விவசாய நிலங்களில் தொடர் பயிர் சாகுபடியில், இரசாயன உரங்களின் அதிகரித்த பயன்பாட்டால் மண்ணின் வளம் நாளுக்கு நாள் குன்றி வருகிறது. மண்ணின் வளத்தைப் பாதுகாக்க இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதும், பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்துவதும் சிறந்த தீர்வாக அமையும். ஆனால், சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செயற்கை உரங்கள் அனைத்தும் மண்ணை மலடாக்கும் விஷத் தன்மை கொண்டவை. செயற்கை உரங்களால் குன்றிப் போன மண் வளத்தைப் பாதுகாக்க, பசுந்தாள் உரப் பயிர்களை எப்படி பயிரிட வேண்டும் என்பதை அனைத்து விவசாயிகளும் அறிந்து கொள்ள வேண்டும். விவசாயத்தில் சாகுபடியை அதிகரிக்க வேண்டுமாயின் மண்ணின் வளம் நிறைவாய் இருப்பது இன்றியமையாத ஒன்று. தொடர்ந்து வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்வது மட்டுமின்றி, ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை உற்பத்தி செய்தால் அது மண்ணின் வளத்தை மேம்படுத்தி, விளைச்சல் அதிகரிக்கவும் உதவும்.
பசுந்தாள் உரப் பயிர்களின் வகைகள்:
செஸ்போனியா, சணப்பு மற்றும் கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை மண்ணில் விதைத்து, 40 முதல் 45 நாட்களுக்குப் பிறகு பூக்கும் சமயத்தில் அவற்றை மடக்கி உழது விட வேண்டும். பசுந்தாள் இலை உரப்பயிர்களான வேம்பு, புங்கம், எருக்கு மற்றும் கிளாசிடியா போன்ற பயிர்களின் இலைகள் மற்றும் மெல்லிய தண்டுப் பகுதிகள் வேறு இடத்திலிருந்து வெட்டி எடுத்து நிலத்தில் இட்டு உழ வேண்டும்.
பயன்கள்:
பசுந்தாள் உரங்கள் பயறு வகை குடும்பத்தைச் சார்ந்தவை. மண்ணில் இயற்கையாக இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பெருகுவதற்கு இவை உதவி புரிகிறது. பசுந்தாள் உரங்கள் மட்கிய பிறகு வெளிவரும் அங்கக அமிலங்கள், மண்ணில் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்யும். விவசாய நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரித்து, நிலத்தின் அமைப்பையும் மேம்படுத்துகிறது. மண்ணின் கீழ் அடுக்கில் இருக்கும் சத்துகளை உறிஞ்சி மேலே கொண்டு வருவதால், அடுத்ததாக சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பயனடைகிறது. மேலும் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகள் பயிருக்கு மிக எளிதில் கிடைக்கும்.
சாகுபடி:
சணப்பு அனைத்துப் பருவத்திற்கும் ஏற்ற பசுந்தாள் உரம். ஹெக்டேருக்கு 25 முதல் 35 கிலோ வரை தேவைப்படும். விதைத்த 45 முதல் 60 நாட்களில் பசுந்தாளை மடக்கி உழ வேண்டும். ஹெக்டேருக்கு 13 முதல் 15 டன் பசுந்தாள் உரம் மகசூலாக கிடைக்கும்.
தக்கைப் பூண்டு பசுந்தாள் விதையுடன் 5 பாக்கெட் ரைசோபியத்தைக் கலந்து, விதைநேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும். 45 முதல் 60 நாட்களில் மடக்கி உழுதால், சுமார் 25 டன் உயிர்ப்பொருள்கள் மகசூலாக கிடைக்கும்.
சித்தகத்தி பசுந்தாளை அனைத்துப் பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். விதைத்த 45 முதல் 50 நாட்களில், பூக்கும் நேரத்தில் மடக்கி உழுதால், ஹெக்டேருக்கு 20 டன் பசுந்தாள் உயிர்ப்பொருள்கள் மகசூலாக கிடைக்கும்.