
இனப்பெருக்கம் மற்றும் தனது சந்ததிகளை உருவாக்குவது போன்ற காரணங்களுக்காக அனைத்து உயிரினங்களும் குட்டி போடுதல் அல்லது முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. அவற்றுள் பாம்பு, தேள், மீன், வெள்ளெலி, பாம்பு ராணி போன்ற சில விலங்குகள் தமது குட்டிகள் பிறந்த உடனே அவற்றில் சிலவற்றைத் தின்று விடுகின்றன. இப்படியொரு கொடூரமான செயலை செய்வதற்கான எண்ணத்தை அந்தத் தாய் உள்ளத்தில் யார் விதைத்தது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
பிறக்கும் குட்டிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது அவை அனைத்திற்கும் போதுமான அளவு உணவு கொடுத்து வளர்ப்பதென்பது சிரமமான காரியம். அதனால் ஒன்றிரண்டை வைத்துக்கொண்டு மற்றவற்றை தின்பதால் தனது உடலுக்கு அதிக கலோரிகளும் சக்தியும் கிடைக்குமென அந்தத் தாய் நினைக்கிறது.
இரண்டு குட்டிகளை வைத்துக்கொண்டு மற்றதை சாப்பிட்டு விட்ட தாயிடம் ஆராய்ச்சியாளர்கள் மேலும் இரண்டு குட்டிகளை கொண்டு வந்து வைத்து சோதனை செய்ததில், தாய் அந்த புதிய குட்டிகள் இரண்டையும் தின்று விட்டது. இதன் மூலம் இந்தக் காரணம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தான் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய விழையும்போது குட்டிகள் தடையாய் இருக்குமென சில தாய்க்குலம் நினைக்கவும் வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, சில குட்டிகள் ஆரோக்கியக் குறைபாடுகளோடு, மந்த புத்தியும், சுறுசுறுப்பின்றியும் இருக்கலாம். அவற்றைத் தேடிப்பிடித்து தாய் தின்றுவிடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆரோக்கியமான குட்டிகளை வளர்க்க தனக்கு சக்தி கிடைக்கும் எனவும் அந்த்த் தாய் உள்ளம் நினைக்கலாம்.
சீனா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள பாம்பு ராணி போன்ற ஊர்வன இனத்தை சேர்ந்த விலங்கு முட்டையிட்டு அடைகாக்க தயாராகையில், பாம்பு போன்ற எதிரி, முட்டைகளை குடிக்க வரும். பாம்பு ராணி, பாம்பு முட்டைகளைக் குடித்து சக்தி பெறுவதற்குப் பதில் தாமே அதைக் குடித்து சக்தி பெறலாமே என்றெண்ணி அவசரமாக முட்டைகளை உடைத்து தானே குடித்துவிடும்.
பிறந்த குட்டியிடமிருந்து வரும் ஒருவித ஈர்ப்பான வாசனை, தாயிடம் டோபமைன் என்ற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்து, குட்டியை தின்றுவிட வேண்டும் என்ற தனது ஆவலை நிறைவேற்றிக் கொள்ளவும் வைக்கிறது.
இந்த மாதிரியான சூழல் நீடிக்கையில் ஒரு குறிப்பிட்ட விலங்கு சந்ததியின்றி அந்த இனமே அழிந்துவிடும் வாய்ப்பும் உருவாகிறது. என்ன செய்வது? படைக்கும்போதே இறைவன் இந்த மாதிரி விலங்குகளின் அணுவிற்குள் அந்த மாதிரி எண்ணத்தை வைத்தே படைத்து விடுகிறான்.