மகிழ்ச்சியாக இருக்க விரும்பாத அன்ஹெடோனியா நிலை பற்றித் தெரியுமா?

Anhedonia mood
Anhedonia mood
Published on

பொதுவாக, மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள். ஆனால், அன்ஹெடோனியா (Anhedonia) என்பது மகிழ்ச்சியை தரும் செயல்களில் ஆர்வம் குறையும் திறனை குறிக்கிறது. இது பெரும்பாலும் பல்வேறு மனநல நிலைமைகளுடன் தொடர்புடையது. அதனுடைய வகைகளை பற்றி பார்ப்போம்.

சமூக அன்ஹெடோனியா: அன்ஹெடோனியா மனநிலை உள்ளவர்கள் சமூகத் தொடர்புகளில் குறைந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். தங்களுடைய உறவினர்கள், குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளில்,  இவர்களுக்கு எந்தவித மகிழ்ச்சியும் இல்லாதது போல உணர்வார்கள். சமூக நிகழ்வுகளில், நண்பர்களின், உறவுக்காரர்களின் திருமண விசேஷங்கள், பார்ட்டி போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்ப மாட்டார்கள்.

உடல் சார்ந்த அன்ஹெடோனியா: உண்ணுதல், தொடுதல் போன்ற நடவடிக்கைகள் இவர்களுக்குப் பிடிக்காது. மகிழ்ச்சிகரமான செயல்களில் இன்பம் இல்லாதது போல உணர்வார்கள். எனவே, அவற்றைத் தவிர்ப்பார்கள்.

ஊக்கமளிக்கும் அன்ஹெடோனியா: கடந்த காலத்தில் இவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்த செயல்பாடுகள், ஊக்கம் தரும் நடவடிக்கைகளில் தற்போது அக்கறையற்றவர்களாக இருப்பார்கள். அந்த மாதிரி செயல்பாடுகளை தவிர்ப்பார்கள் அல்லது அவற்றை தொடங்குவதற்கு மிகவும் தயங்குவார்கள்.

கிரியேட்டிவ் அன்ஹெடோனியா: கற்பனை மற்றும் படைப்புத்திறன் தேவைப்படும் கலை, இசை அல்லது பொழுதுபோக்குகள் போன்ற படைப்பு நோக்கங்களில் குறைந்த ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். பிறருக்கு ஆக்கப்பூர்வமான செயல்களில் இருந்து கிடைக்கும் சந்தோஷம் இவர்களுக்குக் கிடைக்காது.

அன்ஹெடோனியா ஏற்படக் காரணங்கள்:

மனநலக் கோளாறுகள்: மனச்சோர்வு மற்றும் இருமுனைக் கோளாறு போன்ற நிலைகள் அன்ஹெடோனியாவுக்கு வழி வகுக்கும்.

நரம்பியல் காரணிகள்: நரம்பியக்கடத்திகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அன்ஹெடோனியாவுக்கு வித்திடும். குறிப்பாக, டோபமைன் மற்றும் செரட்டோனின் போன்றவை மகிழ்ச்சி, உற்சாகம் தரும் ரசாயனங்கள். இவற்றின் சுரப்பு குறைவதால் மூளையின் அமைப்பை பாதிக்கும். எனவே, இவர்கள் இன்பத்தை நாட மாட்டார்கள். மகிழ்ச்சியாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

அதிர்ச்சி அல்லது இழப்பு: தம் வாழ்வில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிர்ச்சி அல்லது துக்கத்தை அனுபவிப்பதும் உணர்ச்சி நல்வாழ்வை குலைத்து, மகிழ்ச்சியின் திறனை குறைக்கும்.

நாள்பட்ட மன அழுத்தம்: நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தவர்களுக்கும் இந்த பாதிப்பு உண்டாகும். போதைப் பொருள் அல்லது மதுவுக்கு அடிமையாதல் போன்ற தீய பழக்கங்களும் இந்த நிலைமைக்கு இட்டுச்செல்லும்.

இதையும் படியுங்கள்:
சமத்துவம் போற்றும் மஹாளய பட்ச வழிபாடு!
Anhedonia mood

நடவடிக்கைகள்: அன்ஹெடோனியாவிற்கு ஆளான இவர்கள் தன் மீது குறைந்த சுயமதிப்பு கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை அனுபவிக்கும் திறன் குறைந்தது போன்ற உணர்வால் பாதிக்கப்பட்டு எப்போதும் மனச்சோர்விலேயே இருப்பார்கள். எதன் மீதும் நம்பிக்கை இல்லாத நிலை இருக்கும். செயல்களில் மந்த நிலையும் பசியின்மை, சரியான தூக்கமின்மை போன்றவை இருக்கும்.

இவர்களுக்கு எந்த விஷயமும் சுவாரஸ்யம் தருவதில்லை. நண்பர்களுடன் பேசி சிரிப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அல்லது உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் சுவாரசியமோ விருப்பமோ இவர்களுக்கு இருக்காது. எதையும் ரசிக்கும் மனநிலையிலும் இவர்கள் இருக்க மாட்டார்கள். நேர்மறையான செயல்களில் ஈடுபட விரும்ப மாட்டார்கள். எதிலும் ஒரு சலிப்பு, அக்கறையின்மை போன்றவை இருக்கும்.‌

அன்ஹெடோனியாவை எதிர்கொள்ளும் விதம்: அன்ஹெடோனியா உள்ள நபர்களை தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவது நல்லது‌. எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் வழக்கமாக செய்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு திட்டமிட வேண்டும். குழந்தையாக இருந்தபோது மகிழ்ச்சியை தந்த விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும். பிடித்த உணவுகளை உண்ணலாம். செய்யும் வேலை கடினமாக இருக்கும்போது அவற்றை சிறிய சிறிய படிகளாகப் பிரித்துக் கொண்டு அவற்றை செய்யவும். மனதை உற்சாகப்படுத்திக்கொண்டு வேலையில் இறங்க வேண்டும். சிறிய வெற்றிகளுக்கு கூட தனக்குத்தானே பரிசளித்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com