வரலாற்று சிறப்புமிக்க வீராணம் ஏரியின் பெருமை தெரியுமா?

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

மரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பற்றி பேசினால் நிச்சயமாக வீரநாராயணன் ஏரி பற்றி பேசித்தான் ஆக வேண்டும். காரணம், இந்த நாவலில் அவ்வளவு சிறப்பு வாய்ந்த வீரநாராயணன் ஏரியின் சிறப்புகளை தனது எழுத்துக்களால் செதுக்கி இருப்பார் அமரர் கல்கி. அந்த வீரநாராயணன் ஏரியின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னார்கோயில் செல்பவர்கள் வீராணம் ஏரியிலிருந்து ஆர்ப்பரித்து வரும் அலைகள், அதன் கரைகளைத் தாக்குவதை ரசிக்காமல் செல்ல முடியாது. அதுவும் மாலை வேளையில் ரம்யமான சூழலில் ஆர்ப்பரிக்கும் அலையை ரசிப்பது அலாதியானது. இந்த ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோயில் வரை ஏரி நீண்டு காணப்படுகிறது. வீராணம் ஏரி 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட ஏரியாகும். முதலாம் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் தக்கோலம் போருக்கு செல்லும் வழியில் வடக்காவிரி என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நீர் வீணாகக் கடலில் கலப்பதை பார்த்து விட்டு அதனைத் தடுக்க எண்ணினான்.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

அப்போது போருக்கு தன்னுடன் வந்த வீரர்களை அப்பகுதியில் ஏரி ஒன்றை வெட்ட உத்தரவிட்டான். ஏரி வெட்டும் பணி நிறைவடையாத நிலையில் போருக்கு ஒரு பகுதி வீரர்களுடன் புறப்படும்போது ஏரியை வெட்டி முடித்ததும் ஏரிக்கு தனது தந்தையின் வீரப் பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று கூறிவிட்டு போருக்குச் சென்றான்.

போரில் ராஜாதித்தன் யானை மீது அமர்ந்து போரிட்ட நிலையிலையே வீரமரணம் அடைந்தான். இதன் காரணமாக ராஜாதித்தன், ‘யானை மேல் துஞ்சிய தேவன்’ என அழைக்கப்பட்டான். ஏரி வெட்டி முடிக்கப்பட்டதும் ராஜாதித்தன் விருப்பப்படியே ஏரிக்கு வீரநாராயணன் ஏரி என்று பெயரிடப்பட்டது. காலப்போக்கில் இந்த ஏரியின் பெயர் வீராணம் ஏரி என்று மருவியது. எவ்வித நவீன இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் முழுமையான மனித ஆற்றலால் உருவாக்கப்பட்டது வீராணம் ஏரி.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 188 கிலோ மீட்டர் பயணித்து திருச்சியில் உள்ள கல்லணைக்கு வந்து சேர்ந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் வழியாக 81 கிலோ மீட்டர் பயணித்து தஞ்சை கீழணையை அடைகிறது. கீழணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வடவாறு வழியாக 22 கிலோ மீட்டர் பயணித்து வீராணம் ஏரிக்கு வந்து சேரும் வகையில் அமைந்திருக்கிறது. வரலாற்று சிறப்பு கொண்ட வீராணம் ஏரியின் கிழக்கு பிரதான கரையின் மொத்த நீளம் 16 கிலோ மீட்டர் ஆகும். ஏரியின் மொத்த சுற்றளவு 48 கிலோ மீட்டர். ஏரியின் மொத்த அகலம் 5.6 கிலோ மீட்டர் ஆகும்.

ஏரியின் மொத்த பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1465 டிஎம்சி ஆகும்.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் மூலம் கிழக்குக் கரையில் உள்ள 28 பாசன மதகுகளின் மூலமாகவும் எதிர்வாய் கரையில் உள்ள 6 பாசன மதகுகளின் மூலமாகவும், சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 123 கிராமங்களில் உள்ள 49 ஆயிரத்து 440 ஏக்கர் விலை நிலங்களுக்கு நேரடியாகவும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள 40 ஆயிரத்து 669 ஏக்கர் விளை நிலங்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி செய்கிறது.

வீராணம் ஏரியின் பிரதான வடிகால் வெள்ளியங்கால் ஓடையாகும். இந்த ஓடை ஏரியின் தென்பகுதியில் லால்பேட்டை கிராமத்தின் அருகே உள்ளது. இதில் மொத்தம் 14 கண்மாய்கள் உள்ளன. இதிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரை ஏரியிலிருந்து வெளியேற்ற முடியும். இது மட்டும் இல்லாமல் ஏரியின் பாதுகாப்பிற்காக 490 அடி நீள மொட்டை கலுங்கு வெள்ளியங்கால் ஓடையின் தென்புறத்தில் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?
வீராணம் ஏரி

ஏரியின் அதிகபட்ச நீர்மட்டத்திற்கு மேல் நீர்மட்டம் உயருமானால் நீர் தானாகவே வழிந்து ஓடிவிடும். இது மட்டுமில்லாமல் இந்த ஏரியின் வடபுறத்தில் வீராணம் புது வரத்து மதகிலிருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை சேத்தியாதோப்பு வெள்ளாற்றில் வடிய வைக்க முடியும். இந்த ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 165 சதுர மைல் ஆகும். இப்பகுதியில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, ஆண்டிப்பாளையம் வடிகால், பாளையங்கோட்டை வடிகால், பாப்பாக்குடி வடிகால் ஆகிய ஓடைகளின் வழியாக ஏரிக்கு வரும். இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அடைமழை பெய்யுமானால் மேலே குறிப்பிட்ட 5 ஓடைகளின் வழியாக, வினாடிக்கு 16 ஆயிரத்து 300 கன அடி நீர் ஏரிக்கு வரும்.

தமிழகத்தின் மிகப்பெரிய நான்காவது ஏரியான வீராணம் ஏரியில் இருந்து 2004ம் ஆண்டு முதல் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர குடிநீருக்காக வினாடிக்கு 78 கன அடி வீதம் தண்ணீர் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டு 77 கன அடி வீதம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பாசனத்திற்கு அதிகபட்சமாக ஏரியின் நீர் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் தேவையில் நான்கில் ஒரு பகுதியை வீராணம் ஏரி பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை வீராணம் ஏரிக்கு விசிட் அடித்து ஏரியின் அழகை கண்டு மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com