40 வயதிற்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில், அந்த வயதிற்கு பின் ஏராளமான உடல் பிரச்சனைகள் எளிதாக வரக்கூடும். அப்போது ஊட்டச்சத்துக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவர் 40 வயது தாண்டியவுடன் உணவு பழக்க வழக்கங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவை செய்ய வேண்டும். அதேபோல் உடல் ஆரோக்கியம் சரியாக உள்ளதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். பொதுவாக 40 வயதிற்கு மேல் உடல் ஆரோக்கியமாக இல்லையென்றால், அதற்கு இந்த 7 ஊட்டச்சத்துக்களின் குறைபாடே காரணம்.
மெக்னீசியம்:
பீன்ஸ், சோயா, விதைகள், கொட்டைகள், வேர்க்கடலை, முட்டைக்கோஸ் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளன. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அபாயங்கள் குறையும். அதேபோல், நரம்புகள், தசைகள், இதயம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும்.
பொட்டாசியம்:
பீன்ஸ், பருப்புகள், இனிப்பு உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம், இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைக் குறைக்கும். ஆனால், அளவுக்கு அதிகமாக பொட்டாசியம் எடுத்துக்கொள்வது இரைப்பை, குடல் மற்றும் இதயத்தை பாதிக்கும். ஆகையால், மருத்துவரிடம் பொட்டாசியம் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்துக்கொள்வது நல்லது.
புரோபயாடிக்குகள்:
பால் பொருட்களில் அதிகம் காணப்படும் இந்த புரோபயாடிக்குகள், குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் எடையைக் குறைக்கவும், இதய நோய், நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு:
ஆலிவ் விதை, வால்நட்ஸ், மீன், கீரைகள் போன்றவற்றில் ஒமேகா-3 அதிகம் காணப்படுகிறது. இது, இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இருப்பினும், இதுவும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
வைட்டமின் பி12:
இந்த ஊட்டச்சத்து கோழி இறைச்சி, பால், மீன், முட்டை போன்ற விலங்கு பொருட்களில் அதிகமாகவே உள்ளது. உடலில் சீரான இரத்த ஓட்டம் மற்றும் மூளை செயல்பாடுகளை பராமரிக்க இது முக்கியம். இது நீரில் கலந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும் என்பதால், நிறைய எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.
வைட்டமின் டி:
மீன், தானியங்கள், வலுவூட்டப்பட்ட பால் பொருட்கள் போன்றவற்றில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இதய நோய், நீரிழிவு, மார்பக புற்றுநோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், பெருங்குடல் புற்றுநோய் போன்ற வயது தொடர்பான பாதிப்புகளுக்கு வைட்டமின் டி உள்ள ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியம்.
கால்சியம்:
மத்தி மீன், பால், ப்ரோக்கோலி, டோஃபு போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவற்றைத் தடுக்கலாம்.