நட்சத்திர கோடையில் கானல் நீரைக் கண்டு ரசிப்போம்.