அதிவேக காற்றால் பாதிக்கப்படும் தோட்டக்கலைப் பயிர்கள்: பாதுகாப்பது எப்படி?

Horticulture Crops
Horticulture Crops

காற்று சமநிலையுடன் இருந்தால் விவசாயப் பயிர்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. ஆனால் சூறாவளி போன்ற அதிவேகக் காற்று வீசினால் பயிர்கள் பாதிக்கப்படும். இப்படி பலத்த காற்றடிக்கும் சமயத்தில் தோட்டக்கலைப் பயிர்களைப் பாதுகாக்கும் சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

விவசாயம் செழித்து வளர தண்ணீர், உரங்கள் மற்றும் கால்நடைகள் மட்டும் போதாது. அதையும் தாண்டி இயற்கையின் ஆதரவு எப்போதும் இருக்க வேண்டும். ஆம், அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் விவசாயப் பயிர்கள் மழைநீரில் மூழ்குவது மற்றும் வாழை, தென்னை மரங்கள் சாய்வது போன்ற பல செய்திகளை நம்மால் காண முடிகிறது.

நமக்கெல்லாம் செய்தியாக இருப்பவை, விவசாயிகளுக்கு மட்டும் வேதனையைத் தருகிறது. இம்மாதிரியான சூழலில் விவசாயிகளுக்கு உதவ கொண்டு வரப்பட்டது தான் பயிர்க் காப்பீடு திட்டம். ஆனால், இத்திட்டம் விவசாயிகளுக்கு முறையாக பயனளிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் விவசாயிகளின் பதிலாக இருக்கிறது.

கனமழை மற்றும் சூறாவளிக் காற்று வீசும் நேரங்களில் காற்றின் வேகம் இயல்பை விட பலமாக இருக்கும். இச்சமயத்தில் அனைத்து வகையானப் பயிர்களும் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியமாகும்.

பசுமைக்குடில் அமைத்து தோட்டக்கலைப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் அதன் அடிப்பாகத்தை பலமான இணைப்புக் கம்பிகளுடன் அமைக்க வேண்டும். காற்று உட்புகாத வகையில், பசுமைக்குடிலின் ஜன்னல் மற்றும் கதவுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பசுமைக்குடிலுக்கு அருகில் இருக்கும் மரங்கள் சூறாவளிக் காற்றின் போது சரிந்து விழ வாய்ப்புள்ளது. ஆகையால், மழைக்காலம் தொடங்கியதும் மரக்கிளைகளை வெட்டி விடுங்கள்.

நிழல்வலைக் குடில் அமைத்திருக்கும் விவசாயிகளும் அதன் அடிப்பாகத்தை பலமாக அமைப்பது அவசியமாகும். நிழல்வலைக் குடிலில் கிழிந்துள்ள நிழல்வலைகளை உடனுக்குடன் முறையாக தைத்து விடுங்கள். தோட்டங்களில் வடிகால் வசதி செய்யப்பட்டால், மழைநீர்த் தேங்குவதைத் தவிர்க்க முடியும். மேலும், இளம் செடிகள் காற்றில் சாய்ந்து விடும் என்பதால், தாங்கு குச்சிகளைக் கொண்டு பாதுகாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விவசாய மானியங்களை பெற உதவும் 'உழவன்' செயலி!
Horticulture Crops

மா, பலா, எலுமிச்சை, கொய்யா மற்றும் முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றி மரத்தின் எடையைக் குறைப்பது அவசியம். மேலும், அடிப்பகுதியில் மண்ணைக் குவித்து வைத்தல் வேண்டும். ஆண்டுப் பயிரான வாழையில் அடிப்பகுதியில் இருக்கும் இலைகளை அவ்வப்போது வெட்டி எடுத்து, அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும்.

தோட்டக்கலைப் பயிர்களுக்கு சரியான நேரத்தில் பயிர்க் காப்பீடு செய்வது நல்லது. ஒருவேளை நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காமல் போனால் கூட, பயிர்க் காப்பீடு நமக்கு கைகொடுக்கும்.

மேலும் இது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் ஊரின் வட்டார தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் உதவித் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு, உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com