நாம் வரலாற்று பாடங்களில் படிக்கும்பொழுது, ‘அசோகர் சாலையின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்களை வளர்த்தார்’ என்று படிப்போம். இன்னும் போக்குவரத்து சாதனங்களின் பின்புறம், ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வாசகத்தை தவறாது கண்டு வருகிறோம். மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அனைத்தையும் தருவது வனங்கள்தான். இன்னும் எப்படி எல்லாம் வனங்கள் நமக்குப் பயன்படுகின்றன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
எரிபொருள்: இன்னும் அதிகமானோர் உணவு சமைக்கப் பயன்படுத்துவது விறகைத்தான். இந்த விறகுகள் கிடைக்கும் இடம் வனங்கள், அதைச் சார்ந்த காடுகள் மற்றும் வயல்வெளிகளே.
உணவு: மா, பலா, வாழை, ஆப்பிள், பேரிக்காய், அன்னாசி போன்ற பழ வகைகளும் தேங்காய் , முந்திரி போன்றவையும் மனிதர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
கட்டுமானம்: வனத்தில் உள்ள மரங்கள் மூலம் வீடு மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கான விலை உயர்ந்த மரங்களைப் பெற முடிகிறது. வேளாண்மைக்கு தேவையான பொருட்களையும் வனங்களில் இருந்தே பெற முடிகிறது.
இருக்கைகள்: வளர்ந்து வரும் கால சூழ்நிலைக்கேற்ப தேக்கு, கோங்கு, படாக், அத்தி போன்ற மரக்கட்டைகள் மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ, ஜன்னல் மற்றும் கதவுகள், நிலைகள் செய்யப் பயன்படுகின்றன.
மூலப் பொருட்கள்: காகிதம், பிளைவுட், தீப்பெட்டி, மரப்பெட்டிகள், தோல் பதனிடுதல், சாயத்தொழில் போன்ற தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களையும், தேன், கோந்து, ரப்பர் போன்ற பொருட்களையும் தந்து பேருதவி புரிந்து வருகின்றன.
மருந்து: வனப்பகுதியில் உள்ள ஏராளமான மூலிகைகள், பூக்கள், இலைகள், வேர்கள், தண்டுகள் போன்றவை பலவித மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. மருந்துகள் தீராத வியாதியைத் தீர்த்து மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. மேலும், சந்தனம் மற்றும் வேம்பு போன்றவற்றின் எண்ணெய்கள் சோப்புகள், மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. யூகலிப்டஸ் மரத்திலிருந்து கிடைக்கும் அதன் தைலத்தை மறந்து விட முடியுமா என்ன?
விலங்குகள்: வன விலங்குகளின் வாழிடம் வனமே. மானில் இருந்து கஸ்தூரி, புனுகுப் பூனையிலிருந்து புனுகு, மாட்டிலிருந்து கோரோசனையும் நமக்கு கிடைக்கும் மருத்துவப் பொருட்களாகும். யானையின் தந்தம் விலை மதிப்பில்லாதது. இப்படி ஒவ்வொரு விலங்குகளில் இருந்தும் கிடைக்கும் பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆதி மனிதன் போக்குவரத்திற்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தியது மாடுகள்தான். பிறகு குதிரை கழுதை என்று அனைத்தும் பயன்பாட்டிற்கு வந்தன.
மழை: மழை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு வனங்களின் உதவி அவசியம். மழை நீர் பூமிக்கு அடியில் சென்று நீரூற்றுகளில் தொடர்ந்து நீர் கிடைக்க வழி செய்கின்றது. மழை அளவு அதிகரிக்க உதவுகிறது. கால மாறுதல்களுக்கு முக்கிய பங்காற்றுகின்றன. காற்று மண்டலத்தின் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. மழை, புயல் போன்றவற்றால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தை பாதுகாக்கின்றன.
காற்று: காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தில் மாசடைந்த காற்றினைக் கிரகித்து அதை சுத்தப்படுத்துகிறது. நல்ல ஆக்சிஜனை நாம் சுவாசித்து உயிர் வாழ வழி செய்து தருகிறது.
