காலையில் தூங்கி எழுந்ததும் உடல் சோர்வாக இருப்பது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். நம் வாழ்வில் தினமும் செய்யும் அன்றாட பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களைக் கொண்டு வந்தால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. காலையில் எழுந்ததும், முதல் வேலையாக ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது நல்லது. உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் சோர்வு உண்டாகலாம். எனவே, எழுந்ததும் தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
2. காலையில் எழுந்ததுமே கை, கால்களை நீட்டியும், மடக்கியும் சில Stretches செய்வது நல்லது. இரவு முழுவதும் தூக்கத்தில் ஒரே நிலையில் படுத்திருக்கக்கூடும். எனவே, காலையில் Stretches செய்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.
3. காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவுவது புத்துணர்ச்சி தந்து உடல் சோர்வை நீக்கும்.
4. காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது. காலையில் எடுத்துக்கொள்ளும் உணவுதான் நாள் முழுவதும் உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. எனவே, காலை உணவை தவிர்ப்பது கூட உடல் சோர்வை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
5. காலையில் குறைவாக காபி எடுத்துக்கொள்வது நல்லது. காபி குடிப்பது புத்துணர்ச்சியை தரும் என்றாலும், அளவுக்கு அதிகமாக காலையில் காபி குடிப்பது சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
6. காலையில் சூரிய ஒளி நம் மீது படுவது மிகவும் நல்லது. இது உடலில் உள்ள Serotonin அளவை அதிகரிக்கிறது. இது நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது.
7. காலையில் எழுந்ததும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் செய்வது உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும். நடப்பது, ஜாக்கிங், நடனம், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.
8. காலையில் எழும்போது அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், அதற்கு டிப்ரஸன் ஒரு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் இருப்பவர்கள் காலையில் அதை அதிகமாக உணர முடியும். எனவே, நல்ல மனநல மருத்துவரை சந்தித்து அதற்குத் தீர்வுக் காண்பது சிறந்தது. இந்த டிப்ஸையெல்லாம் பின்பற்றி உடல் சோர்வைப் போக்கி ஆரோக்கியமாக வாழுங்கள்.