
வெங்காயத்தாமரை அல்லது நீர் பதுமராகம் என்று அழைக்கப்படும் இவை, பல்லாண்டு வாழும் ஒரு மிதக்கும் நீர்வாழ் தாவரமாகும். தன்னகத்தே கொண்டுள்ள வெங்காயம் போன்ற அமைப்பினால் இவை வெங்காயத் தாமரை எனவும் அழைக்கப்படுகின்றன. இதை ஆங்கிலத்தில் water hyacinth எனவும் அழைக்கின்றனர். ஐக்கோர்னியா (ஐகோர்னியா கிராசிபஸ்), தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆக்கிரமிப்பு தாவரம். பிறகு அழகுக்காக வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவை தென் அமெரிக்காவிலுள்ள அமேசானைத் தாயகமாக கொண்டவை. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, கொல்கத்தாவிற்கு வருகைத் தரும்போது இதை கொண்டுவந்து ஊக்ளி நதியில் விட்டதாகவும், இவ்வூக்ளி நதியானது லண்டனில் உள்ள தேம்சு நதிப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக இடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் தண்டுகளில் காற்று நிரப்பட்டு இருப்பதால் இவை மிதப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. வெங்காயத்தாமரையில் பூக்கும் ஊதா நிறப்பூக்கள் பார்க்க அழகாக இருக்கும்.
நீர் நிலை அலங்கார தாவரமாகத்தான் இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியாக மிதக்கும் அடர்ந்த வேர்களும், பாதி மூழ்கிய இலைகளில் நத்தைகளும் உள்ளன. வெங்காயத்தாமரை வருடம் முழுவதும் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள வெங்காயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும்.
அதாவது இதை அழித்து விட்டாலும் அதன் விதை மூலம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் வளரத்தொடங்கும். இது விதை மற்றும் தாவர பரவல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. நல்ல சூழ்நிலையில் இது 6-18 நாட்களுக்குள் இரட்டிப்பாகும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். இந்த விரைவான வளர்ச்சி மற்றும் பரவல் இதை கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.
தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.
இவை கழிவுநீரில் வளரக்கூடியவை. மாசுபாடுகளை உறிஞ்சி ஜீரணித்து, கழிவுநீர் கழிவுகளை ஒப்பீட்டளவில் சுத்தமான நீராக மாற்றும். இதன் விளைவாக, இந்த தாவரங்கள் ஒரு நிலையான இயற்கை நீர் சுத்திகரிப்பு அமைப்புகளாகப் பயன்படுத்தப்படும் திறனைக் கொண்டுள்ளன.
சில நேரங்களில் இவை விலங்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், வெங்காயத்தாமரை தண்ணீரிலிருந்து நச்சுகள் மற்றும் மாசுபடுத்திகளை உறிஞ்சி, நுகர்வுக்கு பாதுகாப்பற்றதாக மாறுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது பொதுவாக பாதுகாப்பான உணவு ஆதாரமாகக் கருதப்படுவதில்லை மற்றும் இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும். இது ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் கொண்டிருக்கலாம். அதுமட்டுமின்றி இதை உட்கொண்ட பிறகு சிலர் இரைப்பை குடல் கோளாறுகளை அனுபவிக்கலாம். ஆனால் இதை வியட்நாம் மற்றும் தைவான் போன்ற சில கிழக்கு ஆசிய நாடுகளில், சாலட் அல்லது காய்கறிகளுடன் சமைத்து சாப்பிடுகின்றனர்.
இது பெரும்பாலும் பசுந்தாள் உரம், தழைக்கூளம் அல்லது மண் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தண்டுகளை பயன்படுத்தி கூடைகள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களாக நெய்யலாம்.
தீமைகள் :
* குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
* கோடை காலத்தில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
* அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறாக உள்ளன.
* நீர் நிலைகளில் ஆக்சிஜனின் அளவை குறைக்கிறது. இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
* இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
* நோயை உருவாக்கும் கொசுக்களின் (குறிப்பாக அனோபிலிஸ்) இனப்பெருக்கம் செய்யும் உறைவிடமாக அமைகிறது. இதனால் மனித உடல்நலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
* பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது. ஆழ்பகுதிக்கு சூரிய ஒளி ஊடுருவதை தடை செய்வதோடு, நீர் வழிகளுக்கு இடையூறாகவும், விவசாயம், மீன் பிடித்தல், நீர்மின்சார உற்பத்தியையும் பாதிக்கிறது.
* இதன் அதிவேக வளர்ச்சி உயிரினங்களின் இழப்பிற்கு காரணமாகிறது. தாவர மிதவை உயிரினங்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு, இறுதியாக நீர் சூழல் மண்டலத்தையே இந்த தாவரம் மாற்றி விடுகிறது.