தற்பொழுது செயற்கை சாயங்களை விட இயற்கையாக மரங்களில் இருந்து பெறப்படும் சாயங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காமலும், மனிதர்களுக்கு உடற்கேடுகளை ஏற்படுத்தாமலும் இருப்பதால் மரங்களில் இருந்து பெறப்படும் சாயத்தின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அந்த மரங்கள் என்னென்ன? அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
சாய மரங்களில் முக்கியமாக கருதப்படும் மரங்கள் பிக்ஸா மற்றும் பதிமுகம்.
பிக்ஸா:
Bixa orellana என்பது இதன் அறிவியல் பெயர். தமிழில் வருக மஞ்சள், மந்திர வஞ்சி என்று அழைக்கப்படுகிறது. பிக்கேஸியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது இந்த மரம்.
சிறப்பியல்பு:
இந்த மரம் பசுமை மாற தன்மை கொண்ட சிறிய வகை மரம் ஆகும். இரண்டு முதல் எட்டு மீட்டர் உயரம் வரையும் 10 சென்டிமீட்டர் விட்டம் வரையிலும் வளரக்கூடிய இதன் பட்டை வெளிர் கலந்த அடர் பழுப்பு நிறத்திலும், வைரக் கட்டையானது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
வெப்பம் மற்றும் துணை வெப்பமண்டலங்களில் நன்கு வளரக்கூடிய மரமாகும். இம்மரத்தின் பூக்களில் தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெற்று ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பின் பழங்கள் உருவாகின்றன. விதைகள் மூலம் செடிகளில் உற்பத்தி செய்வதை விட கரணைகள் (Vegetative propagation) மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்வது சிறந்தது.
மண்:
கார- அமிலத்தன்மை கொண்ட மண்ணுக்கு மிகவும் ஏற்ற மரமாகும். இலைகள் அடர் பச்சை நிறமேற்பகுதியையும், பழுப்பு கலந்த பச்சை நிற கீழ்ப் பகுதியையும் பெற்று காணப்படுகின்றன.
பூக்கள் மற்றும் காய்கள்:
கொத்தாக பூக்கும் தன்மை உடைய இம்மரத்தில் பூக்கள் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டு முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமும் இரண்டு முதல் 35 சென்டிமீட்டர் அகலமும் உடைய காய்களில் எண்ணற்ற விதைகள் காணப்படுகின்றன. இவ்விதைகள் 35-45 மில்லி மீட்டர் நீளமுடையவையாகவும் ஆரஞ்சு கலந்த சிவப்பு போர்வையினால் வெளிப்புறத்தில் சூழப்பட்டுள்ளன.
விதை- அறுவடை வழிகள்:
ஆண்டொன்றுக்கு ஒரு மரத்திலிருந்து நாலு முதல் ஐந்து கிலோ விதைகளை அறுவடை செய்யலாம். விதைகளை பத்து சதவீத ஈரப்பதத்தில் சேமித்து வைத்தால் அதன் முளைப்பு திறனை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
3×3 மீட்டர் இடைவெளியில் குழிகள் தோன்றி நாற்றுகளை குழியின் மையப் பகுதியில் நட வேண்டும். நட்டபின் முதல் ஆறு மாதங்களுக்கு வாரம் ஒரு முறையும், பின்னர் மாதம் ஒன்றுக்கு மூன்று முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மரங்களைக் கவாத்து செய்வதன் மூலம் பக்க கிளைகளின் எண்ணிக்கையை அதிகரித்து மகுசூலை பெருக்கலாம். செடிக்கு 10 கிலோ தொழுஉரம், 50 கிராம் தழைச்சத்து, 100 கிராம் மணி சத்து மற்றும் 60 கிராம் சாம்பல் சத்து ஆகிய உரங்கள் ஆண்டு தோறும் இடுதல் வேண்டும்.
பயன்கள்:
சாயப்பொருள்:
இவ்விதையைச் சுற்றி உள்ள கூழ்மமான உறையிலிருந்து சாயப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையான சாயம் பொருட்கள் வர்ணங்கள் மற்றும் நெசவுத்தொழில்களில் பயன்படுகின்றன. குறிப்பாக ஒப்பனைப் பொருட்கள் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகின்றன.
எண்ணெய்:
விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் வாசனை நிரம்பியதாக உள்ளது.
பதிமுகம்:
பதிமுகம் மரத்தின் பூக்கள் வாசனை நிரம்பியதாகவும் இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீளம் வரையிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.
மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படும் மண் வகைகளுக்கு ஏற்ற மரம் ஆகும்.
பயன்கள்:
பதிமுக மரக்கட்டைகளில் இருந்து மதிப்பு மிக்க சிவப்பு நிற சாயமானது பெறப்படுகின்றது. இவ்வகை சாயமானது பட்டு மற்றும் பருத்தி ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
பதிமுக மரத்தின் பட்டை மற்றும் காய்களில் இருந்தும் சிவப்பு நிற சாயப் பொருட்கள் பெறப்படுகின்றன.
இலைகளில் இருந்து வாசனை நிரம்பிய எண்ணெய் பெறப்படுகின்றது.
இவ்வகை சாயப் பொருட்கள் இயற்கையாகவே மக்கும் தன்மையை பெற்றிருப்பதால் எவ்வித பாதிப்பையும் மண்ணுக்கு ஏற்படுத்துவதில்லை. ஆகையால் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாய மரங்கள் இவை இரண்டும்.