
உலகின் மிகப்பெரிய உயிரினங்கள், சூழல்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால், நீலத் திமிங்கலம், இராட்சத ரெட் வுட் ட்ரீ, நீண்டு உயர்ந்த மலைகள் போன்றவை நம் நினைவுக்கு வரும். இவற்றையெல்லாம் தாண்டி நம் கண்ணுக்குப் புலப்படாத ஓர் உயிரினம் உள்ளது. அது ஒரு மரமோ விலங்கோ அல்ல.
அமெரிக்காவின் ஆரெகன் மாநிலத்தில் உள்ள நீல மலை (Blue Mountains) பகுதியில், மரங்களடர்ந்த பூமிக்கடியில் 2300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அர்மிலாரியா ஆஸ்டோயீ (Armillaria Ostoyae) என்னும் பெயரில் வளர்ந்து வரும் இராட்சதப் பூஞ்சை அது. இது காளான் வகையைச் சேர்ந்ததல்ல. காளான்களின் இணைப்புத் தாவரம் எனவும் இதைக் கூறமுடியாது.
இவை வெள்ளை நிறத்தில், நூல் போன்ற இழைகளாலான அடர்ந்த மைசீலியம் என்னும் வலைப்பரப்பை உண்டுபண்ணி, இறந்த மரத்துண்டுகள் மற்றும் தாவரக் கழிவுகளை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. அதில் உற்பத்தியாகும் பழங்களே காளான் வடிவில் பரந்து விரிந்து பெருகி வருகின்றன. இப்பழங்கள் சில நேரங்களில் பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட சீசனில் காணப்பட்டு பின்பு மறைந்துவிடும்.
இவை சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு வளர ஆரம்பித்து, எவரின் பார்வையிலும் படாமல் அமைதியாக, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களின் தொடர்புக்கெட்டாத இடத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, செய்திகளில் அடிபடாமல், உலகின் சுவாரஸ்யம் நிறைந்த சிக்கலான உயிரினங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது இந்த பூஞ்சைத் தாவரம்.
இதனை ஓர் அசாதாரண தாவரம் என்று கூறுவதற்கு அதன் பிரமாண்டமான சைஸ் காரணம் என்று சொல்ல முடியாது. இழைகளாலான வலைப்பரப்பால் இணைக்கப்பட்டு மிக அதிகமான இடத்தை ஆட்கொண்டு ஒற்றைத் தாவரமாக வளர்ந்து வருவதே இதன் சிறப்பு. மரபணு ரீதியாக, இதன் ஒவ்வொரு
பாகமும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டுள்ளன. விஞ்ஞானபூர்வமாக அறிந்ததில் இதன் நம்பமுடியாத சைஸ், வயது மற்றும் ஒரே தாவரமாக வளர்ந்து வரும் இயல்பு ஆகியவை இதை மிகப்பெரிய அளவிலான, பழமை வாய்ந்த உயிரினங்களில் ஒன்றாக கருதச்செய்கிறது.
இதனால் பூமிக்குக் கிடைக்கும் முக்கிய நன்மை என்ன வென்றால், இது ஒரு டீகம்போசராக (decomposer) செயல் படுவதுதான். இறந்த மரங்கள், உதிர்ந்த இலைகள் மற்றும் அனைத்து தாவரக் கழிவுகளையும் உடைத்து அவற்றை ஊட்டச் சத்துக்களாக மாற்றி மண்ணுக்கு ஆரோக்கியமும் வளமும் சேர்க்க உதவுகின்றன. இதனால் புது வகைத் தாவரங்கள் வேரூன்றி வளரவும்.
சுற்றுச் சூழல் அமைப்பு (Eco system) சமநிலை பெறவும் முடிகிறது. இப் பூஞ்சைத் தாவரம் இல்லையெனில் அக்காடுகளில், தாவரக் கழிவுகள் மலைபோல் உயர்ந்து கிடக்கவும், மறுசுழற்சி முறையில் கழிவுகள் ஊட்டச் சத்துக்களாக மாறவும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.