எரிமலை வெடிப்பினால் நன்மைகளா? நம்ப முடியலையே!

Volcanic Eruption
Volcanic Eruption
Published on

எரிமலை வெடிப்பு என்பதும் இயற்கை சீற்றங்களில் ஒன்று தான். இதன் விளைவுகள் என்ன என்பதை ஓரளவு அனைவரும் அறிவார்கள்‌. இருப்பினும் எரிமலை வெடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை உங்களுக்கு விளக்குகிறது இந்தப் பதிவு.

தீப்பிழம்பால் எப்போதும் தகித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள் வெடிப்பது என்பது எப்போதாவது நிகழும் ஒருவகையான இயற்கை சீற்றம் எனலாம். எரிமலை வெடித்தால் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இயற்கை வளங்களும் அழியும் நிலை ஏற்படும். எரிமலையின் உள்ளிருந்து வழியும் லாவா எனப்படும் நெருப்பு பிழம்புகள், ஆறாக வழிவதைக் காண்பதற்கு பிரகாசமாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம்.

இரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும் எரிமலைக் குழம்புகள் வெளியேறும் போது, இவை சுற்றியிருக்கும் அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் திறன் பெற்றவை. வரலாற்றில் இதற்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்புகள் இதற்கு சான்றாக விளங்குகின்றன.

அதிசக்தி வாய்ந்த எரிமலை வெடிப்பால், தீப்பிழம்பு வெளிப்படுவது மட்டுமின்றி பூமிக்கு அடியில் இருக்கும் பெரிய கற்கள் தூக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் விஷ வாயுக்களைக் கொண்டுள்ள மேகங்களை உருவாக்கி மனிதர்கள் மட்டுமின்றி, செடி கொடிகளையும் அழிக்கின்றன.

எரிமலை வெடிப்பால் தீமைகள் ஏற்படுவது போல நன்மைகளும் உண்டாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? எந்தவொரு செயலுக்குப் பின்னும் நன்மை, தீமை இரண்டும் கலந்து இருப்பது போல எரிமலை வெடிப்பிலும் நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், இது பற்றிய புரிதல் பலரிடத்திலும் இல்லை என்பது தான் இங்கு உண்மை.

இவ்வளவு பேராபத்துகளை விளைவிக்கும் எரிமலை வெடிப்பு தான், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் மறைமுகமாக நன்மையும் செய்கிறது. பூமிக்கு ஆழத்தில் உள்ள வளமான கனிமங்கள் நிறைந்த மண் மற்றும் கற்களை சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளின் மீது கொண்டு சேர்க்கும் பணி எரிமலை வெடிப்பால் மட்டுமே சாத்தியமாகிறது. இந்த கனிம வளங்கள் விவசாயத்தைப் பெருக்குவதற்கு உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
மண்ணின் வளத்தை மேம்படுத்த உதவும் பசுந்தாள் உரப் பயிர்கள்!
Volcanic Eruption

உலகில் சில இடங்களில் எரிமலைக் குழம்பைப் பயன்படுத்தி, தண்ணீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றுகின்றனர். இந்த நீராவியைக் கொண்டு விசையாழிகள் சுற்றப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

பூமியின் ஆழத்தில் இருக்கும் தாதுப்பொருட்கள் பல தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு மூலப்பொருளாக இருக்கின்றன. இந்த தாதுப்பொருட்கள் எரிமலை வெடிப்பால் தான் மேலே வருகிறது. எரிமலை வெடிப்பின் உதவியின்றி மனிதர்களால் இந்த தாதுப் பொருட்களை வெளியில் கொண்டு வருவது என்பது இயலாத காரியமாகும்.

எரிமலை வெடிப்பு என்பது அறிவியல் பூர்வமான நிகழ்வாக இருந்தாலும், இதுவும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதை நம்மால் மறுக்க இயலாது. விவசாய உற்பத்திக்கும், மின்சார உற்பத்திக்கும் எரிமலை வெடிப்புகள் மறைமுகமாக உதவி வருவது நமக்கெல்லாம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com