அதிக கால்கள் கொண்ட உயிரினம் பற்றி கேள்விபட்டிருப்போம். பொதுவாக அதிகமான கால்கள் என்றால், நம் நினைவுக்கு வருவது மரவட்டைகள்தான். அந்தவகையில் அதிக மூளைகள், வயிறுகள் மற்றும் பற்கள் கொண்ட உயிரினத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் வெவ்வேறு அழகழகான உடல்களை வடிவமைத்திருக்கிறது. உலகில் வாழும் எண்ணற்ற உயிரினங்களில் நாம் பார்த்த அளவு மிகவும் குறைவே. நமக்கு பொதுவாக ஒரு உயிரினத்திற்கு இரண்டு கால்கள், இரண்டு கைகள், அல்லது நான்கு கால்கள், ஒரு மூளை, ஒரு இதயம் என இது போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டிருப்போம்.
அப்படியிருக்க ஏராளமான மூளைகள், பற்கள், வயிறுகள் கொண்ட உயிரினத்தைதான் இப்போதுபார்க்கவுள்ளோம்.
அந்த உயிரினத்தின் பெயர் லீச். அட்டைகள் annelids வகையைச் சார்ந்தவை. இதில் சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகும். அட்டை குளம், குட்டை, ஆறு ஆகியவற்றிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும். அன்னெலிடா (Annelida) என்னும் வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. சில அட்டைகள் மண்புழு, பூச்சிகள் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் சாப்பிடுகின்றன. அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும்.
மிகவும் சிறிய உயிரினமான அட்டைகளின் உடல் 32 பிரிவுகளாகப் பிரிந்து இருக்கும். அந்த ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மூளை இருக்கும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மூளை இருக்கும் என்று சொல்வதைவிட, ஒரு மூளை ஒவ்வொரு பிரிவிலும் பிரிந்து இருக்கிறது என்று சொல்லலாம். இது தன்னுடைய அனைத்து மூளை பிரிவுகளையும் முழுமையாக பயன்படுத்தும்.
ஆகையால் அதன் உடம்பு முழுவதும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு மூளை இருக்கும் என்ற கணக்கிலேயே மூளைகள் எண்ணப்படுகின்றன. பொதுவாக நாம் நண்பர்களை கேலி கிண்டல் செய்யும்போது உடம்பு முழுவதும் மூளை உள்ளவனே என்று சொல்வோம். ஆனால், உண்மையிலேயே அட்டைகளுக்கு உடம்பு முழுக்க மூளை இருக்கிறது.
அதேபோல் அட்டைக்கு மூன்று தாவாங்கட்டைகள் இருப்பதால், ஒவ்வொரு தாவாங்கட்டைக்கும் 100 பற்கள் இருக்குமாம். அப்படியென்றால், மொத்தம் 300 பற்கள் கொண்ட உயிரினமும் இதுதான். மேலும், ஐந்து ஜோடி கண்கள் மற்றும் 10 வயிறுகளும் உள்ளன. ஆகையால், விசித்திரமான உயிரினங்களில் இதுவும் ஒன்று.