ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உருவாகி மேற்கு வங்கம், ஒரிசா வழியாக பாய்ந்தோடும் சுபர்ணரேகா ஆறு மிகவும் அதிசயமான ஆறாக விளங்குகிறது. இந்த ஆற்றில் பாய்ந்து வரும் தண்ணீரோடு தங்கமும் சேர்ந்து வருவது ஆச்சரியமான ஒன்றாக விளங்குகிறது.
சுமார் 474 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில் வரும் தங்கத் துகள்களை அப்பகுதியில் வாழும் மக்கள் பிரித்தெடுத்து அதை வைத்து தங்களது வாழ்க்கையை நடத்துவது அன்றாட வழக்கமாக உள்ளது. காலை சூரியன் உதயமாவது முதல் தொடங்கி, மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் வரை இந்த சுபர்ணரேகா ஆற்றில் வரும் மணலை சலித்து அதிலிருந்து தங்கத் துகள்களை பிரித்தெடுப்பதுதான் இந்த ஊர் மக்களின் அன்றாட முக்கியமான வேலையாகும்.
இந்த ஆற்றில் தண்ணீரோடு தங்கம் எப்படி சேர்ந்து வருகிறது என்பது இன்று வரை ஆய்வாளர்களால் அறிய முடியாத ஒரு ரகசியமாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் இப்பகுதியில் வாழும் மக்கள் மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் ஆற்று மணலை சலித்து தங்கத் துகள்களை பிரித்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தங்கத் துகள்கள் ஒரு அரிசி அல்லது அதை விட சிறு தானியத்தின் அளவை விட சிறியதாகத்தான் காணப்படுகிறது.
இந்த சுபர்ணரேகா ஆறு உருவாகும் பகுதி அல்லது பாய்ந்தோடும் இடத்தில் ஏதேனும் தங்க சுரங்கங்கள் உள்ளதா என ஆராய 2012ம் ஆண்டு மத்திய அரசு இரண்டு அமைப்புகளை நியமித்தும் எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை தங்கம் இருக்கும் பாறைகளில் தண்ணீர் வேகமாக வரும்போது ஏற்படும் உராய்வால் தங்கத் துகள்கள் இந்த ஆற்றில் அடித்து வரப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சுபர்ணரேகா நதியை பற்றி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய பல படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். இந்த நதியானது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் அருகிலுள்ள பல தொழிற்சாலைகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் இந்த ஆற்றில் ஒரு நீர் மின்நிலைய திட்டமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.