நாம் வாழும் இந்த உலகில் எண்ணற்ற பழ வகைகள் இருந்தாலும், அவற்றை நாம் சுவைத்திருந்தாலும் சில வித்தியாசமான பழங்களைப் பார்க்கும்போது, ‘இப்படியெல்லாம் கூட பழங்கள் இருக்கிறதா?’ என்று அதிசயம் கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் 3 வித்தியாசமான பழங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Salak: இந்தோனேசியாவில் கிடைக்கும் இந்தப் பழத்தின் தோல் பார்ப்பதற்கு பாம்பின் தோல் போலவேயிருப்பதால், இதற்கு Snake fruit என்று இன்னொரு பெயரும் உண்டு. இதனுடைய சுவை அன்னாசிப்பழமும், பலாப்பழமும் சேர்ந்தது போல புளிப்பாக இருக்குமாம். இந்தப் பழங்கள் பனை மர வகையைச் சேர்ந்ததாகும். Salak பழத்தில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்தப் பழத்தை சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னையை சரிசெய்தல், கண் பார்வை குறைபாட்டை போக்குதல், உடல் எடைக்குறைப்பு, இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துதல் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
2. Buddha's Hand: கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் இந்தப் பழம் பார்ப்பதற்கு மனிதனுடைய கையைப் போலவே இருப்பதால், இந்தப் பழத்திற்கு 'புத்தருடைய கை' என்று பெயர் வைத்திருக்கின்றனர். பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பழம் எழுமிச்சைப் பழ சுவையிலே இருக்குமாம். இந்தப் பழம் அதிக வாசனையை கொண்டுள்ளதால் உணவுகள், சாலட், பானங்கள் ஆகியவற்றில் இதனைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழத்தில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதய பிரச்னை, சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்திக்கு, உடல் எடை குறைப்பு ஆகியவற்றிற்கு நல்லதாகும்.
3. Black sapote: மத்திய அமெரிக்க நாடுகளில் கிடைக்கும் இந்தப் பழங்கள் பார்ப்பதற்கு சாக்லேட் போலவே இருப்பதால் இதற்கு ‘சாக்லேட் புட்டிங்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. இது பார்ப்பதற்கு மட்டும் சாக்லேட் போல இல்லாமல், இதன் சுவையும் சாக்லேட் போலவே இருக்குமாம்.
இந்தப் பழத்தில் ஆரஞ்சை விட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. அது மட்டுமில்லாமல் Fiber, Phosphorus, calcium ஆகியவை அதிக அளவில் உள்ளன. இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இந்த 3 பழங்களில் எது உங்களை மிகவும் கவர்ந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.