
விவசாயம் செழிக்க பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கால்நடை வளர்ப்பு. விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பை மேற்கொள்வதன் மூலமும் விவசாயிகள் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும். இருப்பினும் இதற்கு மேய்ச்சல் நிலங்கள் இன்றியமையாததாகும். நகர மயமாகும் இன்றைய காலகட்டத்தில் மரங்களை அழித்து விட்டு குடியிருப்புகள் கட்டுவதை நாம் பார்க்கிறோம். இதனால், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்தப் பதிவு.
கால்நடை வளர்ப்பில் பெரும்பாலும் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளைத் தான் வளர்க்கின்றனர். இவற்றிற்கான தீவனங்களை அடிக்கடி நம்மால் விலைகொடுத்து வாங்குவது கடினம். இந்நிலையில் தீவனப் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கின்றன மேய்ச்சல் நிலங்கள். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நகர மயமாக்கல் மற்றும் வீட்டு மனைகள் அதிகரிப்பு தான்.
நகரத்தை விடவும் கிராமத்தில் கால்நடைகளை வளர்ப்பது மிகவும் எளிது. ஏனெனில் தீவனத்திற்கான வாய்ப்புகள் கிராமங்களில் அதிகம். ஆனால், இன்று கிராமங்களில் கூட தீவனம் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை தான். மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அன்றைய காலத்தில் தினந்தோறும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு சிறிது தூரம் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், இன்றோ மேய்ச்சலுக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. இதன் விளைவாகத் தான் கால்நடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன.
நகரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதை இன்றைய நாட்களில் பார்க்க முடிகிறது. இவை குப்பைத் தொட்டிகளில் இருக்கும் பிளாஸ்டிக்கை கூட சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் மாடுகள் கொடுக்கும் பால் எப்படி தரமாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மாடுகளுக்கு முக்கியத் தீவனமாகப் பயன்படுவது வைக்கோல். ஆனால், அனைவராலும் வைக்கோலை விலைகொடுத்து வாங்க முடியாது. இதுமாதிரியான நேரங்களில் தான் மேய்ச்சல் நிலங்களை நாம் தவற விடுகிறோம்.
மலையோர கிராமங்களில் உள்ள மக்கள் மேய்ச்சலுக்காக கால்நடைகளை மலைச்சரிவுக்கு அழைத்துச் செல்வர். ஆனால் கல் குவாரிகளின் வரவால், மேய்ச்சல் நிலங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இது போதாதென்று நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக பல இடங்களில் மேய்ச்சல் நிலங்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளன. மேய்ச்சல் நிலங்களும் விவசாயத்தின் ஒரு பகுதி தான். இவை இருந்தால் தான் கால்நடைகளின் எண்ணிக்கை உயரும். அதோடு இவற்றின் சாணம் விவசாயத்தில் மிக முக்கிய உரமாகப் பயன்படுவதால், மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது.
பலவழிகளில் நமக்கு இலாபத்தை ஈட்டித் தரும் கால்நடைகளுக்கு, நல்ல தீவனம் கிடைக்க மேய்ச்சல் நிலங்கள் அவசியம். வளர்ச்சி தேவை தான்; இயற்கையை பாதிக்காத தேவை; எவரையும் பாதிக்காத வளர்ச்சி தேவை. ஒன்றை அழித்து தான் மற்றொன்று உருவாக வேண்டுமானால், அது வளர்ச்சி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.