'ஹாட்ஸ்பாட்', 'எண்டமிக்' என்பது என்ன தெரியுமா?

Hotspot
Hotspot
Published on

யிரியலில் பல்வகைத் தன்மைகளை  பாதுகாப்பதில் சுற்றுச்சூழலின் பங்கு இன்றியமையாதது. நீண்ட மலைத்தொடர்களும், மரங்கள் அடர்ந்த காடுகளும், பச்சைபசேல் என்ற புல்வெளிகளும், நீர்வீழ்ச்சிகளும், இசைப்பாடும் பறவைகளும், வண்ணமயமான வன விலங்குகளும் உயிரி பல்வகை தன்மையின் புற வடிவங்கள். அவை நம் அயர்ந்த மனதிற்கு ஆறுதலையும், சோர்ந்த உடலை உற்சாகப்படுத்தவும், பொழுதுபோக்குக்கும், புத்துணர்வுக்கும் கலை உணர்வுக்கும் பெட்டகங்களாகத் திகழ்கின்றன. உயிரிப் பல்வகைமை கூறும் செய்திகளை இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே வளர்கின்ற, பல்வேறு உயிர் வகைகளை அதிக அளவில் தன்னகத்தே கொண்ட ஒரு குறிப்பிட்ட புவியியல் அமைப்புடைய பகுதிக்கு ‘ஹாட்ஸ்பாட்’ என்று பெயர். ஹாட்ஸ்பாட் என்பது புவியியல் அதிக வளமானதும் அங்குள்ள தாவரங்களும், விலங்குகளும் அதிக அச்சுறுத்தலுக்கு ஆட்படுபவையாகவும் இருக்கின்றன. எனவே, இவை அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அறிஞர் நார்மல் மியார்ஸ் என்பவர் ஹாட்ஸ்பாட் கருத்தினை 1988ல் வெளியிட்டார். குறிப்பாக,  ஹாட்ஸ்பாட் என்பது அங்குள்ள தாவர இனங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது .

ஒரு இடம் ஹாட்ஸ்பாட் என தேர்வு செய்யப்படுவதற்கு அந்தப் பகுதி 1500 எண்டமிக் தாவர இனங்களையோ அல்லது உலக மொத்த தாவர இனங்களில் 0.5 விழுக்காட்டையோ பெற்றிருக்க வேண்டும். அந்தப் பகுதி தன்னிடத்தில் உள்ள மூல வாழிடங்களில் 70 சதவிகிதம் இழந்திருக்க வேண்டும்.

எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளரும் தாவரங்களோ விலங்குகளோ அந்தப் பகுதியில் மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்படுவது . உலகில் வேறு எந்த மூலையிலும் இல்லாததாக அது இருக்கும்.  இயற்கை மற்றும் செயற்கையின் பல்வேறு காரணங்களால் அவை மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து பின்பு அழிவு நிலைக்கும் கூட வந்து விடும்.

அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மிகைப் பல்வகைமை (ஹாட்ஸ்பாட்) இடங்கள் இரண்டு உள்ளன. ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றொன்று கிழக்கு இமாலயப் பகுதி ஆகும். இவற்றின் எல்லை அண்டை நாடுகளுக்கும் நீண்டுள்ளது. இப்பகுதிகளில் ஏராளமான பூக்கும் தாவர வகைகளும், வண்ணத்துப்பூச்சிகளும், இருவாழ்விகளும், ஊர்வனவும், பாலூட்டிகளும் தங்களது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டுள்ளன. இவ்விடங்கள் அதிக அளவு தனித்தன்மை வாய்ந்த உயிர்ப்பல்வகைமை உடையனவாகத் திகழ்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்: இந்தியாவின் மேற்கு கடற்கரையோரம் அதற்கு இணையாக 1600 கிலோமீட்டர் தூரம் பரவியுள்ளது. இது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கிறது. இம்மலைத் தொடரில் கீழே இருந்து 500 மீட்டர் உயரம் வரை பசுமை இலைக் காடுகளும் 500 மீட்டர் உயரம் முதல் 1500 மீட்டர் உயரம் வரை சதுப்பு நிலக்காடுகளும் காணப்படுகின்றன.

