நாய், ஆடு, மாடு போலவே லாமாவும் (Llama) உலகின் மிகப் பழைமையான வளர்ப்பு மிருகங்களில் ஒன்றாகும். சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் பெரிய சமவெளியில் தோன்றி 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தன. இவை புத்திசாலி விலங்குகள். பயிற்சி அளிக்க ஏற்றவை. 1980களிலிருந்து கால்நடைகளுக்கு பாதுகாப்பு விலங்குகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதி சுமக்கும் விலங்குகள்: இவை சிறந்த பொதி சுமக்கும் விலங்குகள். தம் உடல் எடையில் 25லிருந்து 30 சதவீதம் வரை பொருட்களை சுமந்து செல்லக்கூடிய திறன் பெற்றவை. குறிப்பாக, மலையேற்றப் பகுதிகளில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்றவை. தங்கள் உடலில் அதிக அளவு எடை கொண்ட பொருட்களை வைத்தால் நகர மறுத்து அவை படுத்துக்கொள்ளும்.
கால்நடைகளின் பாதுகாவலன்: இவற்றை வீட்டு விலங்குகளாக பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்த்து வருகிறார்கள். செம்மறியாடுகள் போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, பிற விலங்குகள் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. நீண்ட காதுகளும், பிரகாசமான கண்களும், உறுதியான கால்களும் கொண்டவை. மென்மையான பட்டைகள் கொண்ட இரண்டு கால் பாதங்களைக் கொண்டிருக்கின்றன. பாறை நிலப்பரப்பில் செல்வதற்கு உதவியாக இருக்கின்றன. மேலும், மலை வாழ்விடத்திற்கும் பொருத்தமாக இருக்கின்றன.
ஆடைகளுக்காக வெட்டப்படும் பரிதாபம்: உடலைச் சுற்றி கம்பளி போன்ற தடிமனான சூடான தோல் உள்ளது. இவற்றை ஆடை மற்றும் ஜவுளிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை இதற்காக இவற்றை வெட்டுவது பரிதாபத்திற்குரியது. இவற்றின் உரோமங்களில் இருந்து தயாரிக்கப்படும் நூல் மென்மையானது. இலகு ரக ஆடைகளுக்கு ஏற்றவை. மென்மையான அண்டர் கோட் ஆடைகள் மற்றும் கைவினைப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. உடலின் கோட் போன்ற அமைப்பு விரிப்புகள் மற்றும் கயிறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஒட்டகங்களுக்கும் லாமாக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்: லாமாக்கள் ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்காவிலும் கனடாவிலும் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் லாமாக்கள் உள்ளன. இவை ஒட்டகங்களை விட சிறியவை. ஐந்தரை அடி முதல் 6 அடி உயரம் வரையும், 250 முதல் 450 பவுண்டுகள் வரை எடை உள்ளதாக இருக்கும். மாறாக, ஒட்டகங்கள் 6 அடிக்கு மேல் உயரமும் 1800 பவுண்டுகள் வரை எடையும் இருக்கும். ஒட்டகங்களை போல எந்த கூம்பும் இவற்றின் உடலில் இல்லை.
ஒட்டகங்களுக்கு கரடு முரடான முடி உண்டு. லாமாக்களுக்கு மென்மையான கம்பளி கோட்டு போன்ற உடலமைப்பு உண்டு. ஒட்டகங்கள் வறண்ட சூழலில் உயிர் வாழும். முட்கள் நிறைந்த தாவரங்களை உண்ணும். ஆனால், லாமாக்கள் புல், தானியங்கள் மற்றும் பிற தாவரப் பொருட்களை உட்கொள்ளும், ஒட்டகங்களை விட லாமாக்கள் மிகவும் நேசமானவை. குறைவான ஆக்ரோஷத்தன்மை நிறைந்தவை. மென்மையான நடத்தைக்குப் பெயர் பெற்றவை.
விந்தையான பழக்கம்: லாமாக்கள் ஒரு விந்தையான பழக்கம் கொண்டவை. இவை தங்கள் மந்தைக்குள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும், மோதல்களைத் தீர்ப்பதற்காகவும் பிற லாமாக்கள் மீது எச்சில் துப்புகின்றன. ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தவும், உணவு, பிரதேசம் தொடர்பான சர்ச்சைகளின்போதும் எச்சில் துப்புகின்றன. இது அவர்களின் மந்தைக்குள் சமூக ஒழுங்கை பராமரிக்க உதவுகின்றன. மேலும், இது கோபமாக இருக்கும்போதும் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கான ஒரு வழியாகவும் இதை செய்கின்றனர். இந்த எச்சில் பச்சை நிறமாகவும் 10 அடி உயரம் வரையும் செல்லும்.