

உலகத்திலேயே ஒரு நாளைக்கு அதிக அளவு பால் கொடுக்கும் விலங்கு எதுவென்று தெரியுமா? பொதுவாக, நாம் நினைப்பது எல்லாம் பசுவோட பால் தான். முந்தைய காலகட்டத்தில் இருந்தே பசுக்களை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பாலை வீட்டிற்கு எடுத்துக் கொண்டும் அதனை விற்றும் வந்தார்கள்.
இதனாலேயே பசுக்களை நாம் தெய்வமாக இன்று வரை வணங்கி வருகிறோம். ஒரு பசு ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பால் கொடுக்கும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கொடுக்கப்படும் தீவனம், அது எந்த வகையான இனம், அதோடு பராமரிக்கப்படும் சுற்றுச்சூழல் இதன் அடிப்படையில்தான், ஒரு பசுவால் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பால் கொடுக்க முடியும் என்பதை நாம் கூற முடியும்.
நம்முடைய நாட்டு மாட்டு இனங்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2லிருந்து 5 லிட்டர் வரை பால் கொடுக்கும். அதேபோல், இந்தியாவிலேயே அதிகளவு பால் கொடுக்கும் பசு என்றால் அது ‘கீர்’ என்ற இனத்தைச் சேர்ந்த பசுதான். இந்தப் பசுக்கள் பெரும்பாலும் குஜராத் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இது ஒரு நாளைக்கு 12 லிட்டரில் இருந்து 20 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன.
இதைவிட ஒரு படி மேலாக, உலகத்திலேயே அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எதுவென்றால், நெதர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட Holstein Friesian என்ற பசுதான். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 லிட்டரிலிருந்து 30 லிட்டர் வரை பால் கொடுக்குமாம். ஒரு நாளைக்கு ஒரு பசு 30 லிட்டர் வரை பால் கொடுக்குமாம் என்று நினைக்கும்போது, அதைவிட மிஞ்சும் அளவிற்கு, குஜராத்தில் காணப்படக்கூடிய கீர் என்ற இனத்திற்கும், நெதர்லாந்து நாட்டின் Holstein Friesian என்ற இனத்திற்கும் இடையே கலப்பினம் செய்யப்பட்டு, அதிலிருந்து பிறக்கும் பசுவிற்கு சரியான தீவனம், பராமரிப்பு எல்லாம் முறையாகக் கொடுக்கப்பட்டு, ஒரு நாளைக்கு அந்தக் கலப்பின பசுவில் இருந்து 123.61 லிட்டர் பால் கறக்கப்பட்டன. இதுவே கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடிக்கவும் காரணமாகின்றன.
சரி, இப்போது உலகத்திலேயே அதிக அளவு பாலை கொடுக்கின்ற விலங்கு எதுவென்று பார்த்தால், அது திமிங்கலம்தான். ‘என்னது திமிங்கலமா? திமிங்கலத்தோட பால் தண்ணீரில் கரைந்து விடுமே, அது எப்படி சாத்தியம்?’ என்று நமக்குள் கேள்வி எழும்பலாம். ஆமாம், உண்மையிலேயே ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலை கொடுக்கின்றன இந்த திமிங்கலம். திமிங்கலம் வெறும் கடல் வாழ் உயிரினம் மட்டுமல்ல, அது ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது.
திமிங்கலத்தின் பாலில், கொழுப்பு 35 முதல் 50 சதவிகிதம் வரை காணப்படுகிறது. இதனால் இந்தப் பாலானது அடர்த்தியாகவும், கட்டியாகவும் டூத் பேஸ்ட் போல் காணப்படும். இதனால் அவ்வளவு எளிதாக தண்ணீரில் இந்தப் பால் கரைந்து விடுவதில்லை. குட்டிகளுக்கு பால் தேவைப்படும் பொழுது மட்டுமே பால் சுரப்பி காம்புகள் திமிங்கலத்திற்கு வெளியே தென்படும்.
திமிங்கலம் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனத்தை சேர்ந்தவை. இதுதான் உலகத்திலேயே ஒரு நாளைக்கு 200 லிட்டர் என்ற அதிக அளவு பால் கொடுக்கும் விலங்கினமாகும்.
