
சிறுவன் நாமுவை அழைத்த அவனது அம்மா, மரத்திலிருந்து சில இலைகளை பறித்து வரச் சொன்னார். அதோடு, அதன் ஒரு கிளையையும் வெட்டி விடுமாறு கூறினார். ஆனால், அந்தச் சிறுவன் தனது கால்களை வெட்டிக்கொண்டு அம்மாவிடம் நின்றான். அவனது தாயார் பதறிப்போய், ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டதற்கு, ‘எனது காலை வெட்டினால் எனக்கு எப்படி வலிக்கிறது. அதுபோல்தானே மரத்துக்கும் வலிக்கும். அதனால்தான் அதன் கிளையை வெட்டவில்லை’ என்று கூறினான். பையனின் கருணை உள்ளத்தைக் கண்டு அந்த தாயார் மனம் உருகினார். அந்த நாமுதான் பிற்காலத்தில் ‘நாமதேவர்’ என்று அழைக்கப்பட்ட ஆன்மிகவாதி. விட்டலரின் பக்தர். இவரது சில பாடல்கள் சீக்கிய நூலான குரு க்ரந்த சாகிப்பிலும் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் ராமலிங்க சுவாமிகள். இதெல்லாம் ஜீவகாருண்யம் என்பதோடு மட்டுமல்லாமல், பசுமை சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
25 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு மர ஏற்றுமதி நிறுவனம் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தது. அப்போது 180 அடி உயரமான 1500 வருட செஞ்சந்தன மரம் ஒன்றினை வெட்ட முயற்சி செய்தபோது 23 வயதே உடைய பெண்ணான ஜூலியா அந்த மரத்தில் ஏறி மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டாம் என்று குரல் கொடுத்தார். அந்தப் பெண் பல வழிகளில் மர விற்பனை நிறுவனத்தால் பயமுறுத்தப்பட்டார். அந்தப் பெண்ணின் தலைக்கு மேல் பேரிரைச்சலுடன் வானூர்திகள் பறந்து மிரட்டின. இதனால் அந்தப் பெண் அச்சம் கொள்ளவில்லை. மரத்திலிருந்து இறங்க மறுத்து இரண்டு வருடங்கள் மரத்திலேயே வளர்ந்தார்.
வேடிக்கை பார்க்க மக்கள் கூடி விட்டனர். கயிற்றின் மூலம் உணவு அனுப்பப்பட்டது. மாதங்கள் வருடங்களாக நகர்ந்தது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி என்று அனைத்தும் அப்பெண்ணின் துணிகரச் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. வேடிக்கை பார்த்த கூட்டமும் தினசரி அதிகரித்தது. நடமாடும் சிற்றுண்டி கடைகளும், குளிர்பான கடைகளும் மக்கள் தாகத்தையும், பசியையும் தீர்க்க உதவின.
இப்படி இருந்ததால் இந்த இளம் நங்கையின் செயல் அமெரிக்காவில் பரபரப்பு செய்தியாகியது. மரங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதிமொழியானது பொறுப்பான அதிகாரிகளால் வழங்கப்பட்டதும், இவர் வெற்றிவாகையுடன் மரத்தை விட்டு இறங்கி பூமியில் கால் பதித்தார்.
இவர் உலக மக்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்றால், இயற்கையான உலகத்தை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனுடைய பொறுப்பு. வளர்ந்து வரும் குழந்தைகளுடைய பொறுப்பாகவும் இது மாறுகிறது. ஒவ்வொருவரும் தனது குடும்பத்தை பராமரிப்பது போல், தனது சுற்றத்தில் உள்ள இயற்கை வளங்களையும் பராமரித்து பேணுவதையும் தங்கள் பொறுப்பில் ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தவழ்ந்து, நடை பயின்று ஓடி விளையாடும் இந்த பூமியை அசுத்தமாக்கி, அமைதியற்றதாக்கிக் கொண்டு வருகிறோம்.
சகாப்தம் சகாப்தமாக பூமி தன்னை காப்பாற்றும்படி உலகிற்கு பல வழிகளில் அடையாளம் செய்து வருகிறது. புறக்கணிக்க முடியாத, அலட்சியம் செய்ய முடியாத சைகைகள் இவை. வெள்ள அழிவு, நிலநடுக்கம், சுனாமி, எரிமலைக் குமுறல், சூறாவளி, நிலச்சரிவு, பனிமலை, காடுகள் தீப்பற்றி அழிதல் என எத்தனையோ அழிவு பூமியில் நடந்து வருகிறது. பூமியின் வேதனை மனித இனத்தின் வேதனையாகும்.
உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களுக்கு பாடசாலைகள், கவிதைகள், கதைகள், சினிமா, சஞ்சிகைகள், பத்திரிகைகள் மூலமாக சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை பெற்றோரில் இருந்து அனைவரும் தூண்ட வேண்டும் என்று இவர் அறைகூவல் விடுக்கிறார்.
குழந்தைகளை சாப்பிடும் உணவு பண்டங்கள் மடித்து வரும் பேப்பர்களை, பாலித்தீன் பைகளை அதற்கான இடங்களில் சேர்ப்பிக்குமாறு முதலில் தயார்படுத்தினோமானால், அதுவே அவர்களை பல்வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும். சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட அடிப்படையான பண்பு இதுதான்.