வனங்கள் அழிவதன் காரணம்:
* ஒவ்வொரு இடத்திலும் பயிரிடுவதற்காக அங்குள்ள மரங்களை அதிகமாக வெட்டி விடுகிறார்கள். அந்த இடத்தில் பயிரிட்டு சில வருடங்கள் சாகுபடி செய்து அந்த மண்ணின் சத்து குறைந்தவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்கு சென்று பயிரிட்டு விடுகிறார்கள். இப்படி அழிக்கப்பட்ட அந்த இடம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செடி கொடிகள் வளர ஏதுவாகின்றன. வீட்டு பயன்பாட்டிற்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் மரங்கள் அழிக்கப்படுகிறது.
* மலைப்பகுதிகளில் சாலை அமைத்தல் போன்ற பணி தொடரும் பொழுது மலைகளை வெடிவைத்து தகர்க்கிறார்கள். இதனால் நிலச்சரிவு ஏற்படுகிறது. மண்ணரிப்பும் ஏற்படுகிறது. இதனால் வனம் அழிகிறது.
* அணை கட்டுதல், கால்வாய் அமைத்தல் போன்ற நீர் தேக்கங்கள், நீர்மின் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பெரும்பகுதி வனம் அழிக்கப்படுகிறது. இதனாலும் வனங்களின் அடர்த்தி குறைந்து வருகிறது.
* இயற்கை மற்றும் செயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயாலும் காடு அழிந்து வன விலங்குகள் தடுமாறுகின்றன. பல்லாண்டு காலம் நீண்டு நெடிதுயர்ந்து வளர்ந்த விலை மதிப்பற்ற மரங்கள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன.
வனங்கள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகள்:
* வனங்கள் அழிவதால் கோடைக் காலம் அதிக வெப்பமாகவும், குளிர்காலம் அதிக குளிராகவும், மழை அளவு குறைந்தும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட காரணமாகின்றது.
* வனம் மற்றும் காடுகள் அழிக்கப்படுவதால் நீரூற்றுக்கள் வறண்டு நதிகளில் நீரோட்டம் குறைந்து வறட்சி ஏற்படுகிறது. .நீரைத் தேக்கி வைக்கும் திறன் குறைவதால் மழைக்காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் பொருள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுக்காண்டு வெப்பம் அதிகமாவது, பனிப்பொழிவு, தாங்க முடியாது வேகமாக வீசும் சூறாவளி ஆகிய இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. சில வகை பூச்சி தாக்குதல்களாலும் தாவரங்கள் அழிந்து வன அடர்த்தி குறைகிறது.
நாம் செய்ய வேண்டியது: ஏதாவது ஒரு மரத்தை வெட்டினால் அதை ஈடுகட்ட ஒரு மரக்கன்று நடுவது, வீட்டு விசேஷங்களின்போது மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஆடி மாதம் வந்தால் கிராமப்புறங்களில் செடி கொடிகளை நடுவதற்கு விதைகளை பரிமாறிக் கொள்வார்கள். அதுபோல் எல்லா இடத்திலும் மரம் நடுவதற்கு விதைகளை, மரக்கன்றுகளை, போத்துக்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
அடுப்பு எரிக்க விறகுகளை விடுத்து சாண எரிவாயு, இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, வனங்களில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க நவீன தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி வெகு விரைவில் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதனால் அதிக அளவு வனம் அழிவது தடுக்கப்படும்.
விவசாயத்திற்கு பொருத்தமற்ற இடங்களில் வனங்களை வளர்க்கலாம். அதைப் போல் ஆறுகளின் ஓரங்கள், விளையாட்டுத் திடல்கள், நெடுஞ்சாலைகளின் ஓரங்கள், பூங்காக்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் மரங்களை வளர்க்கலாம்.
மக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வேளாண்மை, தூய காற்று, அதிக மழை, மண் வளம், வன வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைய தலைமுறையினருக்கும் எடுத்துக் கூறி செயல்படுத்துவோம்.