

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று அதிக மாசடைந்துள்ளது. மூடுபனி, புகைமூட்டம் மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவை தேசத் தலைநகரை மூச்சுத் திணற வைக்கிறது. அதிகரித்துள்ள டெல்லியின் மாசுபாட்டைக் குறைக்க உத்தரப்பிரதேச அரசும், ஐஐடி கான்பூரும் இணைந்து மேக விதைப்பு மூலம் செயற்கை மழையைத் தூண்ட திட்டமிட்டு பணிகளை செயல்படுத்தினர். முதலில் கடந்த வெள்ளிக்கிழமை வானில் மேக விதைப்பு நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் டெல்லியில் மழையை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
செயற்கை மழை பல நாடுகளில் பலனளித்துள்ளபோதும் டெல்லியில் ஏன் மழை பொழியவில்லை என்ற கேள்விகள் எழத் தொடங்கின. முதலில் மேக விதைப்பு என்பது மேகங்களுக்குள் சிறிய ரசாயனங்களைத் தூவி, அவற்றை குளிர்வித்து மழையை வரவழைக்கும் ஒரு தொழி்நுட்பம். இதற்காக விமானத்தைப் பயன்படுத்தி, மேகங்களுக்குள் சில்வர் அயோடைடு (AgI) தூவி மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து, மழையை பொழிவிக்க முயற்சி செய்தார்கள். தற்போது இந்த முயற்சி பலனளிக்காததால், அதற்கான காரணங்களை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.
டெல்லியில் இருந்த மேகங்களில் ஈரப்பதம் 15 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது. பொதுவாக, மேக விதைப்பு மூலம் மழை பெய்ய மேகங்களுக்கு குறைந்தது 40 முதல் 50 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். இங்கு ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது, மேகங்களால் கனமான நீர்த்துளிகளை உருவாக்க முடியாது. மேலும், மழை செயல்முறை முழுமையடையாது. எனவே, மேக விதைப்பு இருந்தபோதிலும், மழை பெய்யவில்லை. இந்த சூழலில், மழை பொழியாததற்கு முக்கியக் காரணம் மேகங்களில் ஈரப்பதம் குறைவாக இருந்ததே என்று ஐஐடி கான்பூரின் இயக்குநர் மணிந்திர அகர்வால் கூறியுள்ளார்.
செயற்கை மழை பெய்யாவிட்டாலும் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஓரளவிற்கு நிறைவேறி உள்ளது. குளிர்காலத்தில் டெல்லி போன்ற மாசுபாடு நிறைந்த பகுதியில் காற்றை சுத்தம் செய்ய மேக விதைப்பு பயன்படுத்தப்பட்டது. இதுவே முதல் முறை. இந்தச் செயல்பாட்டின்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மாசு அளவை அளவிடுவதற்கான கருவிகள் நிறுவப்பட்டன. மேக விதைப்பு நடந்த பகுதிகளில், PM 2.5 மற்றும் PM 10 போன்ற மாசுபடுத்தும் துகள்களின் அளவில் சுமார் 10 சதவீதம் குறைந்தது கண்டறியப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் டெல்லியின் காற்று மாசுபாட்டை குறைப்பதுதான். ஆனால், அது ஓரளவு நிறைவேறி உள்ளது. அதனால் இந்தப் பரிசோதனையை முழுமையான தோல்வியாகக் கருதுவது நியாயமற்றது என்று ஐஐடி இயக்குனர் மணிந்திர அகர்வால் கூறினார்.
இந்த நேரத்தில் மேக விதைப்பு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. சில்வர் அயோடைடு மேகங்களின் மூலம் பரவுவதால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயினும், மேக விதைப்புக்கு பயன்படுத்தப்பட்ட அளவு மிகவும் சிறியது என்பதால் சுற்றுச்சூழலுக்கும் மனிதருக்கும் தீமை செய்யாது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு கிலோ வெள்ளி அயோடைடு சுமார் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது, இதனால் தீங்கு ஏற்படவில்லை என்று மணிந்திர அகர்வால் விளக்கியுள்ளார்.
இந்த சோதனையின் மூலம் விஞ்ஞானிகள் மேலும் புதிய விஷயங்களை அறிந்துக் கொண்டு எதிர்காலத் திட்டத்திற்கு தயாராக முடியும். டெல்லியில் மழை பெய்யவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் சேகரித்த தரவுகள் எதிர்காலத்தில் இந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்த உதவும். எதிர்காலத்தில் டெல்லியின் மேகங்களில் அதிக ஈரப்பதம் இருந்தால், மேக விதைப்பு மூலம் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.