
முதலையின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன. முதலைக் கண்ணீர் எப்படி உருவாகிறது என்பதை இப்பகுதியில் காண்போம்.
எல்லாவிதமான முதலைகளும் வேகமாக பாயும் தன்மையுடையது. இவை தரையில் நடக்கும்போது கால்களை பயன்படுத்தினாலும், ஒரு வகையான வயிற்று அசைவினால் உடலை பாம்புபோல நெளித்து நெளித்து நடக்கும். கால்களை வெளியே இரு பக்கங்களிலும் இன்னும் சப்பையாக விரித்து கொண்டு துடுப்பு வலிப்பதுபோல் வாலை இங்கும் அங்கும் மாற்றியவாறு முன்னோக்கி நடக்கும். சகதியான ஆற்றுப் பகுதிகளில் சறுக்கிய வண்ணம் இறங்கும்போது வேகம் அதிகரிக்கும். வேகமாக நடக்கும் நேரங்களில் ஓடிவரும் நாயைப்போல இவைகள் மூச்சிரைப்பதும் உண்டு.
முதலைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை. வெப்பத்தை அவை வாய் மூலமே வெளியேற்றுகின்றன. ஆற்றங்கரை ஓரங்களில் இவை ஆவென்று வாயைப் பிளந்தவாறு படுத்திருப்பதைக் காணலாம். இது கோபமான ஆவேசத்தினால் அல்ல. வியர்வையை வாய் வழியாக வெளியேற்றி உடலை குளிர்விக்கும் பொருட்டே அவ்வாறு படுத்திருக்கின்றன.
இவை இறையை பிடிப்பதற்கு அதிக நேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது அவற்றின் உடலில் பெரும் பிராண வாய்வு குறைவு ஏற்படுகிறது. இதை ஈடுசெய்ய இவை இரையைப் பிடித்து உண்ணும் போது தனது வலதுபுற இரத்தத் தமணியை அடைத்துக் கொண்டு, இடதுபுற பெருந்தமணியை மட்டும் திறந்து கரியமிலவாயு நிறைந்திருக்கும் ரத்தத்தை வேகமாக தசைகளுக்கு செலுத்துகிறது. தசைகளின் மூலமாக இரைப்பைக்குள் செலுத்தப்படும் இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலங்களின் சுரப்பையும் விரைவாக்கி, உண்ட இரையின் தசைகளையும் எலும்பையும் எளிதில் ஜீரணித்து விடுகிறது.
உண்மையான வருத்தம் இல்லாமல் பொய்மைக்காட்டி யாராவது அழுவதைக் கண்டால் முதலைக்கண்ணீர் விடுகிறான் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது முதலைகள் உயிர்களைப் பிடித்து உண்ணும்போது கண்ணீர்விட்டு அழுகின்றன என்ற மூடநம்பிக்கை யிலிருந்து உருவானதாகும். ஆனால் உண்மையிலேயே அவை தன் இரையை உண்ணும்போது கண்ணீர் விடுகின்றன என்பது நமக்கு வியப்பைத் தருகிறது.
அப்படி முதலைகள் அழுவது துக்கத்தினால் அல்ல. அது உடலியல் ரீதியாக ஏற்படும் ஒரு காரிய நிகழ்வுதான். அவை இரையை உண்ணும்போது கண்கள் பெருத்து குமிழியிட்டுக் கண்ணீர் வழியும். காரணம் என்னவென்றால், அவற்றின் சைனஸ் குழிகள் வழியாக அழுத்தம் பெறும் காற்று சென்று கண்ணீர் சுரப்பிகளில் இருக்கும் கண்ணீரையும் சேர்த்துக்கொண்டு கண்கள் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியேறி தீரும்வரை கண்ணீரோடு சேர்ந்து குமிழியிட்டு வடிந்துக் கொண்டிருக்கும். இதுவே முதலைக் கண்ணீருக்குக் காரணம்.