
ஆக்ரோஷமானது, குரூரமானது என்று பெயர் பெற்ற கழுதைப்புலி பாலூட்டிகளிலேயே அதிக ஆதிக்க மனப்பான்மையுடன் உள்ள மிருகமாகும். ஆண் கழுதைப் புலிகளைவிட பெண் கழுதைப்புலிகள் அளவில் பெரியதாக இருக்கும். சின்ன சின்ன குழுக்களாக வாழும் இவற்றில் பெண் கழுதைப்புலிகள்தான் தலைவியாக செயல்படும்.
இதன் கூர் விழிகள், கோரைப்பற்கள், தடித்த நாக்கு, கரும்புள்ளிகள் கொண்ட பழுப்பு நிறத்தோல், ரோமம் போன்றவை காண்போரை கதிகலங்கச் செய்துவிடும். ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் கழுதைப்புலிகள் அவற்றின் மீதுள்ள வரிகளைப் பொறுத்து நான்கு வகைகள் உள்ளன. அராட்வுல்ஃப், ஸ்ரைஃப்டு ஹைனா, பிரவுன் ஹைனா, ஸ்பாட்டட் ஹைனா என இனம் பிரிக்கப்பட்டுள்ளன.
அழிந்து வரும் மாமிசபட்சியான இவை பறவைகள், பாம்பு போன்ற ஊர்வனவற்றையும், சிறு விலங்குகளையும் வேட்டையாடி உண்ணக்கூடியவை. பொதுவாக விலங்குகள் மனிதர்களைப்போல சத்தமாக சிரிக்காது. ஆனால் இந்த கழுதைப்புலிகள் அடிவயிற்றில் இருந்து வாய்விட்டு சிரிக்கும் குணம் கொண்டவை. இவற்றின் சிரிப்பு சத்தம் மனிதர்களைப்போல விழுந்து விழுந்து சிரிப்பது போல இருந்தாலும் அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் இப்படி சத்தத்தை எழுப்பு வதில்லை, பல காரணங்களுக்காகவும் இப்படி ஒலி எழுப்பும்.
அதிக டெசிபல் ஒலி எழுப்பும் விலங்குகளுள் கழுதைப்புலிகளும் ஒன்று. இவை எழுப்பும் சத்தம் நெடுந்தூரம் வரை கேட்கும் சக்தி பெற்றவை. சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகள் தாக்க வரும் சமயத்தில் அவற்றை எச்சரிக்கும் விதத்தில் இவை இவ்விதமான சிரிக்கும் ஒலியை எழுப்பும். அதேபோல் இரையைக் கண்டால் தன்னுடைய கூட்டாளிகளுக்கு தகவல் அளிக்கவும், பயம், பதற்றம், கோபத்தை வெளிப் படுத்தவும் இவ்வாறு சத்தம் எழுப்புகின்றன.
உடலில் புள்ளியிட்ட, கோடுகள் உள்ள, பழுப்பு நிற மற்றும் அராட்வுல்ஃப் என்ற நான்கு வகையான கழுதைப் புலிகளில் புள்ளியிட்ட இனத்தைச் சேர்ந்த பெண் கழுதைப்புலிகள் மிகவும் ஆக்ரோஷமாகவும், ஆதிக்க மனப்பான்மை நிறைந்தும் காணப்படும்.
இவற்றின் பிரசவம் அறிவியலாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இவற்றின் பிரசவம் பெரும் போராட்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். 110 முதல் 120 நாட்கள் வரை கருவை சுமக்கும் இவை பிரசவங்களில் தப்பிப் பிழைத்தால் இவை 20-25 வயது வரை வாழும்.
பெண் கழுதைப்புலிகளுக்கு தனியாக பெண்ணுறுப்பு கிடையாது. பெண்ணின் உடலில் ஆணுக்கான ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் அவற்றின் போலியான ஆணுறுப்பின் வழியாகவே பிரசவிக்கும். ஒரு பிரசவத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் கண்களைத் திறந்தபடியே பிறக்கும்.
குட்டிகளும் பிறக்கையிலேயே ஆக்ரோஷமாக இருக்கும். இதற்குக் காரணம் தாய் கழுதைப்புலியின் உடலில் இருந்து குட்டிகளுக்கு கடத்தப்படுகிற ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள்தான். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கின்றன.
இவை அழிந்து வருவதற்கான முக்கிய காரணங்கள், இவ்விலங்கு காடுகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள கால்நடைகளை தாக்குவதால் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. அத்துடன் இவ்விலங்கின் உடல் உறுப்புகள் மருத்துவகுணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கை காரணமாகவும் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடப்படுகின்றன. இதன் வாழ்விட சீர்கேடுகளும் இவ்விலங்கின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகிறது.