
இந்து மகா சமுத்திரத்தின் உள்ளே, கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்குவது மட்டுமின்றி, சுற்றுப்புறசூழலை சமநிலையில் வைத்திருக்கவும் உதவி புரிகின்றன அங்குள்ள பச்சை நிற மீன் வகைகள். அவற்றில் நான்கு வகை மீன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. நெப்போலியன் ராஸ்ஸே (Napoleon Wrasse): இவ்வகை மீன்களின் உடல் மிகப் பெரிய அளவிலானது. இதன் நிறம் பசுமை கலந்த நீலமாக உள்ளது. இதன் முகம் பல சிக்கலான வடிவங்கள் கொண்ட அமைப்புகளால் ஆனது. நெப்போலியன் ராஸ்ஸே மீன்கள் கடலுக்கடியில் உள்ள பவளப் பாறைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. பவளப் பாறைகளில் பவளத்தை உட்கொண்டு வாழும் முள் கிரீடம் நட்சத்திர மீன்களை நெப்போலியன் ராஸ்ஸே தனக்கு உணவாக்கிக் கொள்கிறது. இதன் உருவத்திற்கு நேர் எதிராக இதன் செயல்பாடுகள் மெதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
2. க்ரீன் க்ரோமிஸ் (Green Chromis): பச்சை நிற மீன்களில் மிக அழகானது க்ரீன் க்ரோமிஸ். இது அளவில் சிறியது. அமைதியான குணம் கொண்டது. இதன் பசுமையும் நீல நிறமும் நிறைந்த செதில்கள் சூரிய ஒளியில் வைரம் போல் மின்னக்கூடியவை. அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து பவளப் பாறைகளை இவை சுற்றிக்கொண்டிருக்கும்.
3. க்ரீன் பேரட் ஃபிஷ் (Green Parrotfish): இதன் நிறம், பச்சை, ஊதா மற்றும் ரத்தினக் கல் நிறத்தின் சாயல் சேர்ந்த கலவையாக இருக்கும். பவளப் பாறைகளைச் சுற்றி வாழ்ந்து வரும் மீன்களிலேயே மிக அழகானது க்ரீன் பேரட் ஃபிஷ். பறவையின் அலகு போன்ற இதன் பற்களின் அமைப்பு, பவளங்கள் மீது படர்ந்திருக்கும் பாசிகளை (Algae) உட்கொள்ள உதவியாயிருக்கிறது. இதன் மூலம் பாறைகளில் பவளம் செழித்து வளர வாய்ப்பாகிறது. ஆழமற்ற நீர் நிலைகள் மற்றும் கடற்புல் வளர்ந்திருக்கும் இடங்களிலும் க்ரீன் பேரட் ஃபிஷ்களை அடிக்கடி காணலாம்.
4. க்ரீன் மூன் ராஸ்ஸே (Green Moon Wrasse): 'பளிச்'சென்ற பச்சை நிற உடலில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் நீல நிறத்தின் சாயல் கொண்ட திட்டுகள் உடையது க்ரீன் மூன் ராஸ்ஸே. இது பகல் முழுவதும் சுறுசுறுப்பாக பவளப் பாறைகளைச் சுற்றிக்கொண்டிருக்கும். அங்குள்ள நண்டுகள், இறால் போன்ற ஓட்டுடலி மற்றும் நத்தைகள், சிப்பிகள் மற்றும் கணவாய் போன்ற மெல்லுடலிகளையும் கண்டுபிடித்து உணவாக உட்கொள்ளும். இதன் குட்டிகள் வெவ்வேறு நிறங்களில் தோற்றமளிக்கும்.
பவளப் பாறைகள் அதிகளவில் நிறைந்திருக்கும் பகுதிகளில் வாழ்ந்து வரும் இவ்வகை மீன்கள் சுற்றுப்புற சூழலை சமநிலையில் வைக்க உதவி புரிந்து, பவள உற்பத்தியை பெருகச் செய்வது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம் எனலாம்.