
ஜப்பானில் காணப்படும் ‘ஷிமா எனகா’ (Shima Enaga) எனும் க்யூட்டான சிறிய வெள்ளை நிறப் பறவை தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது. பனி போன்ற தூய வெள்ளை நிறத்தில் 'புசு புசு' உரோமத்துடன், கருப்பு மணி போன்ற இரண்டு சிறிய கண்கள் மற்றும் வெளியே தெரிந்தும் தெரியாத சிறு மூக்குடன் இந்தப் பறவை அங்கும் இங்கும் செல்கையில், ஸ்னோ பால் ஒன்று பறந்து செல்வது போன்றே தோன்றுகிறது.
உலகிலேயே க்யூட்டான பறவை எனப் போற்றப்படும் ஷிமா எனகா, ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள 'ஹொக்கைடோ' (Hokkaido) என்ற தீவில் பனி சூழ்ந்த காடுகளுக்குள் வாழ்ந்து வருகிறது. உறையும் பனிப் பிரதேசமே இதற்குப் பிடித்தமான வாழ்விடமாக உள்ளது.
யுரேசியா (Eurasia)வில் காணப்படும், ‘லாங் டைல்டு டிட்’ (Long Tailed Tit) என்ற பறவை இனத்தின் கிளை இனமாக வந்துள்ள ஷிமா எனகா அறிவியல் ரீதியாக Aegithalos caudatus japonicus எனப்படுகிறது. டிட் பறவைக்குள்ள புருவம் ஷிமாவுக்கு இல்லை. இது ஷிமாவுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது.
இதை உப்பலான உருண்டையாகக் காட்டும் உரோம அமைப்பு அழகிற்காக அமைந்ததல்ல. கடுமையான குளிர் நேரத்தில் உடலை சூடேற்றுவதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட வின்டர் கோட் எனலாம். இப்பறவை சமூக அக்கறையுடன் எப்பவும் குழுவாக, மெல்லிய குரலில் ஒன்றுக்கொன்று செய்தியைப் பரிமாறிக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கும்.
அடர்ந்த வனங்களில், வேட்டையாடுபவர்களால் இவற்றை சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில் பனிக்கட்டிகளின் பின்னணியில் தம்மை உருமாற்றி மறைந்து கொள்வதில் கில்லாடி இனம் இது. ஷிமா எனகா தனது கூட்டை மிக விஸ்தாரணமாக, உருமாற்றிக்கொள்ளும் வகையில், கற்பாசி, பூஞ்சை மற்றும் இறகுகளால் உருவாக்குகிறது. அதிக குளிர் மற்றும் வேட்டைக்காரர்களிடமிருந்து தனது முட்டைகளைப் பாதுகாக்கவே இத்தனை முன்னேற்பாடுகளும் என்பது வியப்பளிக்கிறது.
மென்மையான உருண்டை வடிவில் ஒன்பது கிராம் அளவு எடை கொண்ட ஷிமா, சுறுசுறுப்புடன் வேகமாகப் பறக்கவும் குதித்தோடவும் திறமை கொண்டது. ஜப்பானியர் ஷிமா எனகாவை தூய, வெகுளித்தனமான, குளிர் கால வசீகரம் எனப் போற்றி, இதன் உருவத்தை வர்த்தகப் பொருட்கள் மீது பதித்து பெருமைப்படுத்துகின்றனர்.
உச்சபட்ச குளிர் மாதங்களிலும் ஷிமா எனகா ஒரு பொம்மை போல் களிப்புடன் பனி மூடிய காடுகளுக்கிடையில் இங்குமங்கும் பறந்து திரிவது இயற்கை நமக்களித்துள்ள மென்மையான சந்தோஷங்களை நினைவூட்டுவதாக உள்ளது.