
ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் கடலில் 200 வருடங்கள் வயதான திமிங்கலம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிகளவு வருடங்கள் வாழும் ஒரே உயிரினமாக இது கருதப்படுகிறது. இந்தத் திமிங்கலம் 1814ம் வருடம் பிறந்ததாக அறியப்படுகிறது. மாவீரன் நெப்போலியன் நடத்திய போர்கள், அமெரிக்க சிவில் போர், உலகப் போர்கள், டிஜிடல் புரட்சி மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றங்கள் இவை அத்தனையும் தாண்டி இது இன்னும் உயிரோடு உள்ளது.
மேலும், இது 268 ஆண்டுகள் உயிர் வாழக் கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள். தொழிற்புரட்சி, உலகப்போர் சோகங்கள் மற்றும் சந்திரனில் மனிதன் காலடிவைத்தது, இன்டெர்நெட் யுகம் இது அனைத்தையும் கடந்து இந்தத் திமிங்கலம் உயிர் வாழ்வது ஆச்சர்யமானது.
மிகவும் குளிர்ந்த ஆர்க்டிக் கடலிலேயே இது வசித்து வருகிறது. இதை Bowhead திமிங்கலம் என்று கூறுகிறார்கள். இதன் பெரிய மண்டை கடலின் ஐஸ் கட்டிகளை உடைத்து அனாயாசமாக கடலில் வசிக்கக் கூடிய தன்மையைப் பெற்றுள்ளது. இதன் கண்களின் லென்சை பயோகெமிகல் அனாலிசிஸ் மூலம் ஆய்வு செய்து இதன் வயதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
தற்போது கடலின் சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. நாளுக்கு நாள் கடல் சூடாகி வருகிறதாம். மேலும், போக்குவரத்து கப்பல்களால் அதிக ஆபத்து இந்தத் திமிங்கலத்தின் வசிப்பிடத்துக்கு ஏற்பட்டுள்ளதாம். இந்த போஹெட் திமிங்கலம் முழுக்க முழுக்க ஆர்க்டிக் கடலின் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையிலேயே வாழ்வதால், அதற்கான நல்ல சூழலை அமைத்துத் தர வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் தேசிய விஞ்ஞானக் கழகம் இந்தத் திமிங்கலம் பற்றிய செய்திகளைத் தந்திருக்கிறது. மனித உயிரைத் தாண்டி பல வருடங்களாக வாழும் இந்தத் திமிங்கலத்தை அதிசய உயிரினமாகக் கருதுகிறார்கள்.