
மனித இனத்தில் உள்ளது போலவே விலங்குகளிலும் சுறுசுறுப்பானவையும் உண்டு, எழுந்து நடப்பது கூட சிரமமென எண்ணி சோம்பிக் கிடப்பவைகளும் உண்டு. அப்படிப்பட்ட சோம்பேறி விலங்குகளில் 10 வகை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஸ்லாத் (Sloth): ஒரு நாள் முழுக்க 37 மீட்டர் தூரம் மட்டுமே நகரக்கூடியது. 15 முதல் 20 மணி நேரத்தை தூக்கத்திலேயே கழிப்பவை. இதன் உடலுக்குள் நடைபெறும் மெதுவான மெட்டபாலிஸம் மற்றும் மரக்கிளைகளை அணைத்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்வியலும் இதை சோம்பலின் வளர்ப்புப் பிள்ளையாக ஆக்கியுள்ளது.
2. கோலா (Koala): இது ஒரு நாளின் 22 மணி நேரத்தை தூக்கத்திலும் ஓய்விலும் கழிக்கிறது. இது உட்கொள்ளும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்து குறைந்த அளவு சக்தி கிடைக்கும். அதை பாதுகாப்பாகப் பயன்படுத்த கண்களை மூடி அசைவின்றி கிளைகளில் அமர்ந்தபடியே இருக்கும்.
3. பைத்தான் (Python): இது ஒருமுறை உணவு உட்கொண்டபின் வாரக்கணக்கில் ஒரே இடத்தில் அசையாமல் படுத்துக்கொண்டிருக்கும். உட்கொண்டதை மெதுவாக ஜீரணித்து, கிடைக்கும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகித்து நாட்களைக் கடத்தும்.
4. சிங்கம் (Lion): அதிகபட்ச வேட்டையாடும் திறனுடைய சிங்கம், ஒரு நாளின் 20 மணி நேரத்தை ஓய்வில் கழித்துவிட்டு, குறுகிய நேரத்தில் அதிகளவு உணவை வேட்டையாடிக் கொண்டுவந்துவிடும். தேவையான அளவு உட்கொண்டுவிட்டு மீண்டும் மரத்தடியில் படுத்து ஓய்வெடுக்கும்.
5. ஓப்போஸம் (Opossum): பயமுறுத்தல் வரும்போது இறந்து கிடப்பது போல் நடிக்கும். மற்ற நேரங்களை தூங்குவதிலும், மீந்து கிடக்கும் இரையை தேடுவதிலும் கழிக்கும்.
6. நர்ஸ் ஷார்க் (Nurse Shark): இரவில் நடமாடும் விலங்கு இது. பகல் நேரங்களில் கடலின் அடிப்பகுதிகளில் அசைவின்றிப் படுத்துக்கொண்டிருக்கும். இரை தேட சிறிது நேரத்தை செலவழித்துவிட்டு மீதி நேரத்தை சோம்பலில் கரைத்துக் கொண்டிருக்கும்.
7. ஜயன்ட் பாண்டா (Giant Panda): மூங்கில் காடுகளில் வசிக்கும் பாண்டாவிற்கு முக்கிய உணவு மூங்கில் இலைகள் மட்டுமே. மூங்கில் இலைகளிலிருந்து குறைந்த அளவு ஊட்டச் சத்துக்களே கிடைக்கும். அதிலிருந்து பெறும் சக்தியை சேமித்து வைத்து அடுத்த வேளை இலைகளை மெல்ல பயன்படுத்திக் கொள்ளும். மற்ற நேரங்கள் எல்லாம் தூங்குவதற்கு மட்டுமே.
8. எச்சிட்னா (Echidna): உடலில் குறைந்த அளவு வெப்ப நிலையுடைய பாலூட்டி விலங்கு இது. தேவைப்படும்போது மட்டும் நகர்ந்து செல்லும். மற்ற நேரம் எல்லாம் தூக்கம் மட்டுமே முக்கியம்.
9. ஸீ குகம்பர் (Sea Cucumber): சிதைந்த உயிரிப் பொருட்களை (Detritus) உணவாகக் கொண்டு, கடலின் தரைப் பகுதியில் அசைவின்றிக் கிடப்பது இது.
10. கிலா மான்ஸ்டர் (Gila Monster): பாலைவனப் பகுதியில், பூமிக்கடியில் தனது வாழ்நாளின் 95 சதவிகிதத்தை கழித்துக் கொண்டிருக்கும் ஊர்வன இனத்தைச் சேர்ந்த விஷப்பூச்சி இது. இரை தேடுவதற்காக மட்டும் அவ்வப்போது வெளியே வரும். இதன் மந்தமான வாழ்வியல் முறை சக்தியை சேமிக்க உதவி புரிகிறது.