crooked forest என்றழைக்கப்படும் போலந்தின் 'கோணல் மரக்காடு'! இது எப்படி சாத்தியமாச்சு?

crooked forest
crooked forest
Published on

வடமேற்கு போலந்தில் க்ரிஃபினோ (GRYFINO) என்ற நகருக்கு அருகில் நோவே ஜர்னோவா (NOWE CZARNOWO) என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ளே போனால் நம்பவே முடியாத அதிசயக் காட்சி ஒன்றைக் காணலாம். சுமார் 400 பைன் மரங்கள் அடிப்பாகத்தில் கோணலாக வளைந்து ஆரம்பித்து பின்னர் நெடியதாக ஓங்கி வளர்ந்திருக்கும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கும்.

தரை மட்டத்திற்கு மேலே ஒவ்வொரு மரமும் வடக்கு நோக்கி வளைந்து பின்னர் நிமிர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கிறது. இப்படி வளந்திருப்பது சுமார் மூன்று முதல் ஒன்பது அடி வரை இருக்கிறது. இதை போலந்து மொழியில் க்ரிஸ்வி லாஸ் (கோணல் காடு – CROOKED FOREST) என்று அழைக்கின்றனர்

இந்த 400 மரங்களைச் சுற்றி வழக்கம் போல நிமிர்ந்து நிற்கும் பைன் மரங்களைக் கொண்ட பைன் மரக்காடு உள்ளது. ஏன் இப்படி மரங்கள் வளைந்து ஆரம்பித்து பின்னர் நிமிர்ந்து காட்சி அளிக்கின்றன என்பதற்கு ஏராளமான கருத்துக்களை ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.

ஒரு பெரிய புயல் அடித்து இப்படி அடிமரத்தை வளைத்திருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து. இன்னொரு சாரார் பூமியின் அடியில் புவி ஈர்ப்பு விசை இந்த மரங்களை வடக்கு நோக்கி இழுத்திருக்கலாம் என்கின்றனர். இதை விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். புவி ஈர்ப்பு விசை கீழ் நோக்கித் தான் இழுக்குமே தவிர வடக்கு நோக்கி வளக்காது என்பது அவர்களின் முடிவு.

ஆனால் அந்தப் பகுதி மக்களின் கருத்தே உண்மையாக இருக்கலாம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தக் காட்டின் அருகில் உள்ள மக்கள் திட்டமிட்டு மரங்களை அப்படி நட்டு வளர்த்திருக்கின்றனர் என்பதே அந்தக் கருத்து. படகு கட்டுவதற்கு அப்படி வளைக்கப்பட்ட மரங்கள் பெரிதும் உதவும் என்பதால் அவர்கள் வளைந்தவாறே மரம் வளர்க்கத் திட்டமிட்டு மரம் நட்டனர் என்பது அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.

1930ம் ஆண்டு அங்குள்ள விவசாயிகள் இப்படி மரங்களை வளர்க்க ஆரம்பித்தனர். ஆனால் இரண்டாம் உலகப் போர் துவங்கியவுடன் ஜெர்மனி போலந்தின் மீது 1939ல் போர் தொடுத்து அதை வெற்றி கொண்டது. அதைத் தொடர்ந்து க்ரிஃபினோ நகரம் அழிக்கப்படவே இந்த விதமான நடவடிக்கைகளை விவசாயிகள் தொடர முடியாமல் போனது.

இப்படி மரங்களைச் செயற்கையாக வளைத்து வளர்ப்பது சாத்தியம் தானா? என்ற கேள்விக்கும் ஒரு விடை கிடைத்திருக்கிறாது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஜில்ராய் கார்டன்ஸ் (GILROY GARDENS) என்ற பூங்காவில் நிபுணர்கள் திட்டமிட்டு பல்வேறு விதமாக மரங்களுக்கு வடிவங்களைத் தந்து வளர்த்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் பதில் சர்க்கஸ் மரங்கள் என்ற இந்த மரங்களைப் பார்வையாளர்கள் பார்த்து பிரமித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

எத்தனையோ காடுகளைப் பார்த்தவர்களும் இந்த கோணல் மரக் காட்டைப் பார்த்தால், அதிசயத்தில் திகைக்கின்றனர். இதை போலந்து அரசு பாதுகாப்பான பகுதியாக அறிவித்து பராமரித்து வருகிறது!

இதையும் படியுங்கள்:
உஷார் மக்களே! மழைக்காலத்துல இந்த உணவுகளை கண்டிப்பா தவிர்த்திடுங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!
crooked forest

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com