கடலில் வாழும் ஒரு வகையான மீன் இனம் கடல் குதிரைகள். இவை பிற மீன்களை போலவே செவுள்களும், துடுப்புகளும் கொண்டுள்ளன. இருப்பினும் தலைப்பகுதி குதிரையைப் போலும், வால் பகுதி குரங்கின் வாலைப் போன்றும் நீண்டும் சுருண்டும் காணப்படும்.
உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் உள்ளன. அவை பெரும்பாலும் ஆழம் குறைந்த பகுதியில், கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன. இவை தனது வாலின் மூலம் கடல் தாவரங்கள், கடல் பஞ்சுகள் போன்றவற்றை பற்றி கொண்டு நிற்கவும் செய்யும். வாய் நீண்டு குழல் போலவும் காணப்படும். இவை பார்ப்பதற்கு முதலைக் குட்டியை போல் காட்சி தரும். அதிக நீரோட்டம் உள்ள பகுதியில் நீரில் அடித்துச் செல்லாமல் இருப்பதற்காக இவை தாவரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்.
மனிதர்களுக்கு தனித்துவமான கைரேகைகள் உள்ளதைப் போல் கடல் குதிரைகளுக்கும் அவற்றின் தலையில் ‘கோரோனெட்டுகள்’ என்று அழைக்கப்படும் தனித்துவமான எலும்பு கிரீடம் போன்ற அமைப்பு உள்ளது. இவற்றின் முக்கியமான உணவு சிறிய அளவிலான இறால்கள்தான். இவை உணவை உறிஞ்சும் தனித்துவமான திறனைக் கொண்டவை.
இவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இவை நிமிர்ந்து நீந்துகிறது. அதுவும் மிகவும் மெதுவாக. ஆண், பெண் என இரண்டு வகையான கடல் குதிரைகளுமே தங்களுடைய ஜோடியை கவர்வதற்காக பச்சோந்தி போல் தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
கடல்வாழ் உயிரினங்களில் கடல் குதிரையில் ஆண் உயிரினம் மட்டுமே குழந்தைகளைப் பெற்றெடுக்கிறது. அதாவது, குஞ்சு பொரிக்கிறது. பெண் கடல் குதிரைகள் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டு விடுகின்றன. முட்டைகள் குஞ்சு பொரிக்கும் வரை அவற்றை சுமந்து செல்வது ஆண்தான். ஆண் கடல் குதிரைகள் கங்காரு போல் ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளை பொரிக்கின்றன. ஒரு சென்டி மீட்டர் அளவே இருக்கும் குட்டிகள் ஒரே சமயத்தில் 50 முதல் 100 வரை வெளிவரும்.
கடல் குதிரைகள் இப்போது அழிந்து வரும் விலங்காக உள்ளது. மீன் பிடித்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்திற்கு இவை இரையாகின்றன. சீன மூலிகை மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இவை பெரும்பாலும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. கடல் குதிரைக்கு ‘ஸ்விம் பிளாடர்’ என்ற ஒரு அமைப்பு உள்ளது. இவை கடல் குதிரைகள் மேலும் கீழும் நகர உதவுவதுடன் காற்றின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
கடல் டிராகன்கள் (Sea dragons): இவை கடல் குதிரைகளைப் போலவே ஆண் கடல் டிராகன்கள் முட்டைகளை குஞ்சு பொரிக்கும் வரை காவலில் வைத்திருக்கும். பெண் கடல் டிராகன்கள் நூற்றுக்கணக்கான முட்டைகளை ஆண் டிராகன்களின் வாலருகே மென்மையான தோலின் ஒரு சிறப்பு நுண் குழாய்கள் நிறைந்த அடைகாக்கும் இணைப்பில் அவற்றை வைத்து விடும். குஞ்சுகள் வெளிவரும்போது இவை சுமாராக 20 மில்லி மீட்டர் (சுமார் 0.8 அங்குலம்) நீளம் இருக்கும்.
குழாய் மீன்கள் (Pipe fish): 51 வகை பைப் ஃபிஷ்கள் உள்ளன. இவை மிகவும் மெல்லிய, நீண்ட உடல் கொண்ட மீன்கள். இவை எலும்பு கவச வளையங்களால் மூடப்பட்டிருக்கும். நீண்ட குழாய் மூக்கு மற்றும் சிறிய வாய், ஒற்றை முதுகுத் துடுப்பு மற்றும் ஒரு சிறிய வால் துடுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இவற்றின் இனங்களைப் பொறுத்து 2 முதல் 65 சென்டி மீட்டர் வரை நீளமாக இருக்கும். பொதுவாக இவை அனைத்தும் கடல் சார்ந்தவை. இருப்பினும் சில நன்னீர் சூழலிலும் வாழ்கின்றன.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் இவை கடல் குதிரைகளைப் போலவே கருவுற்ற முட்டைகளை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாக்கின்றன. முட்டைகள் ஆணின் உடலின் வென்ட்ரல் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்ளும் அல்லது அடைகாக்கும் பையில் வைத்துக் கொள்ளும். அடைகாக்கும் பை தோலின் எளிய மடிப்புகளால் ஆனது.