இங்குள்ள இரு உயிரியல் பல்வகைத் தன்மை மையங்கள்: 1. அகஸ்தியர் மற்றும் அமைதி பள்ளத்தாக்கு,  2. புதிய அமம்பலம் காப்புக்காடு. மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் ஸ்ரீலங்கா காடுகளுக்கும் இடையே 400 மீட்டர் தூரம் நிலத்தாலும் நீராலும் பிரிக்கப்பட்டு இருந்தாலும், அவை இரண்டும் ஒரே ஹாட்ஸ்பாட் வரிசையில்தான் சேர்க்கப்பட்டுள்ளது . காரணம் அவை இரண்டும் ஒரே தன்மையானதாக இருப்பதுதான். இங்கு ரோஸ்வுட் , பிசப்உட், மூங்கில்கள், அடிநூன், பிரேரா, வாகாடி போன்ற தாவர இனங்களும் , புலி, ஆசிய யானைகள், சிங்கவால் குரங்குகள் போன்ற விலங்கினங்களும் பலவித பறவை இனங்களும் பூச்சியினங்களும் இங்கு வாழ்கின்றன. நீலகிரி உயிர் வாழின மண்டலமாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இப்பகுதிக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது.

இப்பகுதியில் உள்ள எண்டமிக் இனங்களின் எண்ணிக்கை: தாவர வகைகளில் 4,780 இனங்கள். அதன் எண்டமிக் இனங்கள் 2,180 ஆகும். பாலூட்டிகளில் 140 இனங்கள். அதில் எண்டமிக்கினங்கள் 38. பறவைகளில் 528 இனங்கள். எண்டமிக் இனங்கள் 40. ஊர்வனவற்றில் 259 இனங்கள். அதில் எண்டமிக் இனங்கள் 161.

இதையும் படியுங்கள்:
அதிக சக்தியுடன் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க உதவும் 6 உணவுகள்!
Hotspot

கிழக்கு இமய மலைப் பகுதி: இப்பகுதி வடகிழக்கு இந்தியா மற்றும் பூடான் வரை நீள்கிறது. ஆழமான மற்றும் தனித்து இருக்கின்ற பள்ளத்தாக்குகளைக் கொண்டது. வெப்ப மண்டல காடுகளை உடையது. வளமான தாவரங்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதி கம்போடியா, வியட் நாம், தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் ,சீனா மற்றும் அந்தமான் தீவுகளையும், வடகிழக்கு இந்திய பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இங்குள்ள வெப்ப மண்டல மழைக்காடுகளில் ஏராளமான பூக்கும் தாவரங்களும், பழங்கால மூடு விதைச் செடிகளாகிய 'மேக்னோலியாசியா' போன்றவையும், பழைமையான இன செடிகளாகிய  'பிட்டுலா' போன்றவையும் காணப்படுகின்றன. இப்பகுதியில் மிகப்பெரிய உயிர்ப்பல்வளத்திற்குக் காரணமாக உள்ள தாவர மற்றும் விலங்கினங்களின் எண்ணிக்கை, தாவர இனங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 500. எண்டமிக் இனங்களின் எண்ணிக்கை 7000. பாலூட்டி இனங்களின் எண்ணிக்கை 329. எண்டமிக் இனங்களின் எண்ணிக்கை 73. பறவை இனங்கள் எண்ணிக்கை 1,170 எண்டமிக் இனங்களின் எண்ணிக்கை 140. ஊர்வன இனங்களின் எண்ணிக்கை 484. எண்டமிக் இனங்களின் எண்ணிக்கை 21. இருவாழ்விகள் இனங்களின் எண்ணிக்கை 202. எண்டமிக் இனங்களின் எண்ணிக்கை 114. இங்குள்ள எண்டமிக் இனங்கள் அழிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக வேண்டி இப்பகுதியை தேசிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிர் பல்வளத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் என்று பார்த்தால் காடுகள் அழித்தல், நகர் மயமாக்கல், தொழில்மயமாக்கல், மாசுத்தொல்லை, புதிய இனங்களின் அறிமுகம், மருந்துகள் தயாரித்தல், விலங்கு வணிகம், திருட்டுத்தனமாக வனவிலங்குகள் கடல்வாழ் உயிரினங்கள் வேட்டையாடப்படுதல், மனித விலங்குகளின் மோதல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

தீர்வுகள்: வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கட்டடப் பணிகள் எதையும் காட்டுப்பகுதியில் சுற்றிலும் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வறட்சியான நேரங்களில் காட்டு விலங்குகள் நீர் அருந்த வசதியாக இயற்கை சூழ்நிலை மாறாவண்ணம் சிறிய நீர்த்தேக்கங்கள் அமைத்துத் தரலாம்.

ஏற்கெனவே மரங்கள் இருந்தவை மனிதர்களால் வெட்டப்பட்டோ அல்லது இயற்கை சீற்றங்களாலோ அழிந்து இருந்தால் அந்த இடங்களில் புதிதாக மரங்கள் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

காட்டு விலங்குகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வந்தால் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் விரட்டி அடிக்க மலைவாழ் மக்களால் பின்பற்றப்படுகின்ற பழைய வழக்கமான முறைகளை பற்றிய பயிற்சியை ஏனைய மக்களுக்கும் அளிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com