பொன்வண்டு - கொடுக்காப்புளி மரம்; என்ன கனெக்ட்?

Ponvandu
Ponvandu

இயற்கையின் அற்புதப் படைப்புகளில் ஒன்றான பொன்வண்டு குறித்த நினைவலைகளைப் பகிர்கிறது இந்தப் பதிவு.

காணக் கிடைக்காத அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக மாறி விட்டது பொன்வண்டு. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கூட பொன்வண்டுகளை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது இதனைக் காண்பது அரிதிலும் அரிது.

கொடுக்காப்புளி மரம் தான் அதிகளவில் பொன்வண்டுகளின் இருப்பிடமாக இருந்தது. இன்றோ கொடுக்காப்புளி மரத்தையும் காணோம்; பொன்வண்டுகளையும் காணோம். அப்படியே பொன்வண்டுகள் கண்ணில் பட்டால் கூட எங்கோ ஓரிடத்தில் ஒன்றோ இரண்டோ தான் கண்களில் தென்படுகிறது.

பொன்வண்டுவின் முதுகுப்புறத்தில் உலோகம் போன்ற தங்க நிறத்திலான ஓடு மின்னுவதைப் போல் இருக்கும். இது ஒன்றே போதும் இதன் அழகை எடுத்துரைப்பதற்கு. இதற்கு பொன்வண்டு என்ற பெயர் வந்ததற்கு காரணமும் இந்தப் பொன்னிற ஓடு தான். மேலும் இந்த பொன்வண்டுகள் மெல்லிய இரு கால்களால் நகர்ந்து செல்லும் அழகும், இறக்கைகள் கொண்டு பறக்கும் அழகும் காண்போரை கவர்ந்திழுக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதனுடைய முட்டை, கோழி முட்டையைப் போல் கோள வடிவத்தில் இருந்தாலும் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும்.

அடிக்கடி பொன்வண்டைத் தேடி கொடுக்காப்புளி மரத்திற்கு அருகே எத்தனை நாட்கள் சென்றிருப்போம். பொன்வண்டைப் பிடிக்கவே மரத்தில் ஏறி விளையாடிய நாட்கள் எல்லாம் இப்போது நினைக்கையில் வரப்பிரசாதமாகத் தான் தெரிகிறது. பொன்வண்டைப் பிடித்து அதன் கழுத்தில் சிறு கயிறைக் கட்டி எங்கும் பறக்காதவாறு நம்முடனேயே வைத்துக் கொண்ட அந்த நாட்களை எப்படி மறக்க முடியும். நம்மோடு வைத்திருக்கும் போது நம் கைகளில் பொன்வண்டு நடந்து சென்ற நொடிகளில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்போம்.

வண்டுகளில் பல வகைகள் இருந்தாலும், எவற்றின் மீதும் இல்லாத ஆசை பொன்வண்டின் மீது மட்டும் எப்படி உருவானது தெரியுமா? இதற்கெல்லாம் காரணம் இதன் பெயர் மட்டுமல்ல, பார்த்தவுடனே நம்மை அறியாமல் ஒருவித ஈர்ப்பை அது ஏற்படுத்தி விடுவதும் தான். அதோடு பொன்னிறத்திலான இதன் மேற்புற ஓடுகளின் அழகு காண்பவரை தன்பக்கம் இழுக்கத் தவறாது.

இதையும் படியுங்கள்:
இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா?
Ponvandu

1990-களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கடைசியாக பொன்வண்டுகளை கைகளில் ஏந்தும் பாக்கியம் கிடைத்திருக்கிறது போல. அதன் பிறகு தான் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில், இயற்கையை மெல்ல மெல்ல அழித்து வருகிறோமே! இதிலிருந்து பொன்வண்டு மட்டும் தப்புமா என்ன!

இன்றைய காலகட்டத்தில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக பொன்வண்டும் உள்ளது. அன்றைய காலத்தில் நேரில் கண்டு மகிழ்ந்த உயிரினங்களை இன்று புகைப்படத்தில் மட்டுமே காண முடிகிறது என்றால், இயற்கை எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இனி எப்போதாவது பொன்வண்டைக் காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், நிச்சயம் அதன் அழகை ரசித்து விட்டுச் செல்லுங்கள். அதற்கு பிறகு பொன்வண்டைக் காண உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ... யாருக்குத் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com