
இந்தியா உலக அளவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. தரவரிசையின்படி சீனா தேயிலை உற்பத்தி செய்வதில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் சீனா வழக்கம் போல தேயிலையை ஏற்றுமதி மட்டுமே செய்கிறது. சீனாவிலிருந்து அதிகளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இதற்கு இந்தியர்களின் உணவு பழக்கம் மிக முக்கிய காரணமாக உள்ளது. சீனர்களை பொறுத்தவரை உணவு விஷயத்தில் பல விதமான உணவுகளை உட்கொள்கின்றனர். அதே போல பானங்களில் கூட குறிப்பிட்ட பானம் என்று இல்லாமல், பல வகை பானங்களை அருந்துகின்றனர். இதனால் அவர்களுக்கு தேயிலை அதிக முக்கியத்துவம் பெற்றதாக இல்லை.
இந்தியாவை பொறுத்தவரையில் தேநீர் என்பது முதன்மையான பானமாக உள்ளது. சராசரியாக இந்தியர்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் இரு வேளைகளில் தேநீர் அருந்துகின்றனர். சிலர் ஒரு நாளில் 4,5 முறை கூட தேநீர் அருந்துகின்றனர்.
இந்தியர்களின் அதிகப்படியான நுகர்வு காரணமாக ஏற்றுமதியில் முதலிடம் பெற முடியாமல் இந்தியா உள்ளது. ஆயினும் இந்தியா ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாக தான் உள்ளது.
கடந்த 2023-24 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 1.82 சதவீதத்தை இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்திய தேயிலை இறக்குமதி 25.21 மில்லியன் கிலோவாகவும், அதன் மதிப்பு 53.30 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியான 1382.03 மில்லியன் கிலோவில் 1.82 சதவீதமாகும். 2021-22 ஆண்டு முதல் 2023-24 ஆண்டு வரை இந்திய தேயிலை உற்பத்தி 1.39 % ஆண்டு வளர்ச்சியுடன் 1382.03 மில்லியன் கிலோவை எட்டியுள்ளது. அதே காலகட்டத்தில் இந்திய தேயிலை ஏற்றுமதி 13.95 % ஆண்டு வளர்ச்சியுடன் 260.71 மில்லியன் கிலோவை எட்டியுள்ளது .
இந்தியா தேயிலையை இறக்குமதி செய்தாலும் மறுபுறம் அதை ஏற்றுமதியும் செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையை இந்தியாவின் புவிசார் குறியீடு கொண்ட தேயிலையுடன் கலக்கக் கூடாது என்று அரசாங்க அறிவிப்பு நவம்பர் 11, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இறக்குமதி தேயிலையை இந்தியாவின் தேயிலையுடன் கலந்தால் , அது புவிசார் குறியீடு கொண்ட தேயிலையாக விளம்பரப்படுத்த கூடாது. இவை கலப்பு தேயிலைகள் என்று வகைப்படுத்தி, அதை பாக்கெட்டின் மேல் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று அரசு அறிவிப்பு உள்ளது.
இந்தியா சீனாவிலிருந்து மட்டுமல்ல கென்யாவில் இருந்து கூட தேயிலையை இறக்குமதி செய்கிறது. 2024-ம் ஆண்டில் கென்யாவின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் இந்தியா 2.83 சதவீதம் இறக்குமதி செய்துள்ளது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதியை குறைக்க உள்நாட்டு தேயிலை உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்திய அரசாங்கம் தேயிலை வாரியம் மூலம் "தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு திட்டத்தை" செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் உலகளவில் தேயிலை உற்பத்தியில் 21% பங்கை இந்தியா பூர்த்தி செய்கிறது. அதே போல தேயிலை ஏற்றுமதியில் இந்தியா 12% பங்கையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேயிலையின் விலையும் 20.39% உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா தேயிலை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும், தேயிலை ஏற்றுமதி செய்வதில் உலகின் நான்காவது பெரிய நாடாகவும் உள்ளது.