வீட்டு வான்கோழிக்கும் காட்டு வான்கோழிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Vankozhi
Vankozhi
Published on

வான்கோழிகள் முதன்முதலாக வட அமெரிக்காவின் காட்டுப் பகுதிகளில்தான் கண்டறியப்பட்டன. மெக்சிகோ நாட்டில் முதன்முதலாக இவை பண்ணைகளில் வளர்க்கப்பட்டன. ஐரோப்பா நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் இவற்றை வளர்க்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் வான்கோழியின் இறைச்சியை உணவாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.

வீட்டில் வளர்க்கப்படும் வான்கோழிகள் பறப்பதில்லை. ஆனால், காட்டு வான்கோழிகள் குறைந்த அளவு தூரத்தை பறந்து கடக்கும் திறமையைப் பெற்றுள்ளன. பொதுவாக, வான்கோழிகள் நடப்பதையும் ஓடுவதையுமே விரும்புகின்றன. காட்டில் வாழும் வான்கோழியானது இறக்கைகளை அசைக்காமலேயே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவை கடக்கும் ஆற்றலை பெற்றுள்ளன.

ஆண் வான்கோழிக்கும் பெண் வான்கோழிக்கும் உடலமைப்பில் சில வித்தியாசங்கள் உள்ளன. நன்கு வளர்ந்த ஆண் வான்கோழிக்கு பெரிய நீளமான கால்கள் காணப்படும். மார்புப் பகுதியில் கறுப்பு நிறத்தில் இறகுகள் காணப்படும். ஆண் வான்கோழியின் தலையானது பெண் வான்கோழியின் தலையை விட சற்று பெரியதாக இருக்கும்.

வான்கோழிகள் தானியங்கள், புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை உணவாக சாப்பிடுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் வான்கோழிகள் சுமார் இரண்டு வருடங்களே வாழ்கின்றன. ஆனால், காட்டு வான்கோழிகள் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை வாழ்கின்றன.

வீட்டில் வளர்க்கப்படும் வான்கோழியானது அளவில் காட்டு வான்கோழிகளை விட பெரியதாக இருக்கும். காட்டு ஆண் வான்கோழியானது நான்கடி உயரம் வளரும். பெண் வான்கோழியானது சுமார் மூன்றடி உயரம் வளரும். காட்டு வான்கோழிகளின் இறக்கைகளானது சுமார் ஐந்தடி அகலம் இருக்கும். வீட்டு ஆண் வான்கோழியானது சுமார் இருபது கிலோ எடையிருக்கும். பெண் வான்கோழியானது சுமார் 12 கிலோ எடையிருக்கும். ஆனால், காட்டு ஆண் வான்கோழியானது சுமார் பத்து கிலோ எடையும் பெண் வான்கோழியானது ஐந்து கிலோ எடையுமே இருக்கும்.

ஆண் வான்கோழியானது ஒருவித சத்தத்தை எழுப்பிக்கொண்டே சாப்பிடும். ஆனால், பெண் வான்கோழியானது மெல்ல கொக்கரித்தபடியே சாப்பிடும். வான்கோழிக்கு நல்ல கேட்கும் திறன் உண்டு. ஆனால், இவற்றாலே இரவு வேளைகளில் சரியாக பார்க்க முடியாது. காட்டு வான்கோழிகள் மணிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்திலே ஓடவும் செய்கின்றன. வான்கோழியின் உடலில் மொத்தம் 157 எலும்புகள் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியாக இருக்க விரும்பாத அன்ஹெடோனியா நிலை பற்றித் தெரியுமா?
Vankozhi

ஆண் வான்கோழியானது, பெண் வான்கோழியைக் கவர சத்தமாக கொக்கரிக்கும். தலையை உயர்த்தியபடியே விரைப்பாக நடக்கும். வால் பகுதியை வேகமாக அசைக்கும். வான்கோழி எழுப்பும் சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை நன்கு கேட்கும். பெண் வான்கோழியானது முப்பது வாரங்களிலே தொடர்ந்து 115 முட்டைகளை இடும். வான்கோழிகளின் முட்டையானது சாதாரண கோழிகளின் முட்டைகளைவிட அளவில் பெரியதாக இருக்கும். ஒரு முட்டை சுமார் 80 முதல் 100 கிராம் வரை எடையிருக்கும். வான்கோழியானது 28 நாட்கள் முட்டைகளை அடைகாக்கும்.

காட்டு வான்கோழியை வேட்டையாடிப் பிடிப்பது மிகவும் சிரமமான ஒரு செயல். இவை அவ்வளவு சுலபமாகப் பிடிபடுவதில்லை. காட்டு வான்கோழியானது விரைவாக தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளன. மேலும், இவை எதிரிகளை எதிர்த்து போராடும் குணத்தையும் பெற்றுள்ளன. காட்டில் வசிக்கின்ற வான்கோழிகள் இரவு நேரங்களில் மரங்களின் கிளைகளிலே அமர்ந்தபடியே ஓய்வெடுக்கின்றன.

பொதுவாக, வான்கோழிகள் நமக்கு எந்தத் தீங்கையும் செய்வதில்லை. ஆனால், ஆண் வான்கோழிக்கு வயதானால் சண்டையிடும் தன்மை அதிகரித்துவிடும். சில சமயங்களில் வயதான ஆண் வான்கோழிகள் அபூர்வமாக மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன.

வான்கோழியின் தோல் பதப்படுத்தப்பட்டு பெல்ட் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. நன்கு வளர்ந்த ஒரு வான்கோழியின் உடலில் சுமார் 3500 இறகுகள் காணப்படுகின்றன. இந்த இறகுகள் அவ்வப்போது நிலத்தில் உதிரவும் செய்யும். வயல் பகுதிகளில் விழும் வான்கோழியின் இறகுகள் உழவர்களால் உழவும் செய்யப்படுகின்றன. இந்த இறகுகளானது உரம் போல மண்ணில் செயல்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com