

இந்திய டெக்டோனிக் தட்டு தற்போது இரண்டாக பிளவுபட தொடங்கி இருப்பதாக, புவியியலாளர்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த தகவல் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுக்கும். இந்த பிரம்மாண்டமான புவியியல் நிகழ்வு, துணைக்கண்டத்தின் புவியியல் அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
சுமார் 6 மில்லியன் ஆண்டுகளாக இந்தியத் தட்டானது யூரேசியத் தட்டுடன் தொடர்ந்து மோதி வருகிறது. இந்த மோதலில்தான் உலகின் மிக உயரமான இமயமலைத் தொடர் உருவாகியுள்ளது. இதனால் இமயமலைப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்துகிறது. புதிய ஆய்வின் முடிவுகள்படி, இந்தியத் தட்டின் கனமான அடிப்பகுதி உடைந்து, பூமியின் கவசத்தில் (Mantle) கீழ்நோக்கி மூழ்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறது.
ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு:
திபெத்திய பீடபூமியின் நீரூற்றுகளில் இருந்து பெறப்பட்ட நில அதிர்வு அலைகள் மற்றும் ஹீலியம் வாயுவின் மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்திய தட்டின் ஒரு பகுதி உடைந்து வருவதைக் கண்டுபிடித்தனர். இதில் இரண்டாக பிரியும் தட்டின் ஒரு பகுதி கீழே செல்கிறது, தட்டின் மேலடுக்கு மட்டும் யூரேசியத் தட்டுடன் மோதி மலைகளைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
இதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
இந்திய தட்டு பிளவுபடுவது பெரும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இதன் தாக்கங்கள் பிராந்தியம் முழுவதும் நிலநடுக்கச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். ஏற்கனவே திபெத்திய பீடபூமி அதிக பூகம்பங்களால் பாதிக்கப்படும் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ஆய்வு பற்றி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளரான சைமன் கிளெம்பரர், "டெக்டோனிக் தட்டுகள் மோதும் இடங்களில், இந்த வகை பிளவுகள் ஏற்படுவது பொதுவானது விஷயம்தான். ஆனால், இங்கிருக்கும் அழுத்தம் அதிகம். இவை தட்டுகள் உடைந்து செல்வதையும், மேற்பரப்புப் பிளவுகளில் அதிக அழுத்தத்தையும் உருவாக்கி, நிலநடுக்க அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது" என்று எச்சரிக்கிறார்.
இந்த ஆய்வை பற்றி மோனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஃபேபியோ கேபிடானோ ஆறுதலான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். " இந்த ஆய்வு முடிவுகள், ஒரு சிறிய கண்ணோட்டம் மட்டுமே, இந்தியத் தட்டு பிளவின் நீண்டகால தாக்கத்தை அறிய இன்னும் நிறைய தரவுகள் தேவை," அதனால், யாரும் பீதியடைய தேவையில்லை என்று கூறுகிறார்.
இந்த ஆய்வின் முக்கியத்துவம்:
இந்தியத் தட்டு பூமியின் உள்ள நிலத்தட்டுகளின் அமைப்பின் முக்கியமான பகுதியாகும். இந்தியத் தட்டினை வைத்து, உலகம் முழுவதும் டெக்டோனிக் தகடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி அறிய முடியும். இந்த ஆய்வு உறுதிப் படுத்தப்பட்டால், மலைத் தொடர்கள் எவ்வாறு உருவாகின்றன, பூமியின் நில அமைப்பு, எவ்வாறு காலப்போக்கில் நகர்கிறது? என்பது குறித்த நமது புரிதலில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
இப்போது விஞ்ஞானிகள் உலகின் பிற கண்டங்களிலும் இதேபோன்ற தட்டு பிளவடைவதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்தியத் தட்டின் பிளவுகள் பற்றிய ஆய்வு, எதிர்காலத்தில் உலகளாவிய பூகம்ப அபாயங்களை மதிப்பிடுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.