நீங்கள் ஒரு வனத்துறை ரேஞ்சராக பணியாற்றுகிறீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களது பணி முடிந்து மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் காட்டில் ஒரு அசாதாரண காட்சி உங்கள் கண்ணில் படுகிறது. முதலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை என நினைக்கிறீர்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று பார்த்தல், ஒரு ராட்சச அளவிலான சிங்கம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போகிறீர்கள். இந்த சிங்கம் அதன் சராசரி அளவைவிட மிகப்பெரியதாக இருக்கிறது. அதன் வயிறு, கால்கள் என அனைத்துமே வீங்கிப்போய் கொழு கொழுவென இருக்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
சவன்னாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்த உண்மை நிகழ்வுதான் இது. முதலில் அந்த ராட்சச சிங்கத்தை கண்ட ஜார்ஜ் என்கிற ரேஞ்சர், அதன் உடல்நிலை குறித்து கவலை கொண்டார். ஏனெனில் அந்த சிங்கத்தின் பெருத்த உடல் இயற்கையாக வந்ததல்ல, காட்டு விலங்குகளை வேட்டையாடுபவர்களால் ஏற்பட்டது. உடனடியாக உள்ளூர் கால்நடை மருத்துவரைத் தொடர்பு கொண்டு சிங்கத்தை பரிசோதித்துப் பார்த்தனர்.
பின்னர், அல்ட்ரா சவுண்ட் முறையில் சிங்கத்தின் வயிற்றை ஸ்கேன் செய்தபோது அனைவருமே அதிர்ந்து போனார்கள். சிங்கத்தின் வயிற்றில் செரிக்காத பெரிய அளவு இறைச்சிச் துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிங்கத்திற்கு கடுமையான வீக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. சிங்கத்தின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த இறைச்சித் துண்டு நீக்கப்பட்டது. அந்த இறைச்சி தூண்டின் உள்ளே, சிங்கத்தைக் கண்காணிக்க வேட்டையாடுபவர்களால் ஒரு மின்னணு சிப் பொருத்தப்பட்டிருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
ஏன் சிங்கங்களை வேட்டையாடுகின்றனர்?
மற்ற விலங்குகளைப் போலல்லாமல் சிங்க வேட்டை என்பது பல நோக்கங்களைக் கொண்டதாகும். குறிப்பாக சிலருக்கு காட்டின் அரசனான சிங்கத்தை வேட்டையாடுவது கௌரவத்தைக் கொடுக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சியை உள்ளடக்கியது. இத்தகைவர்கள் சிங்கத்தை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை பிறருக்கு காட்சிப்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர்.
மறுபுறம், சிங்கத்தின் உடல் பாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கள்ளச் சந்தையில் சிங்கத்தின் உடல் உறுப்புக்கள் அதிக லாபத்திற்கு விற்பனையாவதாலும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் சிங்கத்தின் எலும்புகள், பற்கள் மற்றும் தோள்கள் உள்ளிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் பணம் ஈட்டி தரும் ஒன்றாக உள்ளன. இதன் காரணமாகவே சிங்கங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன.
சிங்கத்தை வேட்டையாடுபவர்களைத் தடுக்கும் யுத்திகள்:
முதலில் சிங்கங்கள் வேட்டையாடப்படுவதைத் தவிர்க்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்தி கடுமையான தண்டனைகளை விதிப்பது மூலமாக, இத்தகைய சட்டவிரோத வேட்டை நிகழ்வுகளைத் தடுக்கலாம்.
சிங்கங்களின் வாழ்விடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களாலும் அவற்றிற்கு முறையான பாதுகாப்பை வழங்க முடியும். சுற்றுச்சூழல் அமைப்பில் சிங்கங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை இவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமாக, இவர்களும் சிங்கத்தை வேட்டையாட மாட்டார்கள், அதேநேரம் மற்றவர்கள் வேட்டையாடவும் விடமாட்டார்கள்.
சிங்கங்கள் அவற்றின் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் போதுதான் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. எனவே அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது மூலமாகவும் சிங்க வேட்டையை நாம் தடுக்க முடியும். இதற்காக, சிங்கங்கள் தடையின்றி செழித்து வளரக்கூடிய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தேசியப் பூங்காக்களை அரசாங்கம் நிறுவ வேண்டியது அவசியம்.
வேட்டையாடுதலைத் தடுப்பதற்கு மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிர்வகிக்க வேண்டும். இத்தகைய திட்டங்களுக்கு போதுமான நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மக்கள் அரசாங்கம் என அனைவருமே ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே சிங்க வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.