
வீடு, குடும்பம் என்றிருந்தால் அங்கு ஒரு சமையலறை இருக்கும். சமையலறையில் தினசரி கழிவுகளும் சேரும். வீட்டில் ஒரு சிறிய காலியிடம் இருந்தால், அங்கு தரையிலோ அல்லது நாலு தொட்டிகளை வைத்தோ, வீட்டுக்கு உபயோகப்படும்படியான சில செடிகளை வைத்து வளர்ப்பது சமீப கால ட்ரெண்டிங். சமையலறையில் சேரும் 5 வகையான கழிவுகளை எவ்வாறு செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
முட்டைத் தோல்: முட்டைக் கூட்டில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது செடியின் செல் சுவர்களை பலப்படுத்தவும், புதிதாய்த் தோன்றும் துளிர்கள் கருகிவிடாமல் பாதுகாக்கவும் உதவும். முட்டை கூட்டை (shell) உடைத்து, நொறுக்கி தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கத்திரிக்காய் போன்ற செடிகளை சுற்றி மண்ணில் தூவிவிடலாம்.
டீ இலைகள்: டீ போட்டுவிட்டு வடிகட்டி எடுத்த டீ இலைத் துகள்களை காயவைத்து ரோஸ், ஃபெர்ன்ஸ் (Ferns) மற்றும் கேமெல்லியா (camellia) போன்ற செடிகளை சுற்றி மண்ணில் தூவி வைக்கலாம். டீத் தூளிலுள்ள நைட்ரஜன் மண்ணின் அமைப்பை மாற்றிய மைக்கவும், செடிகளின் இலைகள் செழித்து வளரவும் உதவும். இந்த டீ கழிவுகளை இயற்கை உரம் தயாரிக்கும் தொட்டியிலும் சேர்த்து விடலாம். குறிப்பிட்ட இடைவெளியில் சத்தான உரமாக மாறிவிடும்.
வாழைப்பழத் தோல்: இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கவும், பழ செடியில் பழங்கள் திரட்சியாக பெருத்து வளரவும் உதவும். வாழைப்பழத்தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி செடிகளைச் சுற்றி வேர்களுக்கு அருகில் மண்ணில் புதைத்து வைக்கலாம். அல்லது தண்ணீர் கலந்து அரைத்து செடிக்கு ஊற்றலாம்.
காபி தூள் கழிவு: காபி தூளை உபயோகித்த பின் கிடைக்கும் கழிவுகளை தோட்டத்து மண்ணில் சேர்த்தால் மண்ணின் வடிகால் (Drainage) திறன் மேம்படும். அதன் ஆசிட் தன்மை, ஆசிட் விரும்பும் செடிகளுக்கு நைட்ரஜன் வழங்கி உதவி புரியும். இக்கழிவுகள் அசலியாஸ் (Azalea), ஹைட்ரான்ஜீயஸ் (Hydrangeas) மற்றும் புளூபெரி (Blueberry) செடிகளுக்கு சிறந்த உரமாகும். இச் செடிகளை சுற்றி மண்ணில் இக்கழிவுகளை தூவிவிடலாம் அல்லது இயற்கை உரம் தயாரிக்கும் தொட்டியிலும் சேர்த்துவிடலாம்.
காய்கறி மற்றும் பழத்தோல்கள்: கேரட், உருளைக் கிழங்கு போன்ற மற்ற அனைத்து காய்கறி மற்றும் பழத் தோல்களிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை பொதுவாக எல்லா செடிகளுக்கும் அருகில் மண்ணில் புதைத்து விடலாம் அல்லது இயற்கை உரம் தயாரிக்கும் தொட்டியில் சேர்த்து தானாக உரமாக மாறவும் செய்துவிடலாம்.