'நீரின்றி அமையாது உலகு' எனப் படித்திருக்கிறோம். அனுபவித்து இருக்கிறோம். நீர் பற்றாக்குறை ஏற்படும் நாட்களில் அதை சமாளிக்க முடியாமல் தவித்து இருக்கிறோம். இப்பொழுதும் மக்கள் ஒரு குடம் தண்ணீர் கிடைக்காமல் அதைத் தேடி வெகு தொலைவு அலைந்து எடுத்துக்கொண்டு வருவதை பார்க்கிறோம். இன்னும் சிலர் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதைக் கூட பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதையும் காண முடிகிறது.
இவ்வளவு அனுபவித்த பிறகும் பாலித்தின் கவர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள முன்வருவதில்லை. அவற்றை நீர்நிலைகளில், கண்ட இடத்தில் போடாமல் இருப்பதில்லை. இதன் அபாயத்தை நாம் உணராமல் இருக்கிறோம். நிலத்தடி நீர் மாசுபடுவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதைத் தீர்க்கும் வழிகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீர் மாசடைவதற்கான காரணங்கள்: நிலத்தடி நீருடன் தொழிற்சாலை கழிவுகளும், வேளாண்மைக்கு பயன்படுத்தும் மருந்துகள் கலந்த நீரும் மற்றும் பல்வேறு விதமான கழிவு பொருட்களும் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. பிறகு பண்டிகை, விழா காலங்களில் பல்வேறு விதமான ரசாயனக் கலவைகளை கொண்ட சிலைகள் அதற்கு பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை கடலில், நீர்நிலைகளின் கரைக்கும்பொழுது அதிக அளவு தண்ணீர் மாசடைகிறது.
எண்ணெய்க் கசிவால் கடல் நீர் மாசடைகிறது: பொதுவாக, நீர்நிலைகளில் துணிகளை துவைத்தல், மனிதர்கள் குளித்தல், கால்நடைகளையும் வாகனங்களையும் இதர அசுத்தமானவற்றையும் கழுவுவதாலும் நீர் நிலைகள் மாசடைகின்றன.
நீருடன் கேட்மியம் கலக்கும்போது மாசடைந்த நீர் நச்சுத்தன்மை உடையதாக மாறுகிறது. மெர்குரி போன்ற கன உலோகங்களுடன் கலந்து மாசடைந்த கழிவு நீர் பாக்டீரியில் நடவடிக்கைகளால் நச்சுத்தன்மை வாய்ந்த மெர்குரி கூட்டுப் பொருட்களாக மாற்றப்படுகிறது.
மாசடைந்த நீரால் ஏற்படும் நோய்கள்: குடிநீருடன் நைட்ரேட் கலப்பதால் மனித உடலில் ஆக்சிஜன் குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கும் நிலை உருவாகிறது.
நீர் நிலைகளில் கலக்கும் அயோடின் கலந்த நீரால் தைராய்டு சுரப்பி வீக்கமும், ப்ளுரைடு கலந்த நீரால் பற்சிதைவுகளும், எலும்பு மற்றும் மூட்டு வலிகளும் ஏற்படுகின்றன. பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு மரபு வழி திடீர் மாற்றங்களும் இனப்பெருக்க தோல்விகளும் ஏற்படுகின்றன.
நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதால் நிலத்திலும் பாறைகளிலும் இருந்து நச்சுத்தன்மை வெளியேறி நீரில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. அந்நீரை பருகுபவர்களுக்கு வியாதிகள் ஈரல் மற்றும் சரும புற்று நோய்கள் வருகின்றன.
நீரில் கேட்மியம் கலப்பதால் ஈரல், சுவாசப் பைகள், சிறுநீரகம், எலும்புகள், உடல் சுரப்பிகள் ஆகியவை பாதிக்கின்றன. நீருடன் ஈயம் கலப்பதால் ரத்த சோகை, தலைவலி, தசைவலி, ஈறுகள் ஆகியவற்றை பாதிக்கிறது.
வயல்வெளிகளில் உள்ள நீர் மாசு அடைந்து அங்கு வாழும் ஒரு வகை நண்டு வகையை சாப்பிட்டதால் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டனர். அதற்கு, ‘ஹன்டி கோடு சின்ட்ரோம்’ என்று பெயர்.
நீர் மாசாவதைக் கட்டுப்படுத்தும் வழிகள்: மீன்களை நீர்நிலைகளில் வளர்ப்பதன் மூலம் அவை நீரில் உள்ள நச்சுப் பொருட்களையும் கன உலோகங்களையும் நீக்கி நீரை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன.
நீரைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு கலன்களை நிறுவச்செய்து கழிவுகளை உருவாக்கும் இடத்திலேயே நீரை சுத்தம் செய்து பின்னரே அந்நீரை நீர்நிலைகளில் வெளியேற்ற அனுமதிக்கப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் இதைப் பின்பற்றுகிறார்கள்.
மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை வேளாண்மைக்கும், வீட்டுத் தோட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.
நீர் செடிகள், நீர்நிலைகளில் வளர்வதை தடுக்க வேண்டும். அதற்கு அவ்வப்பொழுது சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
பொது நீர்நிலைகளில் துவைப்பது, குளிப்பது, கால்நடைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மழை நீர் தங்கு தடையின்றி ஓடி ஆறு, கடல்களில் கலப்பதற்கு ஏற்ற கால்வாய்களை தூர்வாரி செப்பணிட்டு வைக்க வேண்டும்.
ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் வேளாண்மைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை உரங்களையும் இயற்கை முறைகளையும் பயன்படுத்தினால் நல்லது. இதுபோன்ற காரணங்களால் நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாக்கலாம். அதனால் நல்ல பயன் பெறலாம்.