ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற 4 நெல் ரகங்கள் எவை தெரியுமா?

Aadi Pattam
Aadi Pattam
Published on

ஆடி மாதத்தில் விதைத்தால் பயிர்கள் நன்றாக வளர்ந்து, விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நிதர்சனம். அவ்வகையில் ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற பயர் வகைகள் என்னென்ன என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

கோடையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மழை பெய்யத் தொடங்கும் மாதம் தான் ஆடி. இம்மாதத்தில் நிலவும் பருவநிலை பயிர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் தான் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆடி மாதத்தில் நாம் பயிரிட்டால் அது நன்றாக விளைந்து, அதிக மகசூலைக் கொடுக்கும்.

ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் பூமி குளிர்ந்து, ஈரப்பதமாக இருக்கும். இந்நேரத்தில் மண், பாசன வசதிக்குத் தயார் நிலையில் இருக்கும். தண்ணீர் வசதியிருக்கும் விவசாய நிலங்களில், ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று நாற்று நடுவதும், விதைப்பதும் வழக்கமான ஒன்று. ஆடிப் பட்டத்தைத் தேர்வு செய்யும் விவசாயிகள், தரமான விதைகளை விதைநேர்த்தி செய்தால் அதிக மகசூல் கிடைப்பது நிச்சயம்.

ஆடி மாதத்திற்கு அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால், ஆடிப் பட்டத்திற்கு நீண்ட காலப் பயிர்களைத் தேர்வு செய்யலாம். 3 மாத காலப் பயிர்களைத் தேர்வு செய்தால், அறுவடையின் போது பயிர்கள் மழைநீரால் பாதிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

1. பொன்னி:

நீண்ட காலப் பயிரான பொன்னி ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த இரகமாகும். இப்பயிருக்கு குறைந்த உரமே போதுமானது. நல்ல விலைக்கு போகும் இப்பயரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ஏற்படுவது மிக மிக குறைவு என்பதால் நல்ல மகசூல் கிடைக்கும். ஆடியில் விதைத்தால், மழைக்காலம் முடிந்த பிறகு தான் அறுவடைக்கு வரும் என்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

2. பொன்மணி (CR 1009):

குண்டு நெல் என அழைக்கப்படும் பொன்மணியைப் பயிர் செய்ய அதிக பராமரிப்பு தேவைப்படாது. ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற, நல்ல விலை போகக் கூடிய நீண்ட கால பயிர்களில் இதுவும் ஒன்று. உறுதியாக அதிக மகசூலைத் தரும் என்பதால், விவசாயிகள் பொன்மணியை நம்பிக்கையுடன் விதைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நெல் விதைகளை எப்படி கடினப்படுத்த வேண்டும்? கடினப்படுத்துதலின் நன்மைகள் என்ன?
Aadi Pattam

3. சௌபாக்யா:

உண்பதற்கு ஏற்ற சுவையான இரகமான சௌபாக்யா பயிரை ஆடிப் பட்டத்தில் விதைத்தால், நல்ல மகசூல் கிடைப்பதுடன் நல்ல இலாபமும் கிடைக்கும்.

4. பாபெட்லா (BPT):

ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் மற்றொரு இரகம் தான் பாபெட்லா. இதுவும் மழைக்காலம் முடிந்த பிறகே அறுவடைக்கு வரும் என்பதால் எந்தக் கவலையும் இல்லாமல் விதைப்பை மேற்கொள்ளலாம்.

மேற்கண்ட இந்த 4 இரகங்களும் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இன்றி விளைவதால், உங்களுக்கு வேலை மிச்சமாகும். இந்தப் பயிர்களை ஆடி பதினெட்டாம் பெருக்கு அல்லது அதற்குப் பின் வெயில் சற்று குறைந்ததும் விதைப்பது நல்லது. அப்போது தான் வெப்பக் காற்றின் தாக்குதல் குறைவாக இருக்கும். குறைந்த உரம் தேவைப்படும் பொன்னியை வீட்டுத் தேவைக்கும் பயிரிட்டுக் கொள்ளலாம். இவற்றில் அண்டை மாநிலங்களில் விரும்பி உண்ணப்படும் பொன்மணி தவிர்த்து மற்ற இரகங்களின் அரிசி அளவில் சிறிதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com