லேசாக மண்ணில் தூறல் போட்டாலே அது மண் வாசனையை கிளப்பி விடும். நிறைய பேருக்கு இந்த வாசனை மிகவும் பிடித்தமானது. மண்ணிற்கு இந்த வாசனை ஏன் வருகிறது என்பதற்கான அறிவியல் ரீதியான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மண் வாசனையின் அறிவியல் பெயர் பெட்ரிசோர் என்பதாகும். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளான இசபெல் ஜாய் பியர் மற்றும் ரிச்சர்ட் கிரென்ஃபெல் தாமஸ் ஆகியோர் 1964ம் ஆண்டில் ‘பெட்ரிசோர்’ என்ற வார்த்தையை உருவாக்கினர். ‘பெட்ரிசோர்’ என்ற வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. ‘பெட்ரோஸ்’ என்பதற்கு ‘கல்’ மற்றும் ‘இச்சோர்’ என்பது தேவர்களின் நரம்புகளில் பாய்ந்த திரவத்தைக் குறிக்கிறது. பூமிக்கும் காற்றுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்துவதற்காக இந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது.
மண் வாசனையின் காரணங்கள்:
1. ரசாயனக் கலவைகள்: விஞ்ஞானிகள் ஜாய் பியர் மற்றும் ரிச்சர்ட் மழையின் வாசனை மற்றும் அதற்குக் காரணமான ரசாயனக் கலவைகள் பற்றிய தங்கள் ஆராய்ச்சியை வெளியிட்டனர். சில வகையான மண் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு முக்கிய சேர்மங்களான ஜியோஸ்மின் மற்றும் மெத்திலிசோபோர்னியோல் ஆகியவை மண் வாசனைக்குக் காரணமாக இருக்கின்றன என்றனர். மண் வாசனை பாக்டீரியாவில் உள்ள ஜியோசின் என்ற வேதிப்பொருளால் ஏற்படுகிறது. இது பாக்டீரியாக்கள் இறக்கும் போது வெளியிடப்படுகிறது. ஜியோசின் மிகவும் வலுவான வாசனையுடன் கூடிய ஒரு வகை ஆல்கஹால் மூலக்கூறு ஆகும். பாக்டீரியாக்கள் ஈரமான மண்ணில் செழித்து வளரும். ஆனால், மண் காய்ந்தவுடன் ஒரு விதமான மண் வாசனையை வெளியிடுகிறது.
2. மழையின் அமிலத்தன்மை: பெட்ரிச்சோர் மழை தொடர்பான வாசனை மட்டுமல்ல, மழையின் அமிலத்தன்மையால் ஏற்படும் மற்றொரு தனித்துவமான வாசனையையும் வெளியிடுகிறது. வளி மண்டலத்தில் உள்ள இரசாயனங்கள் காரணமாக, மழைநீர் ஓரளவு அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். குறிப்பாக, நகர்ப்புற சூழல்களில் தரையில் உள்ள கரிம குப்பைகள் அல்லது இரசாயனங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அது சில குறிப்பிட்ட நறுமண எதிர்வினைகளை ஏற்படுத்தும். இது மண்ணைப் பிரித்து, உள்ளே சிக்கியுள்ள தாதுக்களை வெளியிடுகிறது. இது பெட்ரோல் போன்ற இரசாயனங்களுடன் வினைபுரிந்து, வலுவான வாசனையை அளிக்கிறது.
3. தாவரங்களின் கரிம சேர்மங்கள்: மரங்களும் தாவரங்களும் ஐசோபிரீன் மற்றும் மோனோடெர்பீன்கள் போன்ற கரிம சேர்மங்களை (VOCs) காற்றில் வெளியிடுகின்றன. இந்த சிறிய மூலக்கூறுகள் எளிதில் நீராவி அல்லது வாயுவாக மாறும். இவை பாறைகள் போன்ற பரப்புகளில் சேர்கின்றது. அவை அங்கு எண்ணெய் போன்று படிகின்றன. மழை பெய்யும்போது பாறைகளில் உள்ள எண்ணெயுடன் வினைபுரிந்து அதை ஒரு வாயுவாக காற்றில் கொண்டு செல்கிறது.
மண் வாசனையை நாம் ஏன் அனுபவிக்கிறோம்?
மனிதர்கள் பெரும்பாலும் உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களுக்காக மண் வாசனையை அனுபவிக்கிறார்கள். மண் வாசனை பல இனிமையான நினைவுகளை தூண்டிவிடும். குழந்தைகளாக தெருவில் விளையாடிய இனிமையான நினைவுகள் அல்லது அருமையான காதல் தருணங்களை நினைவுபடுத்தலாம். மேலும், வெப்பமான கால சூழ்நிலையில் இருந்து குளிர்ச்சியான மழையும் அதைத் தொடர்ந்து மண்ணில் இருந்து வரும் வாசனையும் ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.
மண் வாசனைக்குக் காரணமான ஜியோஸ்மின் என்கிற சேர்மம் மனித மூக்கால் உணரப்படுகிறது. இந்த உயர்ந்த உணர்திறன் வாசனையின் மீது மனிதர்கள் இயல்பாகவே ஈர்க்கப்படுகின்றனர். இது மன அழுத்தத்தை குறைக்கிறது. தூய்மை உணர்வையும் தருகிறது.