மகாலட்சுமி கடாட்சம் யாருக்குக் கிடைக்கும் தெரியுமா?

ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும்
Sri Krishnar with Arjunanhttps://hareramaharekrishna.co.in

ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு சமயம் தெருவில் உலாவிக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை அந்த முதியவருக்குக் கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி . ‘ஆகா இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்குப் போதுமே’ என்று எண்ணி வீட்டுக்குப் புறப்பட்டார். இதை கவனித்த திருடன் ஒருவன் பொற்காசுகளை வயோதிகரிடம் இருந்து பறித்துச் சென்றான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அவ்வழியே வந்த முதியவர் அர்ஜுனிடம் நடந்ததைச் சொல்ல, விலை உயர்ந்த நவரத்தின கல் ஒன்றைக் கொடுத்து, ‘இதையாவது பத்திரமாகக் கொண்டு செல்லுங்கள்’ என்று கூறினான். முதியவரும் கவனமாக அதை வீட்டுக்குக் கொண்டு சென்றார். மனைவி, மகன்களிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த பானையில் அதை ஒளித்து வைத்தார். இதையறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது. அவள் தண்ணீர் பானையுடன் வீட்டில் நுழைந்தபோது வெளியே சென்றிருந்த முதியவரும் வந்துவிட்டார். பானையோடு மனைவியைக் கண்டு அதிர்ச்சியாகி, ‘இதில் இருந்த கல் எங்கே?’ என்று கேட்டார்.

எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றுக்குச் சென்று பல மணி நேரமாகத் தேடியும் பலனின்றி திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் அந்த முதியோரைப் பார்க்கும்போது அவர் மீண்டும் நடந்ததைக் கூறினார்.

“இவர் அதிர்ஷ்டக் கட்டை” என்றான் அர்ஜுனன்.

“இந்த முறை நீ இவருக்கு இரண்டு பொற்காசு மட்டும் கொடு”  என்றார் கிருஷ்ணர்.

அர்ஜுனனும் அப்படியே கொடுத்து அனுப்பிவிட்டு, “இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்து விடும்” எனக் கேட்டான்.

“எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா” என்ற கிருஷ்ணர், முதியவரை பின்தொடர்ந்தார். அர்ஜுனனும் உடன் சென்றான். செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் வேண்டினார். யோசித்த முதியவர், ‘இந்தக் காசுகள் தனது குடும்பத்தினரின் ஒரு வேளை பசியைக் கூட போக்காது. அந்த மீன்களை வாங்கி ஆற்றில் உயிருடன் விட்டால் புண்ணியமாவது கிடைக்கும்’ என நினைத்தார். அப்படியே வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.

இதையும் படியுங்கள்:
அவசியம் தவிர்க்க வேண்டிய 6 வகை உணவுகள்!
ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும்

இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்த அவர், அதன் வாயைப் பிளந்து பார்த்தார். அதைப் பார்த்ததும் பிரம்மித்துப் போனார். அது அவர் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலை உயர்ந்த நவரத்தின கல். சந்தோஷ மிகுதியால், ‘கோபாலா, கோவிந்தா’ என கிருஷ்ணனின் திருநாமத்தைச் சொல்லிக் கூச்சலிட்டார்.

அதேநேரம், யதார்த்தமாக அந்த வழியே திருடன் வர, முதியவரின் கூச்சலைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான். அந்த சமயத்தில் அங்கு வந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் சமயோஜித புத்தியால் முதியவரிடம் திருடியவன் இவனே என யூகித்து திருடனைப் பிடித்தனர். அவனிடம் இருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்து  முதியவரிடமே கொடுத்தனர்.

“வாழ்வில்தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்” எனக் கேட்டான் அர்ஜுனன்.

“அந்த முதியவர் முன்பு கொடுத்த பணத்தை தனது குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் செயல்பட்டார். அடுத்து, நீ கொடுத்த விலை உயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்தார். ஆகவே அதுவும் அவருக்குப் பயன் அளிக்கவில்லை. ஆனால், இப்போதோ தன்னிடம் இருக்கும் இரு நாணயங்கள் தனக்கு உதவாவிட்டாலும் இன்னும் ஒரு உயிராவது வாழட்டும் எனக் கருதினார். இந்தப் புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கு மேலாக கிடைக்கப் பெற்றார். பொதுநலம் உள்ளவருக்கே மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும்” என்று கூறி முடித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com