ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான உயிரினம் நம்பட் (Numbat). இது கங்காருவை போன்றே தனது வயிற்றில் உள்ள பையில் குட்டியை எடுத்துச் செல்லும் விலங்கினம். இதனுடைய சிறப்பு இயல்புகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உணவு முறை: நம்பட்டுகள் சிறப்புப் பூச்சி உண்ணிகள் ஆகும். அவற்றின் முதன்மையான உணவு கரையான்கள். தினமும் 20,000 கரையான்கள் வரை இது உண்ணும். இவற்றுக்கு பற்கள் இல்லை. ஆனால், இவை உணவை மெல்லத் தேவையில்லை என்பதால் அவற்றை தங்கள் நீண்ட நாக்கின் மூலம் உண்ணுகின்றன. பத்து சென்டி மீட்டர் வரை நீட்டிக்கக்கூடிய நீண்ட மெல்லிய நாக்கு இவற்றிற்கு உண்டு. கரையான் மேடுகளில் உள்ள கரையான்களை பிரித்தெடுக்க இது உதவுகிறது.
உடல் அமைப்பு: நம்பட்டுகள் அளவில் சிறியதாக இருக்கும். இவற்றின் உடலின் நீளம் சுமார் 20லிருந்து 30 சென்டி மீட்டர் வரை, அதாவது எட்டில் இருந்து 12 அங்குலம் வரையே நீளம் உண்டு. இவற்றுக்குத் தனித்துவமான ஒரு தோற்றம் உண்டு. அணில்களைப் போலவே சிவப்பு மற்றும் பழுப்பு நிற ரோமங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் முதுகில் வெள்ளை கோடுகள் மற்றும் நீண்ட புதர் போன்ற வால் உண்டு. இவற்றின் நகங்கள் மிகவும் நீளமானவை. வளைந்த நீண்ட நகங்களைக் கொண்டு கரையான் மேடுகளையும் தளர்வான மண்ணையும் தோண்டி உணவைக் கண்டுபிடிக்கின்றன. துளைகளைத் தோண்டவும் இவை உதவுகின்றன. நம்பட்டின் தாடையானது கரையான்களை பிரித்தெடுக்க உதவும் வகையில் சிறப்பான தோற்றம் கொண்டவை.
வயிற்றில் பை: இவை தனித்துவமான இனப்பெருக்க உத்தியைக் கொண்டுள்ளன. பெண் நம்பட்டுகள் பொதுவாக நான்கு முதல் ஆறு குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. அவை வளர்ச்சி அடையாமல் பிறந்து தாயின் பையில் தொடர்ந்து வளரும்.
சுற்றுச்சூழலின் நண்பர்கள்: நம்பட்டுகள் திறந்தவெளி யூகலிப்டஸ் காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்கின்றன. அங்கேதான் அவற்றுக்கு மிகவும் பிடித்த கரையான் காலனிகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் கோடிட்ட ரோமங்கள் சுற்றுச்சூழலுடன் எளிதாகக் கலக்க உதவுகின்றன. அதனால் அவற்றை வேட்டையாடுபவர்களின் கண்களுக்கு இவை அவ்வளவாகத் தெரிவதில்லை. மண்ணின் அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து சுழற்சியை பாதிக்கும் கரையான்களின் எண்ணிக்கையை இவை கட்டுப்படுத்துவதால் சுற்றுச்சூழல் அமைப்புக்கு இவை மிகுந்த நன்மை பயக்கின்றன.
அபாயம்: நம்பட்டுகள் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு தனித்துவமான விலங்குகளாக இருக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அங்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் முதன்மையான வாழ்விட அழிவு காரணமாகவும் நரிகள் மற்றும் காட்டுப் பூனைகளால் வேட்டையாடப்படுவதாலும் நம்பட்டுகள் அதிக அபாயத்தில் இருக்கின்றன. ஒரு காலத்தில் தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் நம்பட்டுகள் பரவலாக இருந்தன. ஆனால், ஐரோப்பிய குடியேற்றங்கள் காரணமாக வாழ்விட இழப்பு நிகழ்ந்து இவற்றின் எண்ணிக்கை பெரும்பான்மையான அளவு குறைந்துள்ளன.
ஆயுட்காலம்: காடுகளில் நம்பட்டுகள் பொதுவாக ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை வாழ்கின்றன. நிலையான உணவு ஆதாரம் மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் முறைகளால் அவை இன்னும் நீண்ட காலம் வாழ சாத்தியம் உண்டு. இளம் நம்பட்டுகள் மிகவும் விளையாட்டுத்தனமானவை. அவை வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. முதிர்ச்சி அடையும்போது அவை வேட்டையாடுதல் மற்றும் தங்களது நடத்தைக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன.
சுத்த உணர்வு: எப்போதும் மண் மற்றும் கரையான்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் இவை தங்கள் ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன. உடலில் ஒட்டுண்ணிகள் சேராமல் தங்கள் ரோமங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள இவை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கின்றன.