அதிக சக்தியுடன் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க உதவும் 6 உணவுகள்!

Excited all day
Excited all day
Published on

நாம் வாழும் இந்த பரபரப்பான சூழலில் நமக்குத் தேவை ஆரோக்கியமான உடல் நிலையும், நாள் முழுக்க சுறுசுறுப்புடன் இயங்கத் தேவையான சக்தியும்தான். இதைப் பெறுவதற்கு காலை உணவில் இருந்து தொடர்ந்து நாம் உட்கொள்ளும் உணவுகளே உதவ முடியும். ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக நம் உணவுடன் நாம் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டிய 6 வகை உணவுப்  பொருள்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஓட்ஸ்: காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் நமக்குத் தேவையான சக்தியை உடலுக்குள் மெதுவாக செலுத்தக் கூடியவை. இந்த சத்து ஓட்ஸில் மிக அதிகம் நிறைந்துள்ளது. இவை படிப்படியாக நாள் முழுவதும் சக்தியை தேவைப்படும் அளவு உடலுக்குள் செலுத்திக்கொண்டே இருக்கும். ஓட்ஸில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்களே இதற்குக் காரணம். ஓட்ஸை முருங்கை இலைகளுடன் சேர்த்து அடையாக அல்லது உப்புமாவாகவோ கஞ்சியாகவோ செய்து காலை உணவாக எடுத்துக் கொண்டால் அது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்து சக்தியின் அளவில் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கும்.

2. வாழைப்பழம்: விரைவாகவும் சுலபமான முறையிலும் உடலுக்கு சக்தி தர உதவுபவை வாழைப்பழங்கள். இவற்றில் இயற்கையாகவே சக்ரோஸ், ஃப்ரக்டோஸ், குளுகோஸ் போன்ற சர்க்கரை சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தில் அதிக நேரம் சக்தி தரவும், தசைகளின் இயக்கத்தை நல்ல முறையில் பராமரிக்கவும் உதவக்கூடிய பொட்டாசியம் சத்தும் உள்ளது.

3. பாதாம் பருப்பு: பாதாம் பருப்பில் புரோட்டீன், நன்மை தரும் கொழுப்புகள் மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு சக்தி தர உதவுவதுடன் நீண்ட நேரம் பசி உணர்வை தடுத்து நிறுத்தி வைக்கவும் செய்யும். மேலும் இதிலுள்ள மக்னீசியம் உண்ணும் உணவுகளை சக்தியாக மாற்றி, உடல் சோர்வு நீங்க உதவும்.

4. பசலைக் கீரை: இரும்புச் சத்து தரக்கூடிய முக்கியமான உணவுகளில் பசலைக் கீரையும் ஒன்று. இது இரும்புச் சத்து குறைபாட்டால் உண்டாகும் அனீமியா நோய் வராமல் தடுக்கவும் அதன் மூலம் உடலை சோர்வடையாமல் பாதுகாக்கவும் உதவும். மேலும் பசலைக் கீரையானது இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சரியான அளவு ஆக்ஸிஜன் சென்றடைய சிறந்த முறையில் உதவும். இதனால் சக்தியின் அளவில் குறை ஏற்படாமல் உடல் சீராக இயங்கும்.

இதையும் படியுங்கள்:
உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!
Excited all day

5. ஸ்வீட் பொட்டட்டோ: இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் மிக அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தொடர்ந்து சக்தியை அளித்துக் கொண்டிருப்பவை. மேலும், இதிலுள்ள மக்னீசியம் சத்தானது உடலுக்குள் செல்கள் உருவாகும் செயலுக்குத் தேவையான சக்தியை அளிக்க உதவும்.

6. முட்டை: முட்டையில் உடலுக்குத் தேவையான ஒன்பது வகை அமினோ ஆசிட்களும் அடங்கியிருப்பதால் இது ஒரு முழுமை பெற்ற புரோட்டீன் சத்தைத் தரக்கூடிய அற்புதமான உணவாகக் கருதப்படுகிறது. உடற்பயிற்சி செய்து முடித்த பின் முட்டையை சாப்பிடுவது தசைகளில் ஏற்பட்ட இழப்பை மீட்டெடுக்கவும், தொடர்ந்து உடலுக்கு சக்தி கிடைக்கவும் உதவும்.

மேலே கூறிய 6 உணவுகளையும் உட்கொள்வதால் நம் உடலில் சக்தியின் அளவு அதிகரிக்கும்; சோர்வு நீங்கும். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன் மற்றும் உடலுக்குத் தேவையான வைட்டமின், மினரல்கள் அடங்கிய சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலம் உடலில் சக்தியின் அளவை நாள் முழுவதும் நிலைத்து நிற்கச் செய்து சுறுசுறுப்பாக செயல்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com