
அரிசி உற்பத்தியில் சீனா இதுவரை முதலிடம் வகித்து வந்தது. தற்போது அமெரிக்க வேளாண்மைத் துறையின் (USDA) வெளியிட்ட தகவலின்படி இந்தியா, அரிசி உற்பத்தியில் சீனாவை பின்தங்கச் செய்துள்ளது. தரவுகளின்படி 2024 - 25ம் ஆண்டில் சீனாவின் அரிசி உற்பத்தி145.28 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. இதே ஆண்டில் இந்தியா 149 மெட்ரிக் டன் உற்பத்தியுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட அரிசி உற்பத்தியில் இந்தியா 3.7 சதவிகிதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.
இந்தியா அரிசி உற்பத்தியில் முதலிடம் பெற்றதில் நீண்ட கால சவால்கள் நிறைய உள்ளன. சீனாவை போல விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளும், அரசின் நீடித்த ஆதரவும் இந்திய விவசாயிகளுக்கு நேரடியாக கிடைப்பது இல்லை. சீனாவின் விவசாயத் திட்டம் அங்குள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சென்று உள்ளது. அங்கு அரசு கொடுக்கும் ஆதரவுகளை வைத்து உற்பத்தியை பெருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. சீன விவசாயிகளுக்கு லாபமான விலையையும் அரசே நிர்ணயித்து அவர்களுக்கு உடனடியாக வழங்கி விடுகிறது.
சீனாவின் தொழில் நுட்பம் மிகவும் மலிவு விலையில் விவசாய உபகரணங்களை பெற வைக்கிறது. அங்கு ஒவ்வொரு விவசாயியிடமும், விவசாய எந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் கட்டாயம் இருக்கும். அவை மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால் வாடகை எந்திரங்கள், உபகரணங்கள் என தேவையில்லாத செலவுகள் அவர்களுக்கு இல்லை. மிக முக்கியமாக, சீன விவசாயிகள் நீண்ட காலமாக லாபம் பெறுவதால், விவசாயப் பணிகளுக்காக வங்கிகளில் கடன் வாங்குவது இல்லை.
இதே சூழல் இந்தியாவில் முற்றிலும் எதிராக உள்ளது. சீனாவை விட விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. ஆனால், இந்த திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. பல திட்டங்கள் பற்றி அவர்கள் அறிவதும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு பயிர் செய்ய கடன் வழங்குகின்றன. அதேநேரம் அவர்களின் முந்தைய வருட கடன்களும் நிலுவையில் உள்ளன. விவசாயத்தின் லாபம் பெரும்பாலும் பயிர் செய்யவே போய் விடுகின்றது.
இந்தியாவின் விவசாய எந்திரங்கள், உபகரணங்கள் விலை மிகவும் அதிகம். அதற்கு உண்டான பராமரிப்பு செலவுகளும் அதிகமாக உள்ளது. இந்திய விவசாயிகள் பெரும்பாலும் வாடகை எந்திரங்கள், உபகரணங்களை நம்பித்தான் உள்ளனர். அதோடு, விவசாயத் துறையில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறை , மாறி வரும் பருவ காலநிலைகள், திடீர் வெள்ளம், கனமழை போன்றவை எதிர்பாராத நேரத்தில் துயர் படுத்தும் சவாலாக உள்ளன. ஆயினும் அனைத்து சவால்களையும் கடந்து இந்திய விவசாயிகள் உற்பத்தியில் சாதித்து வருகின்றனர்.
அரிசி மட்டுமல்லாது, மற்ற பயிர் வகைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2024 - 25 பயிர் ஆண்டில், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டை விட 6 சதவிகிதம் அதிகரித்து, 353.2 மில்லியன் டன்னாக (MT) உயர்ந்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 - 25 பயிர் ஆண்டிற்கான உணவு தானிய உற்பத்தியின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, கோதுமை உற்பத்தி முந்தைய ஆண்டை விட 8 சதவிகிதம் அதிகரித்து 117.5 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
2024 - 25ம் ஆண்டில் பருப்பு வகைகள் உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரித்து 25.23 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 2024 -25ம் ஆண்டில் 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்து 42.6 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இதில் நிலக்கடலை 11.89 மெட்ரிக் டன்னும், சோயாபீன் 5.18 மெட்ரிக் டன்னும் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை அளவை எட்டியுள்ளது.