
மனிதர்கள் முதல் விலங்குகள் வரை உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் வாழ தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஆனால், சில விலங்குகள் பல நாட்கள் வரை உணவும் தண்ணீரும் இன்றி உயிர் வாழ்கின்றன. இவை சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. அந்த வகையில், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வரை உயிர் வாழக்கூடிய அதிசய விலங்குகள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒட்டகம்: ‘பாலைவன கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகம், பாலைவன சூழ்நிலையில் வாழும் விலங்காக உள்ளது. உடலிலுள்ள கொழுப்பை மாற்றி நீரின்றி பல நாட்கள் வரை வாழும் வல்லமையைப் பெற்றுள்ளதால் தண்ணீர் இல்லாமல் இது 15 நாட்கள் வரை உயிர் வாழும். கூடவே பல நாட்கள் வரை உணவின்றி வாழும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
அண்டார்டிகாவில் தங்கும் பென்குயின்: அண்டார்டிகாவில் அதிகம் காணப்படும் பென்குயின்கள் பெண்கள் முட்டையிட்ட பிறகு, ஆண் பென்குயின் 60 நாட்களுக்கு முட்டையை பாதுகாக்க உணவும் தண்ணீரும் இல்லாமல் செலவிடுகிறது. அத்தகைய பொறுமையுடன் கூடிய ஆற்றலை பென்குயின்கள் பெற்றுள்ளன.
விஷ பல்லி கிலா அசுரன்: தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வாழும் விஷ பல்லியான கிலா அசுரன் அதனுடைய உடல் சக்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு திறன் காரணமாக ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை உணவு இல்லாமலே வாழும் தன்மையுடையதாக விளங்குகின்றன.
விண்வெளி உயிரினம் டார்டிகிரேட்: விண்வெளியில் வாழும் உயிரினமான டார்டிகிரேட் அல்லது நீர் கரடி, தீவிர சூழ்நிலைகள் மற்றும் வெப்பநிலை மாற்றங்களை தாங்கும் வல்லமையை கொண்டுள்ளதால் இது தண்ணீர் மற்றும் உணவின்றி பல ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது.
அசுர சக்தி கொண்ட நுரையீரல் மீன்: ஆப்பிரிக்காவில் காணப்படும் அசுர சக்தி கொண்ட நுரையீரல் மீன்கள் வறண்ட காலங்களில் சேற்றில் துளையிட்டு, பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கி, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் என்பதால் இவை நான்கு ஆண்டுகள் வரை தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் உயிர் வாழும்.
மேற்கூறிய உயிரினங்கள் அனைத்தும் விசேஷ உடல் சக்தியை கொண்டுள்ளதால் அடிப்படை தேவைகளான உணவு மற்றும் தண்ணீரின்றி பல நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. இயற்கையின் படைப்பில் பல ஆச்சரியங்கள் நிறைந்துள்ளதை இது காட்டுகிறது.